full screen background image

யாத்திசை – சினிமா விமர்சனம்

யாத்திசை – சினிமா விமர்சனம்

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இடை சங்கப் பாண்டியர்களில் புகழ் பெற்ற மன்னனான ரணதீரனின் வாழ்க்கை வரலாற்றையும், எயினர் என்ற மறைக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் இந்த ‘யாத்திசை’.

வரலாற்றுப் புனைவாக உருவாகியுள்ள இத்திரைப்படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

பாண்டிய மன்னன் அரிகேசரியின் முதுமையைக் காரணமாக வைத்து, அவர்களை வீழ்த்த தயாராகிறார்கள் சேரர்கள்.  அவர்களுக்கு ஆதரவாக சோழர்கள், வேளிர்கள், சிறு குழுக்கள் உடன் நிற்க, அரிகேசரியின் மகனான ரணதீரன்(சக்தி) பாண்டிய படைக்கு தலைமை ஏற்கிறான்.

போரில் பாண்டியர்கள் வெற்றி பெற, சோழர்களுக்கு ஆதரவாக நின்ற எயினர்கள் பாலை நிலத்துக்கு விரட்டப்படுகின்றனர். சேர, சோழர்களே ரணதீரனை கண்டு அஞ்சிய சூழலில், எயினர்கள் குலத்தில் பிறந்த கொதி (சேயோன்) பாண்டியர்களை விரட்டி அடிக்கிறான்.

கொதியின் இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது, அவனின் வெற்றி நீடித்ததா? இல்லையா? என்பதற்கான விடை சொல்வதே படத்தின் மீதிக் கதை.

யாத்திசை, வரலாற்றுக்கு எவ்வளவு நெருக்கமாகப் படத்தை உருவாக்க முடியுமோ, அவ்வளவு நெருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளிவந்த மன்னர் காலத்து படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படம். நிலப்பரப்பு, கோட்டை, மொழி, ஆடை – அணிகலன்கள். ஆயுதம், போர், உணவு என எல்லாம் ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டைப் பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளது.

அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். பேரரசுக்கும், சிறு குழுவுக்குமான மோதல்தான் படத்தின் கதை என்றாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றிப் படமாக மாற்ற முயற்சித்துள்ளார் இயக்குநர். அதேபோல், உணர்ச்சி மேலிடும் அளவிற்கான உணர்ச்சிவயமிக்க காட்சிகள் இல்லை.

படத்தின் முக்கியமான பலம் நடிகர்கள் தேர்வு.  குரு சோமசுந்தரம், சுபத்ரா, செம்மலர் அன்னம் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள். கொதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேயோன், ஒற்றைக் கோமணத்துடன் வந்து மிரட்டும் பார்வையால் படம் முழுவதும் அசரடிக்கிறார்.

ரணதீர பாண்டியனாக நடித்திருக்கும் சக்தி கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சித நடிப்பை வழங்கியுள்ளார்.  எயினர் இனத்துப் பூசாரியாக வரும் குரு சோமசுந்தரத்தை அடையாளமே காண முடியவில்லை.  தேவரடியார்களாக நடித்துள்ள ராஜலட்சுமி, வைதேகி ஆகியோரும் ரசிக்கும்படி நடித்துள்ளனர்.

சக்ரவர்த்தியின் பின்னணி இசை காலத்தை ஓரளவு காலத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. போர் காட்சிகளில் மட்டும் அந்த தன்மை இல்லை.

ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை ஆகிய மூன்று நிலப்பரப்பை அழகாக காட்சிப் படுத்தியுள்ளார்.

சண்டைக் காட்சிகளின்போது, படை வீரர்களைப் பல்லாயிரக்கணக்கில் காட்டிவிட்டு, அவர்கள் மோதும்போது ஏதோ ஐநூறு, ஆயிரம் பேர் சண்டை இடுவது போன்ற உள்ளது.

ஒளிப்பதிவாளரின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது. அவரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மகேந்திரன் கணேசனுக்கு வாழ்த்துகள்.

இயக்குநரே இந்தப் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அதிகாரம், போர், ஆட்சி தொடர்பாக வரும் வசனங்கள் தனித்து தெரியும் அளவிற்கு உள்ளன. அதேபோல், படத்தில் ஏழாம் நூற்றாண்டு தமிழ் வியப்பை ஏற்படுத்துகிறது.

படத்திற்கு Motion graphics கைகொடுத்த அளவிற்கு சவுண்ட் மிக்ஸ்ஸிங் கை கொடுக்கவில்லை. டப்பிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கலை இயக்குநரின் பணி பாராட்டத்தக்கது. குடியிருப்பு, அரண்மை போன்றவவற்றை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்.

படத்தின் ஒட்டு மொத்தக் கதையும் எயினர் கூட்டத்தை சேர்ந்த பெரியவர் சிறுவன் ஒருவனிடம் சொல்கிறார். அந்த சிறுவன் யார்?. தேவரடியாராக இருக்கும் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு என்ன காரணம்? சோழர்கள் மீது கொதி அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறான். அது ஏன்? இது போன்ற பல கேள்விகளுக்குப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பதில் சொல்லப்படலாம்.

குறைந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த யாத்திசை, ரசிகர்களை பாண்டியர் காலத்துக்கு அழைத்து சொல்லும் என்பதில் ஐயமில்லை!

RATING – 4 / 5

Our Score