‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். இவர், தற்போது தமிழில் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘ஏன் கனவே’ என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றிலும் சந்தோஷ் பிரதாப் நடித்து வருகிறார்.
இந்த ஆல்பம் முழுக்க முழுக்க உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்யும் புதுமணத் தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சில சொல்லப்படாத பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் வகையில் மிக எமோஷனலாக உருவாக்கப்பட்டு வருகிறது.
கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க திரு.கௌரிசங்கர் இந்த ஆல்பத்தைத் தயாரிக்கிறார்.
பாடலாசிரியர் முத்தமிழ் பாடல் எழுத, சுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘யாஞ்சி யாஞ்சி’, ‘ராசாளியே’, ‘ஆளப் போறான் தமிழன்’ போன்ற பாடல்களைப் பாடிய சத்யபிரகாஷ் இந்த பாடலை பாடியுள்ளார். ரெஜிஷ் படத் தொகுப்பு செய்ய, ராகேஷ் இசையமைக்கிறார்,
விஜய் நடித்த ‘ஜில்லா’, ‘புலி’ போன்ற படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய டி.ஆர்.பாலா இந்த ஆல்பத்தை இயக்கியிருக்கிறார். இவர் 50-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆல்பம் வரும் ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகவுள்ளது.