full screen background image

“ரசிகர்களெல்லாம் விமர்சகர்களாக மாறிவி்ட்டார்கள்..” – நடிகர் அர்ஜூன் பேட்டி..!

“ரசிகர்களெல்லாம் விமர்சகர்களாக மாறிவி்ட்டார்கள்..” – நடிகர் அர்ஜூன் பேட்டி..!

ஜெய்ஹிந்த் – 2 படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் பிஸியாக இருந்தார் அர்ஜுன். ஒரே முகம். மூன்றுவிதமான டென்ஷன் அவருக்கு. காரணம் ஜெய்ஹிந்த் – 2 மூன்று மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என உருவாகி வருகிறது…அந்த பிஸி அவருக்கு.

ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியான கதை..?

“இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய்ஹிந்த் தேசப் பற்றை உள்ளடக்கிய படமாக வெளியானது. இந்த ஜெய்ஹிந்த் – 2 கல்வியை உள்ளடக்கியது. ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்றுடன் கல்வி அறிவும் தேவை என்பதுதான் என் கருத்து. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை கோயில் என்பது பள்ளிகள்தான். இன்று கல்வி வியாபாரமாகிவிட்டது. இன்று விலையுயர்ந்த வியாபாரமே கல்விதானே. அதை தவறு என்று சுட்டி காட்டுகிறோம்.

இன்றைய கல்வி முறையை பற்றி, நாட்டுப்பற்று மற்றும் ஆக்சன் கலந்த அதிரடி படமாக உருவாக்கி இருக்கிறோம். கல்வி இப்படி இருந்தால் ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்ற பொதுவான ஒருவனின் கருத்தை இதில் சொல்கிறோம். ஒவ்வொரு பெற்றோரின் ஆசை, தங்களது வாரிசுகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதே. அந்த கனவு எங்கே, எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை இதில் பிரதிபலிக்கிறோம்.”

உங்களது சினிமா பயணத்தின் அனுபவம் சுகமானதா? சுமையானதா..?

“என்னை உலகளவில் பிரபலப்படுத்தியது சினிமாதானே! அது சுகமானதுதானே. எல்லா துறைகளிலும் நல்லதும் இருக்கும், கேட்டதும் இருக்கும். நாம் நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் சுகம்தான். நான் நடிக்க வந்து முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. என் வாரிசு ஐஸ்வர்யாவும் நடிக்க வந்துவிட்டார். என்னை முழுமையாக இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வெற்றி கண்டிருக்கிறேன். இது போதும் நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக எல்லாமே என்ன பொறுத்தவரை சுகமானதுதான்.”

படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டீர்கள் போலிருக்கே?

“குறைத்துக் கொள்ளவில்லை. இன்றுகூட எல்லா மொழிகளிலும் நடிக்கக் கேட்கிறார்கள். எனக்கேற்ற கதைகள் தேவை. விளையாட்டுத்தனமாக எல்லாம் இனி நடிக்க முடியாது.

இன்று விஞ்ஞானம் வேறு மாதிரியான வழியை திறந்து விட்டிருக்கிறது. ரசிகர்கள் எல்லாம் விமர்சகர்களாக மாறிவிட்டார்கள். படம் பார்க்கும்போதே பேஸ்புக், ட்விட்டர் , வாட்ஸ்அப் போன்ற ஆயுதங்களால் உடனே தங்களது கருத்துகளை பதிகிறார்கள். அதனால் ரொம்ப நிதானமாக யோசிக்க வேண்டி இருக்கிறது…”

ஜெய்ஹிந்த் – 2 படத்தில் உங்களது ட்ரேட் மார்க்கான ஆக்சன் இருக்குமா ?

“அதிரடியான ஆக்சன் இருக்கும். கதையும் தூக்கலாக இருக்கும். இது ஒரு மாநிலத்துக்கான கதை இல்லை… இன்று இந்தியா முழுக்க உள்ள அடிப்படை பிரச்சனையான கல்வியை பற்றியது. அரசாங்கத்தில் உங்கள் உரிமையை கேட்டுப் பெற முடிகிற நீங்கள் உங்களின் கடமையை சரியாக செய்கிறீர்களா? என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது.”

படத்தை பற்றி..?

சமீபத்தில் இந்த படத்திற்காக சென்னை மற்றும் பெங்களூரில் ஒரு பாடல் காட்சி படமாகப்பட்டது.

“அய்யா படிச்சவரே…

அஞ்செழுத்து அர்ஜுனரே…

கல்விக்கண் தொறக்க வந்த

காமராசு வகையறாவே…”

இந்த பாடலில் நான் மற்றும், கானா பாலா மற்றும் முன்னூறுக்கு மேற்ப்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்க சரஸ்வதி பூஜை போன்ற அரங்கு அமைக்கப்பட்டு அதில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டது. மேலும், “இவன் யாரிவன்… நெருப்பானவன்“ என்ற இன்னொரு பாடலுக்கு சிங்கப்பூரில் சிம்பரன் கபூருடன் நான் நடிக்க படமாக்கப்பட்டது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார் அர்ஜுன்.

அடுத்து உங்கள் திட்டம் என்ன ?

பிரபல நடிகர்களை வைத்து நான் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். என் மகள் ஐஸ்வர்யாவை வைத்து வித்தியாசமான படத்தை இயக்க உள்ளேன். கூடிய விரைவில் அறிவிப்பு வரும்.

இப்போதைய இளைய தலைமுறை நடிகர்கள் பற்றி….

“எல்லோருமே ஒரு விதத்தில் திறமைசாலிகள்தான்… அத்துடன் படித்த அறிவாளிகளாகவும் உள்ளார்கள். வெற்றியையும், தோல்வியையும் சகஜமாக பாவிக்கிற மனப் பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. எல்லோரும் ஜெயிக்க என் வாழ்த்துக்கள்…” என்றார் அர்ஜுன்.

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார். சிம்ரன் கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ், பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – H.C. வேணுகோபால்

இசை – அர்ஜுன் ஜெனியா

பாடல்கள் – வைரமுத்து, பா.விஜய்

கலை – சசிதர் அடாபா

வசனம் – ஜி.கே. கோபிநாத்

எடிட்டிங் – கே.கே

நடனம் – எ.ஹர்ஷா, நோபல்

ஸ்டண்ட் – பவர்பாஸ்ட் பாபு – கஜு(பேங்காக் )

நகைச்சுவை பகுதி – ராஜகோபால்.A

இணை இயக்குனர் – பரமேஷ்வர்

தயாரிப்பு நிர்வாகம் – கவிசேகர்

இணை தயாரிப்பு – ஐஸ்வர்யா, அஞ்சனா

கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்

Our Score