ஆதித்ய வர்மா – சினிமா விமர்சனம்

ஆதித்ய வர்மா – சினிமா விமர்சனம்

E4 Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான ‘சீயான்’ விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பனிதா சந்து, பிரியா ஆனந்த் என்ற இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். ராஜா, அன்பு தாசன்,  அச்யூத் குமார், லீலா சாம்சன் மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரவி கே.சந்திரன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், இசை – ரதன், கதை – சந்தீப் ரெட்டி வங்கா, மக்கள் தொடர்பு – யுவராஜ், திரைக்கதை, இயக்கம் – கிரிசயா.

2018-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஆதித்ய வர்மா.’

இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியிலேயே துருவ்வின் நடிப்பில் விக்ரமின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பாலாவின் இயக்கத்தில் ‘வர்மா’ என்கிற பெயரில் உருவானது. படம் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த வேளையில் படத்தின் தயாரிப்பாளருக்கு பாலாவின் உருவாக்கத்தில் திருப்தியில்லாததால், அந்தப் படத்தை அப்படியே தூக்கிப் போடுவதாக அறிவித்தார்கள்.

அதையடுத்து புதிதாக ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் இந்தாண்டு மார்ச் மாதம்தான் இதே படத்தை மீண்டும் துவக்கினார்கள். இப்போது இயக்குநர் மாற்றப்பட்டு தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கிரிசயா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

“அனைத்து வகைகளிலும் மிகைப்படுத்தப்பட்டத் தன்மையுடன் உருவான திரைப்படம்” என்று தெலுங்கு மீடியாக்களே எழுதிய இந்தப் படம் தமிழில் எப்படி வெளிவரும் என்கிற சந்தேகம் இருந்தது. தமிழ் ரசிகர்கள் எதையும் தாங்கிக் கொள்வார்கள் என்ற நினைப்புடன் தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’யை அப்படியே காப்பி செய்திருக்கிறார்கள்.

‘ஆதி’ என்னும் ‘ஆதித்ய வர்மா’ என்னும் நாயகன் துருவ், சென்னையைச் சேர்ந்தவர். மிகப் பெரிய பணக்காரர். இப்போது பெங்களூரில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கிறார். குணாதிசயத்தைப் பொறுத்தவரையில் ஒரு மருத்துவருக்குரிய குணமே இல்லாதவர்.

நிறைய கோபக்காரர். குடி, சிகரெட் என்பதற்கெல்லாம் பஞ்சமில்லை. அடிதடிகளுக்கும் அஞ்சமாட்டார். கல்லூரியில் நிறைய முறை கெட்ட பெயரை சம்பாதித்ததில் கல்லூரியைவிட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

‘போதும் இந்தப் படிப்பு.. எனக்கெதற்கு இந்த வேலை?’ என்ற எரிச்சலில் படிப்பைத் தூக்கியெறிந்துவிட்டுப் போக நினைத்த சூழலில்.. ‘மீரா ஷெட்டி’ என்னும் நாயகி பனிதா சந்து அதே கல்லூரியில் படிக்க நுழைகிறார். அவரைப் பார்த்ததும் நாயகனுக்குள் ஒரு ஸ்பார்க். ஏதோ ஒன்று மனதை திசை திருப்ப.. கல்லூரிக்குத் திரும்புகிறார் நாயகன்.

தன் காதலைச் சொல்லாமலேயே நாயகிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து மறைமுகமாக ‘ஐ லவ் யூ’ சொல்கிறார் நாயகன். நாயகியும் இதனை ஏற்றுக் கொள்ள இதன் பிறகு படம் முழுவதும் வரும் நேரங்களிலெல்லாம் இவர்களின் இடும் முத்தங்களின் சப்தம் தாராளமாக. ஏராளமாக திரையில் ஒலிக்கிறது.

இடையிடையே மருத்துவக் காதலர்கள் கட்டிலிலும் இணைகிறார்கள். ஆனாலும் அதே முரட்டுத்தனம், சிகரெட்.. குடி என்று அதையும் விடாமல் தொடர்கிறார் நாயகன்.

பெண்ணின் தந்தைக்கு இது தெரிய வர.. அவருடைய ஷெட்டி வம்சத்தைச் சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். போதாக்குறைக்கு நாயகனின் ‘நல்ல’ எல்லாவிதமான குணாதிசயங்களும் நாயகியின் அப்பாவை கோபப்படுத்த… எப்படியாவது மகளின் காதலைப் பிரிக்கப் பார்க்கிறார்.

இது தொடர்பாக காதலர்களுக்குள்ளும் மோதல் ஏற்படுகிறது. இதனால் நாயகன் இன்னும் தீவிரமாகி புகையில் இருந்து போதைக்குள் ஆள்கிறார். இதைக் கண்ட நாயகி, காதலனைவிட்டுப் பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செல்கிறார்.

நாயகன் அதற்குள்ளாக மருத்துவப் படிப்பை முடிக்கிறார். சிறந்த மருத்துவர் என்று பெயரெடுக்கிறார். ஆனால், சிறந்த மனிதராக மட்டும் அவரால் இருக்க முடியவில்லை. ஒரு நடிகை உட்பட பார்க்கும் பெண்களிடத்திலெல்லாம் உறவு வைத்துக் கொள்கிறார்.

காதலையும், காதலியையும் மறக்க முடியாமல் போதைக்கு அடிமையாகிறார். ஒரு நாள் குடி போதையிலேயே ஆபரேஷன் செய்யப் போய் அது தவறாகிவிடுகிறது. இதனால் மருத்துவப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

இந்த நிலைமையில் மீண்டும் தனது காதலியைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இதன் பின் அவரது நிலைமை என்ன என்பதுதான் இந்த ‘ஆதித்ய வர்மா’வின் வாழ்க்கைக் கதை..!

ஒரு அறிமுக நாயகனின் முதல் படமாக இந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கும் தைரியம் வேறு யாருக்கும் வந்திருக்காது. ‘சீயான்’ விக்ரமுக்கு மட்டுமே வந்துள்ளது.

தெலுங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்போதே இதன் ரீமேக் உரிமை பற்றி தமிழ்த் தயாரிப்பாளர்கள் யோசிக்கவே இல்லை. எடுத்தால் ‘யார் நடிப்பது..’ ‘யார் இயக்குவது’ என்பதைவிடவும் ‘யார் பார்ப்பார்கள்?’ என்றே யோசித்தார்கள். அதனாலேயே விக்ரம் கைக்கு படம் தானாகவே வந்து சேர்ந்திருக்கிறது.

தனது முதல் படத்திலேயே மொத்தப் படத்தையும் தான் ஒருவனாகவே தாங்கியிருக்கிறார் துருவ். ‘அர்ஜூன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடித்திருக்கிறார் துருவ். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

கவர்ச்சிகரமான உடலமைப்பு, கரகரப்பான உறுதியான குரல்.. மிடுக்கான பார்வை.. அவருடைய எடுப்பான தோற்றம், நடை, உடை, பாவனை என்று அத்தனையிலுமே ‘அர்ஜூன் ரெட்டி’யை கண் முன்னே கொணர்ந்திருக்கிறார்.

தான் நடிக்கும் முதல் படம் இது என்கிற எண்ணமே பார்வையாளர்களுக்குத் தோன்றாத வண்ணம் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார் துருவ். தனது நண்பர்களிடத்தில் மீராவைப் பற்றிப் பேசும்போதும், “அவ என் மீராடா” என்று பொங்கும்போதும், நாயகியிடமே காதலை வாழ வைக்க கெஞ்சும்போதும், போதையில் அழுது புலம்பும்போதும் துருவ் என்பவரே காணாமல் போய் ‘ஆதித்ய வர்மா’தான் கண்ணில் தெரிகிறார்.

இளமைப் பிராயத்திற்கேற்ற அந்தக் கோபம், வன்மம், ஆத்திரம், காமம், காதல், தாபம் என்று அத்தனைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் தீனி போட்டு தனது நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் துருவ். நீதிமன்றக் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் துருவ்.

இனி அடுத்தடுத்து என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.. நடிக்க வைக்கப்படுவார் என்பதில் சீயானுக்கும், அவர் மகனுக்கும் நிச்சயமாக குழப்பம் வரும். அந்த அளவுக்கு தன்னை முழுமையாக இந்த முதல் படத்திலேயே வெளிப்படுத்திவிட்டார் துருவ். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

நாயகி ‘மீரா ஷெட்டி’யாக பனிதா சந்து. இவருக்காகத்தான் இத்தனை அலம்பலும் என்றால் இவர் எத்தனை பேரழகியாக இருந்திருக்க வேண்டும்..? ஹூம்.. படத்தில் அப்படி தெரியவில்லை. சாதாரணமாகவே தெரிகிறார். இதனாலேயே இந்தக் கதையை காதல் கதையாகவே நம்ப முடியவில்லை.

அந்த வயதுக்கேற்ற இளமைத் துடிப்பையும், கவர்ந்திழுக்கும் பார்வையையும், நடிப்பையும் பனிதா கொடுத்திருக்க வேண்டும். பட்.. என்னவோ மிஸ்ஸிங்.. நாயகன் இழுத்த இழுப்பெக்கெல்லாம் தன்னுடைய உதட்டையும், உடலையும் கொடுக்கிறார். அவ்வளவே..!

காதல் பிரிவின்போதுதான் உணர்ச்சிகரமான காட்சிகளுக்காக உதட்டை பிரித்து வசனம் பேசி நடித்திருக்கிறார். ஆனால் அதுவும் உணர்ச்சிகரமாக இல்லை என்பதால் மனதில் நிற்கவில்லை.

இரண்டாவது நாயகியான பிரியா ஆனந்த் ஒரு நடிகையாகவே படத்தில் தோன்றியிருக்கிறார். இவரையும் நாயகன் விட்டுவைக்காமல் காம விளையாட்டு நடத்துகிறார். இந்த வேடத்தில் நடிக்க இவர் ஒத்துக் கொண்டது எப்படி என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

அப்பாவான ராஜா அளவான வசனங்களோடு அடக்கமாக நடித்திருக்கிறார். பாட்டியாக நடித்திருக்கும் லீலா சாம்சனின் நடிப்பு படத்தோடு ஒட்டவே இல்லை. இதில் மட்டும் அந்நியம் தெரிந்தது எப்படி இயக்குநரே..?

ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவில் படம் ரிச்சான ஒரு தோற்றத்தைத் தருகிறது. அடல்ஸ்ட் ஒன்லி படம் போல பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால்… அந்த வெறித்தனத்திற்கு ஒத்துப் போவதைப் போல கேமிராவின் கோணங்கள் வைக்கப்பட்டு படம் பார்ப்பவர்களையும் வெறியாக்கியிருக்கிறது.

ரதனின் இசையில் ‘யாருமில்லா’ பாடல் மட்டுமே கொஞ்சம் கேட்கலாம் போல தோன்றியது. மற்றவைகள் பாடி முடிந்ததும் மறந்துவிட்டன. ஆனால் படத்தின் வெறித்தனத்திற்கு ஒத்து ஊதியிருப்பது படத்தின் தீம் மியூஸிக்குதான். கூடவே நாயகனுக்காக அவ்வப்போது ஒலிக்கும் சின்னச் சின்ன பின்னணி இசையும் ரசிக்கும் ரகம்..!

அர்ஜூன் ரெட்டியை அப்படியே சீன் பை சீனாக மொழி மாற்றி எடுத்திருக்கிறார்கள். அதே இயக்குநர் என்பதாலும் அதே பீலிங் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. ஆனால், ஒட்டு மொத்தமாய் பார்த்தால் இந்தப் படம் இந்தக் காலத்து இளைஞர்களுக்குத் தேவையானதுதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

நாயகனுக்கு நாயகி மீதான காதல் வருவதற்கு ஒரு காரணமும் இல்லை. அதேபோலத்தான் நாயகிக்கும். ஒரு முத்தம் கொடுப்பதினால் காதல் வந்துவிடுமா என்ன..? நாயகி அப்படித்தான் மடங்கிப் போகிறார். இதிலேயே இவர்களது காதல் பிரிவின்போது பார்வையாளர்களுக்கு அது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

அதிலும் வலுக்கட்டாயமாக, முரட்டுத்தனமாக.. ஆணாதிக்கத்தனமாக நாயகன் நாயகி மீதான தனது காதலை வெளிப்படுத்தும்போது பார்க்கும் நமக்கே ஆயிரத்தெட்டு கடுப்பாகும்போது நாயகி எதற்காக இப்படிப் பணிகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

அதேபோல் ‘ராக்கிங்’, ‘ஈவ் டீஸிங்’ போன்றவைகளைக் கண்டித்து ‘மீ டூ’வீல் போலி மூகமூடிகளை போட்டுக் கிழித்து வரும் இந்தக் காலத்தில், அதே போல காதலியை மிரட்டி காதலிக்க வைப்பதெல்லாம் ரொம்பவே டூ மச் ஸார்.. அதோடு இதுதான் ஹீரோயிஸம் என்று பரப்புரை செய்வதும் மன்னிக்க முடியாதது இயக்குநரே..!

படத்தில் நாயகனுக்கு பெண்கள் மீதான மதிப்பும், எண்ணமும்தான் என்ன..? ஆணுக்கு அடங்கி, ஒடுங்கி இருப்பதுதான் பெண்மை என்று ஒரு மருத்துவம் படிக்கும் ஆண் நினைக்கிறாரா..? இது எந்தக் காலத்து அறிவுரை இயக்குநரே..?

இதேபோல் நாயகனின் குணாதிசயங்களாக.. கேரக்டர் ஸ்கெட்ச்சாக இயக்குநர் அமைத்திருக்கும் பல காட்சிகள் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

ஒரு மருத்துவம் படிக்கும் மாணவனே சிகரெட் குடிப்பது, மது அருந்துவது.. போதை மருந்தை உட்கொள்வது.. குடித்துவிட்டே வேலைக்கு வருவது.. ஆஸ்பத்திரியில் நர்ஸ்களே அவருக்கு சிகரெட் பற்ற வைத்துவிடுவது.. பார்க்கும் பெண்களையெல்லாம் படுக்கையறைக்கு அழைப்பது.. நாயகி மீதான வெறுப்பில் நாய்க்கு நாயகியின் பெயரை வைத்துக் கடுப்பேற்றுவது.. வேலைக்காரியை ஓட ஓட விரட்டுவது.. இதெல்லாம் என்ன வகையான கேரக்டர் ஸ்கெட்ச் என்று இயக்குநர்தான் சொல்ல வேண்டும்.

இதையெல்லாம் ஒரு ஹீரோ செய்கிறார் என்பதற்காகவே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன..? அதோடு இந்த அளவுக்கு வன்மத்தை அவருக்குள் விதைத்துவிட்டுச் சென்றதே அவருடைய காதலிதான் என்று அவருடைய காதல் தோல்வியைக் காரணமாக்குவதெல்லாம் சரியான போங்குத்தனம்..!

ஆக, மொத்தத்தில் இப்போதைய இளைஞர்கள் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்ப்போமோ அப்படித்தான் இந்த ‘ஆதித்ய வர்மா’ இருக்கிறார். ஆகவே, இந்த வர்மாவைப் போல வாழ்க்கையைத் தொலைக்கக் கூடாது என்கிற எச்சரிக்கையைத்தான், இத்திரைப்படம் கொடுத்திருப்பதாக நாம் நினைத்தாக வேண்டும்.

நாயகன் துருவ்வுக்கு பெயர் சொல்ல வேறு ஒரு நல்ல படம் கிடைக்க வாழ்த்துகிறோம்..!

Our Score