full screen background image

கலவரம் – சினிமா விமர்சனம்

கலவரம் – சினிமா விமர்சனம்

ஒரு பிளாஷ்பேக்கை முடிச்சிட்டு அப்புறமா மெயின் பிக்சருக்குள்ள நுழையலாம். 2000-ம் வருஷம். பிப்ரவரி 2-ம் தேதி. பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயல்லிதாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. இந்த்த் தீர்ப்பு வந்தவுடன் கொதித்தெழுந்த அ.தி.மு.க.வின் அடிமை தொண்டர்கள் தமிழ்நாடெங்கும் போராட்டங்களையும், எதிர்ப்பு ஆர்ப்பாடங்களையும், கலவரமும் செய்தனர்.

அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியர் தர்மபுரிக்கு கல்விச் சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். இலக்கியம்பட்டி அருகே அவர்கள் வந்த பஸ் கலவரத்தில் சிக்கியதில் அந்த பேருந்துக்கு அ.தி.மு.க. தொண்டர்களே தீ வைத்தனர்.. இதில் 3 அப்பாவி மாணவிகள் சிக்கி உயிரிழந்தனர்.. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ்செல்வன்..!

அதையும் ஆத்தாவின் இந்த ஆட்சிக் காலத்திலேயே ரிலீஸ் செய்யும் அளவுக்கு தைரியமாக இருந்த இந்த டீமுக்கு எனது பாராட்டுக்கள்..!
ஏற்கெனவே கல்லூரி படத்தில் பாலாஜி சக்திவேல் இதனை கிளைமாக்ஸ் காட்சியாக வைத்திருந்தாலும், அதன் தாக்கம் தியேட்டர் கேண்டீன்காரர்களைக்கூட தாக்கவில்லை. இப்போது இந்தப் படம் டிக்கெட் விற்பவர்களைக்கூட தாக்கவில்லை..!

இதுவும் மதுரையைக் களமாகக் கொண்ட கதைதான்..! ஏதோ மதுரையே ரவுடிக் கும்பல்களின் கையில் இருப்பதுபோல சினிமாக்காரர்களின் நினைப்பு..! இப்பத்தான் ஜில்லால மதுரைக்காரய்ங்களை கொத்து புரோட்டா போட்டாங்க. இப்போ இது அடுத்தது..! ஆதிமூலம், மூலமான ஒரு மெகா ரவுடி. மாவட்ட அமைச்சரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். கட்டதுரை, பட்டறை பரமன் போன்ற மிகச் சிறந்த துணை ரவுடி தளபதிகளை களத்தில் இறக்கிவிட்டு மதுரையில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர்..!

தன்னுடைய எதிர்ப்பையும் மீறி தேர்தலில் ஜெயிக்கும் எம்.எல்.ஏ.வை நட்ட நடு ரோட்டில் குத்திக் கொல்கிறார். இந்தக் கேஸில் போலீஸ் அவரை கைது செய்கிறது.. இதனை எதிர்த்து தனது அடிப்பொடி தளபதிகள் மூலமாக நகரில் கலவரத்தை உண்டு செய்கிறார் ஆதிமூலம்.. இந்தக் கலவரத்தில்தான் கதையின் ஹீரோக்களான சக்தி பொறியியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் தாக்கப்பட்டு 4 மாணவிகள் கருகி சாம்பலாகிறார்கள்..!

மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க.. அவர்களைச் சமாளிக்க வேண்டி டெல்லியில் இருந்து அஸிஸ்டெண்ட் கமிஷனர் வெற்றிச்செல்வனை விசாரணை அதிகாரியாக கொண்டு வருகிறார்கள். இவர் வந்து விசாரித்து முடிக்கும்போது கேஸை குளோஸ் செய்யும்படி லோக்கல் அமைச்சர் அட்வைஸ் செய்கிறார். போடா நீயாச்சு.. உன் கேஸாச்சுன்னு சொல்லி பைலை தூக்கியெறிந்துவிட்டு செல்கிறார் வெற்றிச்செல்வன்..! ஆனால்.. அவர் அமைதியாக இல்லை..

இன்னொரு பக்கம் தங்களது தோழிகள் நால்வரை பலி கொடுக்கும் மாணவர்கள் நேர்மையாக முயன்றும் கலவரத்தில் ஈடுபட்ட அரசியல்வியாதிகள் தப்பித்துவிடுவார்கள் என்பதால் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக் கொண்டு அவர்களை அழிக்க புறப்படுகிறார்கள். இவர்களுக்கு வெற்றிச்செல்வன் உதவிகள் செய்து எப்படி அந்தக் கயவர்களை பரலோகத்திற்கு பார்சல் செய்ய வைக்கிறார் என்பதுதான் படமே..! இவர் ஏன் உதவி செய்கிறார் என்கிற மகா, மகா சஸ்பென்ஸையும், எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதையும் தங்களால் முடிந்த அளவுக்கு தெலுங்கு பட லெவலுக்கு எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்..!

இது மாதிரியான சென்சிட்டிவ்வான பிரச்சினைகளைக் கையாளும்போது லாஜிக் மீறல்கள் அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.. அரசு நடைமுறைகளும், நாட்டு நடப்புகளும் உடனுக்குடன் காட்சி ரீதியாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் இன்றையச் சூழலில் இந்த அரசியல்-மாணவர்கள்-போலீஸ்-கலவரம் காட்சிகளின் நம்பகதன்மை எந்த அளவுக்கு இருக்க வேண்டும்..? அவற்றின் நம்பகத்தன்மை இல்லையேல் படத்தின் மீதான பிடிப்பும் ரசிகனுக்கு இருக்காது..! இதுவும் அப்படித்தான்..!

வெற்றிச்செல்வனாக வரும் சத்யராஜ் டெல்லியில் இருந்து கூப்பிட்டவுடன் வருகிறாராம்..! சாதாரணமாக மதுரைக்குள் நடந்த ஒரு கலவரத்திற்கு மத்திய அரசு அதிகாரியை இழுப்பதென்றால் சாதாரணமா..? சரி.. வருபவர் யாரென்று அமைச்சருக்கே தெரியாது என்று ரீல் விடுகிறார்கள். 4 மாணவிகள் எரிந்தார்கள்.. இவர்களின் குடும்பத்தினர் யார் என்பது தெரியாமலா இருக்கும்..?

இறந்தவர்களில் ஒரு மாணவி சத்யராஜின் மகள் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியில் வெடிக்கிறார்களாம்.. உளுத்துப் போன வெடி..! யாராவது நம்ப முடிகிறதா..? ஊரில் 2 கொலைகள் நடக்கின்றன.. அதிலும் முக்கியமான ரவுடிகள்.. போலீஸ் தேடாதா..? இருக்கிற போலீஸெல்லாம் ஆதிமூலத்திடம் லஞ்சம் வாங்கித் திளைப்பவர்கள் என்று சொல்லும்போது எந்தளவுக்கு அவர்களின் போர்ஸை காட்டியிருக்க வேண்டும்..?

வெற்றிச்செல்வனாக சத்யராஜ்.. வந்திறங்கும்போதே கெட்டப்போடுதான் இறங்குகிறார்.. பேச்சிலேயே தனது ஆக்சனை காண்பித்துவிட்டு போகிறார்.. இவரை வைத்து இயக்கி.. பழைய சத்யராஜை காட்ட வேண்டுமென்றால் அது மணிவண்ணனால்தான் முடியும் என்பது உறுதி போலிருக்கு..! சில காட்சிகளில் மட்டுமே கொஞ்சம் நடித்திருக்கிறார்.. மிச்சம், மீதியெல்லாம் அந்த இயக்குநருக்கே வெளிச்சம்..!

நான்கு ஹீரோக்கள்.. அவ்வளவு நடிக்க வாய்ப்பில்லை.. நான்கு ஹீரோயின்களையும் படத்தின் பிற்பாதியில்தான் காட்டுகிறார்கள்.. முதல் ஷாட்டிலேயே படத்தின் கதையைச் சொல்லத் துவங்கிவிட்டதால் படம் ரன் வேகத்தில் பறக்கிறது..! முதல் பாடல் காட்சி ஏன்.. எதற்கு என்று தெரியவில்லை.. சொய்ங்.. சொய்ங் என்று கானா பாலா பாடுகிறார்.. இரண்டாவது பாடல் காட்சி இடைவேளைக்கு பின்பு அந்த மாணவர்களுக்காக கொடைக்கானலில் எடுத்திருக்கிறார்கள்.. எதுக்குன்னுல்லாம் கேட்கப்படாது..!

பல காட்சிகளும சட்டு, சட்டென்று பறப்பதால் அடுத்த காட்சி இதுதான் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.. இதுவே படத்தின் பெரிய பலவீனம்..! மிகப் பெரிய டிவிஸ்ட்டுகளைக்கூட சர்வசாதாரணமாக காட்டியிருக்கிறார்கள்..! ஆதிமூலமாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் தணிகலபரணி மட்டுமே ஒரேயொரு ஆறுதல்..! அன்னார் இன்னும் பல படங்களில் நடித்து தனது திறமையைக் காட்ட்ட்டும்..!

சந்திரனின் ஒளிப்பதிவில் கலவரம் நடக்கும் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்..! கொடைக்கானல் பாடல் காட்சியும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் அனல் பறக்கிறது. என்றாலும் சண்டை துவங்கியவுடனேயே படம் முடிஞ்சிருச்சு என்ற பீலிங்கோடு சீட்டில் இருந்து எழும் 80-களின் காலத்துக்கே கூட்டிச் சென்றுவிட்டார் இயக்குநர்..!

கொஞ்சம் அழுத்தமான இயக்கம்.. சிறப்பான நடிப்பு.. இறுக்கமான திரைக்கதை இவற்றோடு வந்திருந்தால் இந்த டீமுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்..! 

Our Score



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *