யுவன் ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில், காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘யாக்கை’, வரும் பொங்கல் திருநாளன்று வெளியாக இருக்கிறது.
‘பிரிம் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் முத்துக்குமரனின் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கியிருக்கும் ‘யாக்கை’ திரைப்படத்தில் கிருஷ்ணா – சுவாதி ரெட்டி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நீ எந்தன்’ என்கிற பாடலை தனுஷ் பாடியிருக்கிறார்.
‘யாக்கை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கிறதாம். இது தொடர்பாக பேசிய தயாரிப்பாளர் முத்துக்குமரன், “நம்முடைய விவசாயத்தையும், அதற்கு மூல காரணமாக இருக்கும் விவசாயிகளையும் கௌரவிக்கும் திருநாள் – பொங்கல். அப்படிப்பட்ட உன்னதமான நாளில் எங்கள் ‘யாக்கை’ திரைப்படத்தை வெளியிடுவதில், நாங்கள் பெருமை கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் ‘பிரிம் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு இது சிறப்பும்கூட. ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த ‘யாக்கை’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
எங்களின் ‘யாக்கை’ படமும் ரசிகர்களின் உள்ளம் கவரும் திரைப்படமாக இருக்கும். பொங்கல் திருநாளும் – ‘யாக்கை’ திரைப்படமும் ஒன்றாக இணைந்து ரசிகர்களின் மகிழ்ச்சியை மென்மேலும் அதிகரிக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறினார்.









