இளம் ரசிக ரசிகைகளின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இளையஞானி யுவன் ஷங்கர் ராஜாவின் இசை திருவிழா வரும் பொங்கல் தினத்தன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரிலுள்ள பெல்பின்ஸ் திடலில் கோலாகலமாக நடை பெற உள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ‘யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, “எங்கெங்கோ சென்று இசைப்பதைக் காட்டிலும் நம் மண்ணில் நடத்த வேண்டும் என்று எண்ணி நான்தான் நெல்லையை தேர்ந்தெடுத்தேன். எனது முதல் படமான ‘அரவிந்தன்’ இங்குதான் படமாக்கப்பட்டது. அதனால்தான் இந்த முடிவு” என்றார்.
இந்த இசை நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் அமையப் போவது இசைஞானி இளையராஜாவின் வருகை. மேலும், பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண், ரஞ்சித், விஜய் யேசுதாஸ், செந்தில்தாஸ், வாசு, சத்யன், பெல்லிராஜ், ஸ்வேதா பண்டிட், ப்ரியா ஹிமேஷ், பிரியதர்ஷினி, ரம்யா ஆகியோரும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சி வரும் ஜனவரி 17-ம் நாள் பாளையங்கோட்டையிலுள்ள பெல்பின்ஸ் திடலில் நடைபெற உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு ஒரு பொங்கல் பரிசாக அமையும்.
யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை தழுவிய பிறகு நடக்கும் முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும்.