full screen background image

யாரோ – சினிமா விமர்சனம்

யாரோ – சினிமா விமர்சனம்

TAKE OK PRODUCTIONS நிறுவனத்தின் சார்பில் வெங்கட் ரெட்டி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டியே இதில் நாயகனாக நடித்துள்ளார். உபாசனா நாயகியாக நடித்துள்ளார். மேலும்  பாலா, ராஜன் கிருஷ்ணமூர்த்தி, சம்ராகினி, துரைராஜ் என்ற பல புதுமுக நடிகர், நடிகைகளே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளினின், ஒளிப்பதிவு – K.B. பிரபு, படத் தொகுப்பு – அனில் க்ரீஷ், கலை இயக்கம் – மோகன மகேந்திரன். இயக்குநர் சந்தீப் சாய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை TRIDENT ARTS நிறுவனத்தின் சார்பில் ஆர்.ரவீந்திரன் வெளியிட்டுள்ளார்.

இது ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படம் என்றும், ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை என்றும் இயக்குநர் கூறியிருந்தார். ஆனால்..?

கடற்கரையோரமான ஒரு பெரிய பங்களாவில் வசித்து வருகிறார் நாயகன் வெங்கட் ரெட்டி. பில்டிங் கட்டுவதற்கான டிசைனராக வேலை செய்து வருகிறார். சமீப நாட்களாக அவருடைய வீட்டில் வேறு யாரோ சிலரும் இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது.

இதையடுத்து தனது நண்பனிடம் இது குறித்து உதவி கேட்கிறார். அந்த நண்பன் ஒரு போலீஸ் அதிகாரியையும் உடன் அழைத்து வருகிறான். போலீஸ் அதிகாரியும் வெங்கட்டுடன் நட்பு பேணுகிறார்.

அதே வீட்டில் ஒரு கேமிரா கிடைக்கிறது. அந்தக் கேமிராவில் யாரோ ஒருவர் ஒரு ஆளை, அதே வீட்டில் வைத்து கொலை செய்வது படமாக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து இந்த வீட்டில் தனக்குத் தெரியாமல் ஏதேதோ நடக்கிறது என்று சித்தப் பிரமை பிடித்தாற்போல் பேசுகிறார் வெங்கட். இதற்காக மன நல சிகிச்சையையும் பெற்று வருகிறார்.

எதிர்பாராதவிதமாக அந்த வீட்டுக்குள் ஒரு கொலை நடந்துவிட.. அதை மறைக்க படாதபாடு படுகிறார் வெங்கட். இந்த நேரத்தில் அந்த போலீஸ் அதிகாரியும் வெங்கட்டை சந்தேகத்தோடு பார்க்க.. வேறு வில்லன்களும் வெங்கட்டை சூழ.. உண்மையில் அந்த வீட்டில் என்னதான் நடக்கிறது என்பதை படம் பார்க்கும் தைரியம் இருப்பவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தயாரிப்பாளரே, நடிகராகவும் அமைந்துவிட்டதால் முதலில் இருந்து கடைசிவரையிலும் அவர்தான் பிரேம் பை பிரேம் காட்சியளிக்கிறார். ஒரு குழப்பமான மனிதருக்குரிய கேரக்டர் ஸ்கெட்ச்சை தனது முகத்திலேயே தூக்கிக் கொண்டு கடைசிவரையிலும் அலைந்திருக்கிறார் மனிதர். இது ஒன்றுதான் இவருக்கான பாஸிட்டிவ் கமெண்ட்.!

நாயகி உபாசனாவுக்கு நடிப்பைக் காண்பிக்கக் கூடிய அளவுக்கான காட்சிகளும் இல்லை. திரைக்கதையும் இல்லை. மற்றவர்களுக்கும் அப்படியே.. ஏதோ டிவி நாடகக் காட்சிகளை போல திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். இதனாலேயே இடைவேளைக்கு பின்பு எப்போது எண்ட் போடுவார்கள் என்று நம்மை கேட்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

விட்டுவிட்டு வரும் மின்சாரம்போல இதில் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது. போதாக்குறைக்கு வசன ஒலிப்பதிவில் கோட்டை விட்டதால் பல இடங்களில் சின்க் தடுக்கிறது. படத் தொகுப்பிலும் தகராறு என்பதால் காட்சிகளின் வரிசையிலும் குழப்பம். ஒரு காட்சி முடிவதற்குள்ளாக அடுத்தக் காட்சி வந்து விழுகிறது.

இசை என்ற ஒன்று எதற்கு என்பது போலவே இந்தப் படத்தில் இசையமைப்பாளரை பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை என்பது திரில்லர் படங்களில் பயமுறுத்த வேண்டாமா..?

நாயகனின் சிறு வயது கதாபாத்திரக் கதையை வைத்து கிளைமாக்ஸை முடிக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதைக்கூட முழுமையாகச் செய்யாமல் இவ்ளோதான் கதை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் அரைகுறை இயக்குதல் திறமையோடு இந்த இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படம் பிடிக்கவில்லையென்று வந்து சொன்னால் படத்திற்கான செலவுத் தொகையைத் தான் தந்துவிடுவதாக இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான வெங்கட் ரெட்டி கூறியிருந்தார்.

இப்படிப் பேசியதை நிஜம் என்று நம்பி யாராவது வந்து கேட்டுவிடப் போகிறார்கள். தப்பித்துக் கொள்ளுங்கள் தயாரிப்பாளரே..!

RATING : 2 / 5

Our Score