2008—ம் ஆண்டில் துவங்கப்பட்ட ZEE தமிழ் தொலைக்காட்சி பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் தொலைக்காட்சி, சமீபத்தில் ‘zee தமிழ் குடும்பம் விருதுகள்’ நிகழ்ச்சியை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ‘ZEE தமிழ் சினி அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியை நடந்த உள்ளனர்.
திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்குவிக்கும்விதமாக முதன்முறையாக சிறந்த தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்தவுள்ளது.
சென்ற வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து சிறந்த கலைஞர்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர்.
இதற்காக zee தமிழ் தொலைக்காட்சி 5 பேர் கொண்ட தேர்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தத் தேர்வுக் குழுவில் தேசிய விருது பெற்ற நடிகையான சுஹாசினி மணிரத்னம், புகழ் பெற்ற தமிழ் இயக்குநர்களான கரு.பழனியப்பன், கெளதம் வாசுதேவ் மேனன், பரத் பாலா, மற்றும் திரைப்பட விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த விழாவிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் அடையாறில் உள்ள ‘லீலா பேலஸ்’ நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் தேர்வுக் குழுவினர்களை ஜீ தமிழ்த் தொலைக்காட்சியின் நிர்வாகிகளான சுஜீ பிரபாகரன் மற்றும் தமிழ் தாசன் ஆகியோர் வரவேற்று பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் பேசிய சுஜீ பிரபாகரன், “zee தமிழ் தொலைக்காட்சி துவங்கி 11 வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ளது. எங்களது தொலைக்காட்சியில் பல புதுமையான முயற்சிகளை செய்துள்ளோம்.
அதில் ஒரு பகுதியாக தற்போது உங்கள் அனைவரின் ஆதரவோடு ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருக்கும் தேர்வு குழு நபர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…” என்றார்.
தமிழ் தாசன் பேசும்போது, “ இந்த நாள் zee தமிழ் தொலைக்காட்சியின் முக்கியமான நாள். இந்த விழாவை நடத்த சென்ற வருடமே முயற்சித்தோம். ஆனால் முடியாமல் தற்போதுதான் இதை நடத்த முடிந்திருக்கிறது.
திரைப்படத்திற்கும், தொலைக்காட்சிக்கும் இடையே ஒரு பெரிய உறவை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த விருது விழா இருக்கும். கடந்த நான்கு வருடங்களில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 700 படங்கள் வெளியாகின. இவற்றில் எங்களது zee தமிழ் தொலைக்காட்சி மட்டும் 120 முதல் 130 படங்களின் திரைப்பட உரிமையை கைப்பற்றியது.
இதில் 70-க்கும் மேற்பட்ட படங்கள் 1 கோடிக்கும் குறைவான பட்ஜட்டில் எடுக்கப்பட்ட சிறிய படங்கள். அந்த படங்கள் அனைத்திற்கும் எங்களது ஆதரவை நாங்கள் அளித்துள்ளோம். மேலும், இன்னும் அதிகமான திரைப்படங்களை நாங்கள் ஊக்குவிக்க இருக்கிறோம்.
அதன் தொடக்கமாக இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை துவங்குகிறோம். இந்த விருதுகளுக்கான தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடைபெறும்…” என்றார்.
திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் பேசும்போது, “இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் தேர்வு குழுவில் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. சிறந்த முறையில் தேர்வுகள் நடைபெறும்…” என்றார்.
இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “நான் இதுவரையிலும் பல விருது விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் 2020-ல் கலந்து கொள்ள முக்கிய காரணம் இந்த விருதுகளுக்கான தேர்வில் தொலைக்காட்சியின் நிர்வாகம் தலையிடாமல் தேர்வாளர்கள் 5 பேருக்கு மட்டும் சிறந்த படங்களை தேர்வு செய்வதற்கான உரிமையை வழங்கியிருப்பதுதான்.
தமிழ் சினிமாவின் பெருமையை மற்ற மாநிலங்களிலும் இன்னும் அதிகமாக தெரிய வைக்க இது போன்ற விருதுகள் காரணமாக அமைகின்றன. எதிர்காலத்தில் பிற மாநில மக்களும் இது போன்று சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய வாய்ப்புண்டு..” என்றார்.
இயக்குநர் பரத் பாலா பேசும்போது, “இந்தத் தேர்வுக் குழுவில் ஒருவனாக என்னையும் தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. இந்த விழாவை விருது வழங்கும் விழாவாக எண்ணாமல் திறமைக்கு தரும் அங்கீகாரம் என அனைவரும் என்ன வேண்டும். எதிர்காலத்தில் திரைப்பட கலைஞர்கள் zee தமிழ் அவார்ட்ஸ் எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணம் வர வைக்கும் அளவுக்கு இந்த விருது வழங்கும் விழா இருக்கப் போகிறது…” என்றார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்தத் தேர்வுக் குழுவில் என்னையும் தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் நான் பார்க்காமல் விட்ட திரைப்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. இதற்கான நேரம் முன்பு இல்லாமல் போயிருந்தாலும், இந்த விருதுக்கான தேர்வுக்காக நேரத்தை செலவிட்டு படங்களைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்…” என்றார்.
நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசும்போது, “இந்த விருதுக்கான தரம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவு தேர்வுக் குழு அமைந்துள்ளது. என் அம்மா ZEE தமிழ் தொலைக்காட்சியை விரும்பி பார்த்து வருபவர். இந்த விருதுக் குழுவில் நானும் இருப்பதை அறிந்து என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்…” என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசும்போது, “ZEE தமிழ் தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்வுக் குழுவினர் மிகப் பெரிய பொறுப்பை எடுத்துள்ளனர். இதுவொரு கடினமான வேலைதான். இதற்காக நிறைய நேரம் செலவழித்து நிறைய படங்களைப் பார்க்க வேண்டியிருக்கும். திரைத்துறையில் எல்லாருக்குமே விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பத்திரிக்கைகளில் வரும் சிறிய, சிறிய பாராட்டுக்கள்கூட கலைஞர்களை உற்சாகப்படுத்தும். அதற்கு தகுந்தாற்போல் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பது மிகவும் சிறப்பான விஷயமாகும்…” என்றார்.