full screen background image

ஏலே – சினிமா விமர்சனம்

ஏலே – சினிமா விமர்சனம்

சென்ற ஆண்டு தமிழில் வெளியாகி சிறந்தத் திரைப்படமாக பலராலும் பாராட்டப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹலிதா சமீமின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அடுத்தத் திரைப்படம்தான் இந்த ஏலே’ திரைப்படம்.

தயாரிப்பாளர் S.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை சக்கரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தினை Y Not Studios நிறுவனமும் Reliance Entertainment நிறுவனமும் இணைந்து வழங்குகிறது.

படைப்பாளிகள் தம்பதியரான புஷ்கர் & காயத்ரி Wall Watcher Films நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக இப்படத்தினை கிரியேட்டிவ் புரொடக்சன் செய்துள்ளனர்.

இசை – காபெர் வாசுகி, அருள் தேவ், ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், படத்தொகுப்பு – ரேமண்ட் டெரிக் கிரஸ்டா, ஹலிதா சமீம், சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், VFX மேற்பார்வை – லின்கின் லிவி, ஒலிப்பதிவு – S.அழகியகூத்தன், ஒலி வடிவமைப்பு – G.சுரேன், விளம்பர வடிவமைப்பு – கபிலன்.

சில்லுக்கருப்பட்டி’ படத்திலேயே புருவத்தை உயர்த்த வைத்து.. ‘யார் இந்த இயக்குநர்..?’ என்று கேள்விக்குறியை எழுப்பிய ஹலிதா ஷமீம்.. இந்தப் படத்திலும் தனது கொடியை உச்சியில் பறக்க விட்டிருக்கிறார்.

முத்துக்குட்டி’ என்னும் சமுத்திரக்கனிக்கு 7 வயது ஆண் பிள்ளையும், 10 வயதில் பெண் குழந்தையும் உண்டு. மனைவி இறந்துவிட்டார். தானே சமைத்து பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.

ஊர், ஊராகச் சென்று குச்சி ஐஸ் விற்று பொழைப்பை நடத்தி வருகிறார். இது மட்டுமிலலாமல் பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல் என்று பல வகைகளிலும் பணம் சம்பாதித்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் லாட்டரி சீட்டு வாங்கியே காலி செய்கிறார். மிச்சத்தை குடித்தே அழிக்கிறார்.

சின்ன வயதில் இருந்தே தந்தையின் திருட்டுத்தனத்தை பக்கத்தில் இருந்து பார்த்தால் அவரது மகனான ‘பார்த்தி’ என்னும் மணிகண்டனுக்கு அப்பா என்றாலே அலர்ஜி. டிரைவிங் ஸ்கூலில் டிரெயினராக இருக்கும் இவருக்கும், ஊர்ப் பண்ணையாரின் மகளுக்கும் இடையில் காதல் உருவாகிறது.

மிக டீஸண்ட்டான காதலாக வளர்ந்து வந்த வேளையில், ஒரு சின்னப் பிரச்சினையால் அந்தக் காதல் தடைபடுகிறது. இதனால் மன வேதனைப்படும் கார்த்தி ஊர் வேலையைவிட்டுவிட்டு சென்னைக்குப் பயணப்பட்டிருக்கிறார்.

இப்போது அவரது தந்தை இறந்துவிட்டதாகச் செய்தி வர ஊருக்கு ஓடோடி வருகிறார். உறவுகளும், சுற்றமும், நட்பும் சூழ்ந்திருக்க இறுதிச் சடங்குகள் நடந்து வரும் வேளையில்தான் அவரது காதலிக்கு நாளை காலை இதே ஊரில் திருமணம் என்ற செய்தியும் அவருக்குக் கிடைக்கிறது.

திருமணத்தை நிறுத்தி தனது காதலியைக் கடத்தலாம் என்று பார்த்தி நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரது வீட்டில் அவரது அப்பாவின் உடலைக் காணவில்லை.

பார்த்தியும், அவரது நண்பர்களும் பிணத்தைத் தேடுகிறார்கள். பிணம் தானாக எழுந்து ஓடியிருக்காது அல்லவா..? யாரோ கடத்தியிருக்க வேண்டும் என்று நினைத்து தனது குடும்பத்திற்கும், தனது காதலுக்கும் ஆகாதவர்கள் செய்திருக்கும் வேலை இது என்று நினைத்து அப்பாவின் உடலைத் தேடுகிறார் பார்த்தி.

அது கிடைத்ததா..? யார் கடத்தினார்கள்..? கடைசியில் என்ன ஆனது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நடிகர் சமுத்திரக்கனி முத்துக்குட்டி’  என்னும் கலகலப்பான மனிதராக நடித்திருக்கிறார். செய்வதெல்லாம் திருட்டுத்தனம் என்றாலும் அதெல்லாம் சரியானதுதான் என்பது போல நடந்து கொள்வதும்.. அக்மார்க் ஒரு ‘கல்லுளிமங்கன்’ கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

கூசாமல் கோழிக் குஞ்சை ரோட்டில் ஓட விட்டு அதன் மூலம் காசு பார்க்கும் வேலையையும் செய்கிறார். ஒரு சாதாரண சுத்தியலுக்காக சொந்தக்காரனிடமே மல்லுக்கு நிற்கிறார். கடன் கொடுத்தவன் தேடி வருகையில் ஊரையே கூட்டி வைத்துக் கொண்டு ‘நெஞ்சு வலி’ என்று டிராமா போடுகிறார். இப்படி பல்வேறு வகைகளிலும் ஏமாற்றுப் பிழைப்பு நடத்துபவர். கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியே இல்லாமல் பேசுவதும், நடந்து கொள்வதும், கடைசிவரையிலும் தான் செய்ததை சரி என்று சொல்லியே வாழ்வதும் ஒரு முரண்பாடான திரைக்கதைதான்.

இதையும் தாண்டி சவமாக படுத்துக் கிடக்கும் காட்சியில் எப்படித்தான் இத்தனை முனைப்புடன் நடித்தாரோ தெரியவில்லை. இந்தப் படத்தில் அதிகக் காட்சிகள் இவர் பிணமாக இருப்பதுதான். மூச்சைப் பிடித்துக் கொண்டு படுத்திருக்கும் அந்தத் தருணத்தில் ஒரு நடிகர் படும் கஷ்டத்தை நினைத்துப் பார்க்கும்போது சமுத்திரக்கனியை வெகுவாகப் பாராட்டலாம்.

இதில் இரட்டை வேடம் வேறு. அந்த இன்னொரு வேடத்திற்கான பொருத்தமான காரணத்தைச் சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அண்ணனுக்கு, தம்பி கொஞ்சமும் சளைக்கவில்லை என்பதைபோல தம்பி போடும் கிரிமினஸ் ஸ்கெட்ச்சில் அண்ணன் மாட்டிக் கொண்டு முழித்து கடைசியில் மகன் உதவியும் தப்பிக்கும் அந்த பலே திரைக்கதைக்காக இயக்குநர் ஹலிதா ஷமீமுக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள்.

இறுக்கமான முகத்தோடு இறுதிவரையிலும் போராடும் மகன் பார்த்தியாக மணிகண்டன்  நடித்திருக்கிறார். தன்னால் முடிந்த அளவுக்கு தனது கோபத்தையும், அப்பா மீதான ஆத்திரத்தையும் வெளிக்காட்டியிருக்கிறார். கடைசியில் அப்பனை நேருக்கு நேராக வைத்து வார்த்தைகளால் துளைத்தெடுக்கும் காட்சியில் கவனிக்கப்பட்டிருக்கிறார்.

இவரது வசன ப் பதிவுகள் சரியாக பதியப்படவில்லை என்பதால் பல வசனங்கள் புரியவில்லை. படத்தின் மிகப் பெரிய பின்னடைவு இதுதான். மணிரத்னம் ஸ்டைலில் ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார்கள்.

‘நாச்சியா’ என்னும் நாயகியாக புதுமுகம் மதுமிதா நடித்திருக்கிறார். கேமிராவுக்கேற்ற முகம். சில, பல கோணங்களில் அவரது முக பாவனைகள் ரசிக்கும்படி இருக்கிறது. தனது வீட்டு வாண்டு ஒண்ணுக்குப் போன சைக்கிளை துடைத்தபடியே எரிச்சலில் அவர் பேசும் பேச்சுக்கள் ரசனையானவை. சிறந்த இயக்கத்தினால்தான் இப்படிப்பட்ட நடிப்புகள் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது என்பதால் இயக்குநரையும் இந்த இடத்தில் பாராட்டுவோம்.

இறுதியில் தன் காதலை விடமுடியாமல் தத்தளித்து காதலனைத் தேடி ஓடி வரும் காட்சியில் மனதை நெகிழ வைத்திருக்கிறார் மதுமிதா.

சமுத்திரக்கனியின் குழந்தைகளாக நடித்திருக்கும் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அப்பா மட்டும் சிரித்த முகத்துடன் திருடியதையும், ஏமாற்றியதையும் சொல்லிக் கொண்டிருக்க.. ஊரே காறித் துப்புவதை மிகுந்த மன வலியுடன் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த சோக நடிப்பை முகத்தில் காட்டியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்..!

படத்தில் நடித்திருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் அவரவர் பாட்டுக்கு நடித்திருக்கிறா்கள். எழவு வீட்டில் பாட வந்த பொம்பளை டைம் டேபிள் போட்டு புரோகிராமை சொல்லி பாடுவதும்.. ‘அழுக முடியவில்லை’ என்று டேப்பை போட்டு ஒலிபரப்பச் சொல்வதும் நல்ல காமெடி. இதோடு ‘தங்கப் பல்லைக் காணவில்லை’ என்று அதே ராகத்தோடு பாடிக் காட்டி தேடுவதெல்லாம் செமத்தியான காமெடி.

படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநருக்கு துணை செய்திருப்பது தேனி ஈஸ்வரின் கச்சிதமான ஒளிப்பதிவு. டைட்டில் கார்டை வித்தியாசமாக, ஆனால், அவ்வளவு அழகாக நிலவொழியை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

படத்தில் இடம் பெற்ற இருட்டு காட்சிகளிலெல்லாம் கேமிராவின் ஒளியிலேயே படம் நகர்கிறது. பாடல் காட்சிகளிலும் அந்த இயற்கையின் அழகையும் சேர்த்தே படமாக்கியிருக்கிறார்கள். ‘முத்துக்குட்டி சேட்டை’ பாடல் காட்சியில் முத்துக்குட்டியின் ஒரிஜினல் சேட்டைகளையும் சேர்த்தை பதிவாக்கியிருக்கிறார்கள். பாடல் வரிகளும், பாடலைப் படமாக்கியவிதமும் அருமை.

ஆனால் ‘சீவனுக்கு’ பாடலின் வரிகள் புரியவே இல்லை. பாடகர்களின் குரல் வளம் சரியில்லை என்றே சொல்லலாம். ‘மகராசா’ பாடல் காட்சிகளின் கனத்தைக் கொடுக்கத் தவறிவிட்டது. ‘எட்டுத் திக்கும் ஊரே’ பாடலும் இதே ரகம்தான். ஆனால் என்ன பின்னணி இசையில் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

பக்காவான கிரிமினல் திரைக்கதையை அவர்களுக்கேற்றதுபோல் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். இறுதியில் இருக்கும் ஒரு டிவிஸ்ட் ‘அட’ என்று கை தட்ட வைத்திருக்கிறது. அசத்தல் இயக்குநரே..!

படத்தில் இருக்கும் ஒரே குறை.. முத்துக்குட்டி தான் இதுவரையில் செய்ததெல்லாம் தவறுகள்.. பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவற்றை நான் செய்திருக்கவே கூடாது என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதை மட்டும் செய்யாமல் இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியில் வர வேண்டும் என்பதாகவே திரைக்கதை அமைத்தது கருத்தியல் ரீதியாக தவறானது.

ஆனால், ஒரு திரைப்படமாக இப்படிப்பட்ட ஒரு கேரக்டர் கொண்டவரின் கதை என்பதாக எடுத்துக் கொண்டால் இதுவொரு சிறந்த திரைப்படம்தான்.

இத்திரைப்படத்தின் மூலம் கிடைத்துள்ள நீதி.. ஆண், பெண் இயக்குநர்கள் என்ற பேதத்தையெல்லாம் இனிமேல் பார்க்கவே கூடாது என்பதைத்தான்..! அந்த அளவுக்கு ஒரு கிரிமினல்தனத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். பாராட்டுக்கள் மேடம்..!

படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்..!

Our Score