காலேஜ் குமார் – சினிமா விமர்சனம்

காலேஜ் குமார் – சினிமா விமர்சனம்

MR Picture என்கிற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்.பத்மநாபா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ‘இளைய திலகம்’ பிரபு, மதுபாலா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராகுல் விஜய், பிரியா வட்லமணி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். நாசர், மனோபாலா, சாம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1996-ம் ஆண்டு இயக்குநர் சீமான் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தில்தான் பிரபுவும், மதுபாலாவும் ஜோடியாக நடித்திருந்தனர். அந்தப் படத்திற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் நடிகர் பிரபுவின் 225-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – குரு பிரசாத் ராய், இசை – குதூப் ஈ கிருபா, படத் தொகுப்பு – கே.எம்.பிரகாஷ், வசனம் – ஆர்.கே.வித்யாதரன், மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, இயக்கம் – ஹரி சந்தோஷ்.

குடும்பங்களை முன் வைத்து இந்தியாவில் எந்த மொழியில் திரைப்படங்களை தயாரித்தாலும் அது அடுத்தடுத்த மொழிகளில் ரீமேக் செய்யப்பட வாய்ப்புண்டு. குடு்ம்பமே முக்கியம் என்று வாழும் இந்திய சமூகத்தில் இதுவொரு எழுதப்படாத விதி.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் விக்கி வருண், சம்யுக்த ஹெக்டே நடிப்பில் உருவாகி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘காலேஜ் குமார்’.

‘படி… படி’ என்று உயிரையெடுத்த அப்பாவிடம், ‘நீ காலேஜூக்கு போய் படித்துப் பார்’ என்று மகன் சவால் விட.. அந்தச் சவாலை ஏற்று அப்பாவும் காலேஜூக்கு போய் படிக்க.. அவரால் படிக்க முடிந்ததா..? தேர்வு பெற முடிந்ததா..? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைக் கரு.

பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர் பிரபு. தனது நண்பரான ஆடிட்டர் அவினாஷின் அலுவலகத்தில் பியூன் வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் தனது மகன் பிறந்த சந்தோஷத்தில் டீ டம்ளர்களை நழுவவிட.. ஆடிட் பேப்பர்களின் மீது அவைகள் கொட்டி விடுகின்றன. இந்தக் கோபத்தில் அவினாஷூக்கும், பிரபுவுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

அப்போது தன்னை ஆப்டரால் படிக்காதவன் என்று கேலி செய்த அவினாஷிடம், தன் பையனை ஆடிட்டராகி காட்டுவதாக சவால் விட்டுவிட்டு வருகிறார் பிரபு.

இதற்கடுத்து தனது மகனை கண்ணும், கருத்துமாய் வளர்த்து வருகிறார். சின்ன வயதில் இருந்தே ‘படி.. படி..’ என்று சொல்லி உயிரையும் வாங்குகிறார். பிளஸ் டூ வரையிலும் திக்குமுக்காடி படித்த மகனை, கல்லூரியில் வணிகவியல் துறையில் கொண்டு வந்து சேர்க்கிறார் பிரபு.

நாயகன் ராகுல் விஜய்க்கு படிப்பு ஏறவே இல்லை. பிளஸ் டூவரைக்கும் தமிழ் மீடியத்தில் படித்தவர் கல்லூரிக்கு வந்ததும் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்ததால் படிக்க முடியாமல் திணறுகிறார். அதே கல்லூரியில் படிக்கும் அவினாஷின் மகளான பிரியா வட்லமணியை பார்த்தவுடன் படிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு காதலிக்கத் துவங்குகிறார் ராகுல்.

ஒரு பக்கம் படிப்பை மறந்துவிட்டு.. அப்பாவிடமும், அம்மாவிடமும் கல்லூரியில் படிப்பில் முதலிடம் நான்தான் என்று பொய் சொல்லிவிட்டு கெத்தாகத் திரிகிறார் ராகுல். கல்லூரிக்குள் நடக்கும் அடிதடி, பஞ்சாயத்துக்களிலும் ராகுல் கலந்து கொள்ள.. அவர் கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறார்.

தொடர்ந்து அப்பாவான பிரபுவுக்கு அழைப்பு வருகிறது. கல்லூரிக்குச் சென்ற பிரபுவிடம் ராகுலின் படிப்பு ஹிஸ்டரி புட்டு புட்டு வைக்கப்படுகிறது. தான் கட்டியிருந்த மனக்கோட்டை மணல் கோட்டையாகி சிதைந்து போனதை நம்ப முடியாமல் ஆத்திரப்படுகிறார் அப்பா பிரபு.

மகனோ “எனக்கு படிப்பு வரலப்பா. ஏன்ப்பா என்னை டார்ச்சர் பண்றீங்க.. நீங்க வேண்ணா போய் படிச்சு பாஸ் பண்ணிக் காட்டுங்க…” என்கிறான். “அப்போ நீ வேலைக்குப் போய் உழைச்சு சம்பாதிக்கிறியா.. நான் காலேஜ் போய் படிக்கிறேன்…” என்கிறார் அப்பா பிரபு.

மகனும் இந்த டீலிங்கிற்கு ஒத்துக் கொள்ள.. பிரபு அதே கல்லூரியில் பி.காம். படிக்க அப்ளை செய்கிறார். சீட்டும் கிடைக்கிறது. படிக்கத் துவங்குகிறார். மகன் ராகுலோ குடும்பத்திற்காக உழைக்கத் துவங்குகிறார்.

இறுதியில் என்னாகிறது..? அப்பா பிரபு படித்து முடித்தாரா..? மகன் ராகுல் தன் சபதத்தில் ஜெயித்தாரா என்பதுதான் இத்திரைப்படத்தின் சுவையான திரைக்கதை.

ஹீரோவான ராகுல் விஜய்க்கு இது முதல் தமிழ்ப் படம். அறியாத முகமாக இருந்தாலும் நடிப்பில் சோடை போகாமல் சிறப்பாக நடித்திருப்பதால் பிடித்த முகமாக மாறிவிட்டார். நடனம், சண்டை காட்சிகள்.. கூடவே பழுத்த நடிப்பு அனுபவம் கொண்ட பிரபு, மதுபாலாவுக்கு ஈடு கொடுக்கும்வகையில் நகைச்சுவை டயலாக்குகளை அள்ளி வீசும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

அலட்சியமாக ‘நீ போய் படி.. நான் வீட்டைப் பார்த்துக்குறேன்..’ என்று சொல்லிவிட்டாலும் வீட்டுப் பிரச்சினைகள் மலை போல சூழும்போது அவர் காட்டும் ‘ஐயோடா சாமி‘ எக்ஸ்பிரஷன்கள்.. ‘பாவம்டா’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

இத்தனை பணக் கஷ்டத்தைத் தாண்டித்தான் அப்பா தன்னைப் படிக்க வைக்கிறார் என்பதை அவர் உணரும்போதே படம் ஜெயித்துவிட்டது. அந்த உணர்வுகளை தனது கதாபாத்திரத்தின் மூலமாக சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார் ராகுல். பாராட்டுக்கள்.

படத்தில் பிரபுவும் இன்னொரு ஹீரோதான். அப்பாவியான கதாபாத்திரமெல்லாம் பிரபுவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல.. அதனால்தான் ‘சின்னத்தம்பி’யை இன்னமும் தமிழ்ச் சினிமாவில் யாராலும் முறியடிக்க முடியவில்லை.

அப்பாவித்தனமாய் தனது முதலாளி அவினாஷிடம் பேசிவிட்டு பின்பு அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு சவால் விடும் காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார் பிரபு.

இதேபோல் பையனை கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சி.. படிக்க வைப்பதும்.. அவன் சொல்வதையெல்லாம் அப்பாவியாய் நம்பிக் கொண்டு இருப்பதும் நகைச்சுவையைக் கொடுத்திருக்கிறது.

உண்மை தெரிந்து கோபத்தில் ‘நானே போய் படிக்கிறேன்’ என்று கல்லூரிக்குச் சென்றவர்.. கல்லூரிக்குப் போன சில நாட்களிலேயே தனது உடை, நடை, பாவனைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து யூத்தாக தன்னைக் காட்டிக் கொள்வதெல்லாம் செம ஜோர்.. இது இந்தக் கதாபாத்திரத்திற்கே பிரபுவை செதுக்கியதுபோல தெரிகிறது.

தன் பையன் படும் கஷ்டத்தை அவர் உணரும்போதும், படிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அவர் அனுபவ ரீதியாக தெரிந்து கொள்ளும்போதும் ஒட்டு மொத்தமாய் அனுதாபத்தை வரவழைத்துவிட்டார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியா வட்லமணி குறைவான காட்சிகளே வந்தாலும் திரைக்கதை நகர்வதற்கு பெரிதும் உதவியிருக்கிறார். பாடல் காட்சிகளில் அழகாகத் தெரிகிறார். ஆனால் ரசிகர்களின் மனதைக் கவர்வதற்கு இன்னமும் ஏதாவது செய்தாக வேண்டுமே..! காத்திருப்போம்.

பிரபுவின் மனைவியாக மதுபாலா.. சற்றே ஓவர் ஆக்டிங் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பைப் பிழிந்து எடுத்திருக்கிறார். அவருடைய ஒல்லியான உடல் வாகுவும், தோற்றப் பொலிவும் சற்றே இடைஞ்சலைத் தருகிறது.

கண்டிப்பான பிரின்ஸிபாலாக நாசர், காமெடியான புரொபஸராக மனோபாலா, கல்லூரி அலுவலக வாட்ச்மேனாக சாம்ஸ் என்று மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மனோபாலாவும், சாம்ஸூம் இடையிடையே கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் குரு பிரசாத் ராயின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கிறது. லொகேஷன்கள் அதிகம் இல்லாததாலும் வீட்டின் உள்புறம், மற்றும் கல்லூரிகளையும்  அழகாகக் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் நடிகர், நடிகைகளின் வண்ண, வண்ண உடைகளைப் போலவே ஒளிப்பதிவும் கண்ணைப் பறிக்கிறது.

இசையமைப்பாளர் குதூப் ஈ க்ருபாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம் என்றாலும், இந்தப் படத்திற்கு இது போதுமே என்றும் சொல்லலாம்.  சந்தடிச்சாக்கில் பிரபு-மதுபாலா ஜோடியின் புகழ் பெற்ற பாடலான ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் ‘உன் உதட்டோரச் சிவப்ப’ பாடலை பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதுவும் ஒரு கவன ஈர்ப்பாக இருக்கிறது.

நம்ப முடியாத கதைதான். இப்போதைய கல்வி முறையில் இத்தனை வருடங்கள் கழித்து ஒருவர் கல்லூரியில் சேர்வதே முடியாத காரியம். தொலை தூரக் கல்வியில் வேண்டுமானால் படிக்கலாம். ஆனால் ஒரு கதை ஆர்வத்தில் இப்படி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

தற்போதைய சமூகச் சூழலில் குடும்பச் சிதைவுகளும், குடும்ப உறவுகளின் புரிந்து கொள்ளாமையால் விளையும் மோதல்களால்… பிரிவுகள் அதிகமாகி சமூகத்திற்கே ஒரு அபாயத்தை கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில் இது போன்ற திரைப்படங்களின் வருகையை ஆதரிக்க தேவையும் இருக்கிறது.

“பெற்றோர்கள் படி.. படி..” என்று உயிரை எடுக்கிறார்கள் என்று பிள்ளைகளும்.. “எத்தனை வசதி செய்து கொடுத்தாலும் படிக்கவே மாட்டேங்குதுக…” என்று பெற்றோர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இருவருக்குமே ஒரு சேர ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது இத்திரைப்படம்.

அதே சமயம் எந்த வயதிலும் முயற்சி செய்தால் கல்வி கற்கலாம் என்பதையும், அதே நேரம் அந்தக் கல்வி மட்டுமே ஒருவனின் முன்னேற்றத்துக்கான வழி என்று சொல்லி.. கல்வி என்னும் பெரும் சுமையை பிள்ளைகளின் முதுகில் ஏற்றிவிடக் கூடாதென்ற நல்ல கருத்தையும் முன் வைத்திருக்கிறார் இயக்குநர்.

வெறும் படிப்பும், சான்றிதழும், மிகப் பெரிய வேலையும் மட்டுமே ஒருவனையோ / ஒருத்தியையோ முழுமையாக்கிவிடாது. படித்தக் கல்வியினால் அதை வைத்து அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில்தான் அவர்கள் கற்றுக் கொண்ட கல்வியின் மதிப்பே இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. அந்தத் திறமையை வெளிக்கொணரும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தால் அவன் படித்த படிப்பு கொடுக்கும் வாழ்க்கையைவிடவும் மேலான வாழ்க்கையை வாழ்வான். இதைத்தான் இந்தப் படத்தின் இறுதியில் நாயகன் ராகுலின் வாழ்க்கை மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் எப்படியெல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர்.. தங்களால் முடியாத விஷயத்தை ‘படிப்பு’ என்னும் காரணத்தினால் அனுபவிக்கும் மாணவர்களின் கஷ்டத்தையும் இந்தப் படத்தின் மூலமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். 

இந்திய சினிமாவில் குடும்பக் கதை என்றாலே அது ஒரு வழக்கமான திரைக்கதையில் இருக்கும். அந்தத் திரைக்கதையிலேயே இந்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

அதனாலேயே குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்று குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை..!

Our Score