Third Eye Entertainment சார்பில் தயாரிப்பாளர் தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரித்துள்ள திரைப்படம் ‘யாருக்கும் அஞ்சேல்.’ .
இந்தப் படத்தில் பிந்து மாதவி, தர்ஷனா பானிக் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநரான ரஞ்சித் ஜெயக்கொடி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள். அப்போது அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் அதை எதிர்கொள்ளும்விதத்தை, உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் சகோதரிகளாக பிந்து மாதவியும், தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இதுவரையிலும் இரண்டே படங்களை இயக்கியிருந்தாலும், இரண்டிலும் புதுமையான களத்தில் நேர்த்தியான கதை சொல்லலில் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி. அவர் படங்களை வழங்கும் முறையினை காட்டிலும், அவர் படங்களுக்கு வைக்கும் தலைப்பு அனைவரையும் கவர்ந்துவிடுகிறது.
நடிகர் சிலம்பரசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இப்படத்தின் தலைப்பான ‘யாருக்கும் அஞ்சேல்’ தலைப்பினை வெளியிட்டுள்ளார்கள். வெளியான நொடியிலேயே அனைவரையும் கவர்ந்து, வைரலாக இத்தலைப்பு தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசும்போது. “இந்தப் படத்தில் மிக கடினமாக இருந்தது படத்திற்கு தலைப்பு வைக்கும் பணிதான். பலவிதமான தலைப்புகளை அலசி, இறுதியாக ‘யாருக்கும் அஞ்சேல்’ எனும் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தோம்.
ரசிகர்கள் முழுப் படத்தினையும் பார்த்து முடிக்கும்போது, இந்த தலைப்புதான் மிகச் சரியானது என்பதை உணர்வார்கள். படத்தின் தலைப்பை அன்பிற்காக நடிகர் சிலம்பரசனும், நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டதால், படத்தின் தலைப்பு பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது.
இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் 30 நாட்களில் ஊட்டியில் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் அப்பணிகளும் முடிவடையவுள்ளது…” என்றார்.
ஃபர்ஸ்ட் லுக், டிரெயிலர், இசை வெளியீடு மற்றும் திரை வெளியீடு பற்றி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.