‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என்ற பெரிய பட்ஜெட் படங்களை அனாயசமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்போது சத்தமில்லாமல் மீடியம் பட்ஜெட் படமொன்றை தயாரித்திருக்கிறது.
இயக்குநர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய டி.கார்த்திகேயன் என்ற டிகேதான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ‘கழுகு’ கிருஷ்ணா, ஆதவ்கண்ணதாசன், கருணாகரன், ரூபா மஞ்சரி, அனஸ்வரா, ஓவியா, பாலாஜி மோகன், போஸ் வெங்கட், தேவிபிரியா, சோனா, மயில்சாமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ராம்மி. எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இசை என்.பிரசாத். செந்தில்ராகவன் கலை இயக்குநராகவும், வீணா சங்கரநாராயணன் உடை அலங்காரத்தையும், ஒப்பனையை லலிதா ராஜமாணிக்கமும் கவனிக்கிறார்கள். சண்டை பயிற்சி திலிப் சுப்புராயன். எல்ரெட்குமாரும், ஜெயராமனும் இணைந்து தயாரிக்க எழுதி, இயக்கியிருக்கிறார் டி.கே. இந்தப் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நேற்றைக்கு ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் நடைபெற்றது.
திரையிட்டுக் காட்டிய டிரெயிலரிலேயே கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பாழடைந்த பங்களா. முன்பு ஹோட்டலாக இருந்தது. இப்போது மூடிக் கிடக்கிறது. தனது தாத்தாவின் சொத்தாகக் கிடைத்திருக்கும் அதனைத் திறந்து ஹோட்டல் நடத்துகிறார் கிருஷ்ணா. ஆனால் அந்த ஹோட்டல் பங்களாவில் பேய் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அங்கே ஏதோ நடமாடுவதாக அவர்களுக்கும் தெரிகிறது.. அது பேயா, இல்லை பிசாசா என்று தேடுகிறார்கள். இடையில் அவர்களுக்குள் காதலும் இருக்கிறது.. கடைசியில் எது என்று கண்டறிந்தார்களா என்பதுதான் கதை.
“இது மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கே..?” என்று இயக்குநரிடம் கேட்டபோது, “ஆமாம். உண்மைதான். நான் இல்லைன்னு சொல்ல்லை. ஆனா நான் இந்தப் படத்துல புது டிரீட்மெண்ட் செஞ்சிருக்கேன். புது திரைக்கதை.. இந்தப் புது திரைக்கதைல இந்தப் படத்தை நான் எப்படி எடுத்திருக்கேன்னு பாருங்க..” என்றார்.
படப்பிடிப்பும முழுவதும் நைனிடாலில் நடந்துள்ளது. அங்கேயே 55 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்து ஷூட்டிங்கை நடத்தி வந்திருக்கிறார்கள். கடுமையான உழைப்பாம்.. “படத்தில் நடித்தவர்களே மற்ற தொழில் நுட்ப வேலைகளிலும் உதவிகளைச் செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக 2 நாட்கள் ஷூட்டிங் எடுத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் டயர்டே வரலை…” என்றார் படத்தில் ஒரு ஹீரோவான கிருஷ்ணா.
“தொடர்ந்து மலையோர கதைகளிலேயே நடிக்கிறீர்களே…?” என்று கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு.. “அப்படியில்லை.. இது ‘கழுகு’ படத்துக்கு அப்புறமா சைன் பண்ணின படம். இப்போ அடுத்து நான் நடிக்குற ‘விழித்திரு’ படம் சிட்டி சப்ஜெட்டுதான். இது ஏதேச்சையாக வந்திருச்சு..” என்றார்.
படத்தின் இன்னொரு ஹீரோவான ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடி அனஸ்வரா. இருவருக்கும் ஒரு டூயட்கூட உண்டு. ‘வெள்ளை பந்து’ என்ற அந்தப் பாடல் காட்சி ரம்மியமாகப் படமாக்கப்பட்டுள்ளது. கங்கிராட்ஸ் டூ டீம்.
படத்தில் முக்கிய தொழில் நுட்பப் பணிகளில் பெண்கள்தான் வேலை பார்த்திருக்கிறார்கள். அந்த வகையிலும் இந்தப் படம் குறிப்பிடத்தக்க படம்தான். நடனத்தை பிருந்தா மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த விஜி செய்திருக்கிறார். மேக்கப்பை லலிதா ராஜமாணிக்கம் என்ற பெண்ணும், காஸ்ட்யூம்ஸை வீணா சங்கரநாராயணன் என்ற பெண்ணும் செய்திருக்கிறார்கள். ஆக.. அவுட்டோர் ஷூட்டிங்கில் எந்தவித பயமுமில்லை என்றார் ஹீரோயின் ரூபா மஞ்சரி.
இந்த பிரஸ் மீட்டில் படக் குழுவினரை மேடைக்கு அழைத்து, அமர வைத்து.. அவர்களை பேச அழைத்து.. பிரஸ்காரர்களுக்கு மீடியேட்டர் வேலை பார்த்த்தெல்லாம் படத்தின் ஹீரோவான கிருஷ்ணாதான். ஈகோயில்லாமல் அவர் செய்த வேலைகளையெல்லாம் வேறு ஹீரோக்கள் அவர்களுடைய படங்களில் செய்வார்களா என்பதுகூட சந்தேகம்தான்..!
கிருஷ்ணாவின் நடிப்பை பார்த்து பிரமித்திருக்கும் ஹீரோயின் ரூபா மஞ்சரி, தன்னுடைய பேச்சில் “இந்தப் படம் ரிலீஸான பின்பு ஹீரோ கிருஷ்ணாவை கைலேயே பிடிக்க முடியாது…” என்றார் பெருமையாக.. என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டும், வேண்டுமென்றே ரூபா மஞ்சரியிடம், “நீங்க பேசும்போது கிருஷ்ணாவை கைல பிடிக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதுக்கென்ன அர்த்தம்..?” என்று மீடியா பக்கம் இருந்து வந்த ஒரு குரல் கேட்க.. பாவம் ரூபா மஞ்சரி சங்கடத்துடன் “என்னங்க இப்படீல்லாம் கேக்குறீங்க..?” என்று கேட்டது வருத்தமாக இருந்தது..
இந்தக் கேள்வி பிரஸ் மீட்டுக்கே திருஷ்டி போட்டுவிட்டது..!
மீடியாவுக்கும் சென்சார்ஷிப் தேவைதான் போல..!