full screen background image

நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம் மீண்டும் மேடையேறுகிறது..!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம் மீண்டும் மேடையேறுகிறது..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சுஜாதா, ஒய்.ஜி.மகேந்திரா நடிப்பில், முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் 1983-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’. மேடை நாடகமாக இந்தியாவிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சுமார் இருநூறு தடவைக்கும் மேல் அரங்கேறிய நாடகம் இது.

1978-ம் ஆண்டு முதன் முதலாக மேடையேறிய இந்த நாடகத்தை எழுதியவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதிதான். அவருடைய குடும்ப நாடகக் குழுவான யு.ஏ.ஏ. சார்பில் அரங்கேறிய இந்த நாடகத்தில் நரசிம்மாச்சாரி வேடத்திலும் அவரே நடித்திருந்தார்.

அந்த நாடகத்தில் வரதுக்குட்டி கேரக்டரில் நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரா.  இப்போதுவரையிலும் ஒய்.ஜி.மகேந்திராவுக்கு மிக பெரிய அடையாளமாக ‘வரதுக்குட்டி’ என்று நாடகப் பிரியர்கள் அவரை அழைக்கும் அளவுக்கு புகழ் பெற்றது இந்த நாடகம்.

இப்போது பிரபல கட்டுமான நிறுவனமான ஸ்ரீராம் புராப்பர்ட்டீஸ் நிறுவனத்துடன் பாரத் கலாச்சார், மற்றும் அப்பாஸ் கல்ச்சுரல் அகாடமி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மீண்டும் இந்த நாடகத்தை மேடையேற்றுகிறார் ஒய்.ஜி.மகேந்திரா.

வரும் செப்டம்பர் 14-ம் தேதி  முதல் 18-ம் தேதிவரை சென்னை தி.நகர் வாணி மாகாலிலும்,  19-ம்தேதி முதல்  21=ம்தேதிவரை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பிலும் இந்த நாடகம் நடத்தப்பட இருக்கிறது.

இதுவரை இந்த நாடகத்தில் வரதுக்குட்டியாக நடித்த ஒய்.ஜி.மகேந்திரா இந்த முறை தனது அப்பா நடித்த நரசிம்மாச்சாரி வேடத்தில் நடிக்கிறார். டிவி மற்றும் சினிமா நடிகையான ஆனந்தி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வரதுக்குட்டியாக ராகவ் நடிகை ஆனந்தியின் சொந்த மகனான ராகவ் பாலாஜி நடிக்கிறார். ஐ.டி. நிறுவனத்தில் படித்துவரும் இவர் நாடகத்தில் பங்கேற்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இதில் நடிக்கிறாராம். இந்த நாடகத்தில் பத்திரிக்கையாளர் உசைனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

YGM Press Meet Stills(9)

இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் “என்னை பெற்ற தந்தையும், நாடகத் தந்தையுமான ஒய்.ஜி.பி.,  நடிப்புத் தந்தையான நடிகர் திலகம் சிவாஜி ஆகிய இருவருமே நடித்த ஒரு வேடத்தில் நான் நடிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இதற்கு முன் உருவான ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்நாடகம் என் தந்தை உருவாக்கியது. அதலால் இந்நாடகத்தை நான் மீண்டும் உருவாக்க ஆசைப்படுகிறேன். தற்போது உள்ள மக்கள் ரசிக்கும்படி உருவாக்கி உலகம் முழுவதும் இந்நாடகத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

நாடகம் என்பது நடிகர்களின் திறமையை வெளிப்படுத்தக் கூடியது. தற்போதுள்ள டெக்னாலஜியால் நடிப்பின் திறமை தெரியாது. சினிமா என்பது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் இணைந்து உருவாக்கினால்தான் அழகாக இருக்கும். அது மட்டுமல்ல, இந்த நாடகக் கலை அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் அதன் மீதுள்ள காதலாலும்தான் இதனை நான் விடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இதற்கு முன்பு நாங்கள் நடத்திய நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த நம்பிக்கையில்தான் நாடகங்களை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறேன்.

உலகமெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கேயெல்லாம் எங்களது நாடகக் குழு நாடகம் போட்டுள்ளது. இந்த வருட கடைசியில் கென்யா சென்று நாடகம் போட இருக்கிறோம். அங்கிருந்து திரும்பும் வழியில் குவைத்தில் எங்களது நாடகம் இருக்கிறது. மேலும் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கும் போகப் போகிறோம்..” என்றார்.

நாடகங்களில் நடிப்பதற்கு திரை நட்சத்திரங்கள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லையே ஏன் என்று கேட்டதற்கு, “நாடகக் கலை தற்போது திரையுலக பிரபலங்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுதான் வருகிறது. நாடகத்தில் அவர்கள் நடிக்காததற்கு காரணம் இங்கு சம்பளம் குறைவு. நாங்கள் எல்லாம் சபாவை நம்பிதான் இருக்கிறோம். எல்லா சபாக்களிலும் எவ்வளவு கொடுப்பார்களென்று நினைக்கிறீர்கள். வெறும் 15000 ரூபாய்தான். ஒரு குழுவில் 15 பேர் இருக்கிறார்கள். இதில் யாருக்கு, எவ்வளவு கிடைக்கப் போகிறது..? இதுதான் இங்கே பெரிய பிரச்சினை..!

நடிகர் சந்தானம் ஒரு முறை இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு தான் இதில் நடிக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் சொல்லி 2 வருஷமாயிருச்சு. அதுக்கப்புறம் அவரை பார்க்கவே முடியலை.. ரஜினியை ஒருநாள் சந்திக்கும்போது நாம சேர்ந்து ஒரு நாடகத்தை உருவாக்கலாம் என்றார். அவருக்காக ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளேன். தற்போது அவர் ‘லிங்கா’ படத்தில் பிசியாக இருப்பதால் அதை முடித்து விட்டு வந்து நடிப்பாரென்று நினைக்கிறேன்..” என்றார் ஒய்.ஜி.மகேந்திரா.

YGM Press Meet Stills(3)

நிகழ்ச்சியில் ஸ்ரீராம் புராப்பர்டீஸ் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பாலாஜி பேசும்போது, “சினிமாவில் ஒரு ஷாட் எடுக்கும்போது எத்தனை முறை தவறு செய்து நடித்தாலும், மீண்டும் சரியாக எடுத்து சரியான காட்சிகளை மட்டுமே சேர்த்து காட்டுகிறோம். தவறுகள் மறைக்கப்படுகின்றன.  ஆனால் மேஜிக்,  சர்க்கஸ், நாடகம் மூன்றும் அப்படி அல்ல. ஒவ்வொரு நொடியும் தவறே செய்யாமல மக்கள் முன்பு நேரிடையாக  திறமையை காட்ட வேண்டிய உயரிய கலைகள். அதில் இலக்கியமும் கலக்கிற கலையான இந்த நாடகத்தின் மீது நாங்கள் கொண்டிருக்கும் மரியாதையால்தான் நாடகங்களை நடத்த நாங்கள் தொடர்ந்து ஸ்பான்ஸர் செய்கிறோம்…” என்றார்.

கலைகளுக்கு ஆதரவு கொடுக்க எப்போதும் ஒரு புரவலர்கள் வரலாற்றில் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்..!  பாராட்டுக்கள் ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் நிறுவனத்திற்கு..!

Our Score