ஒரு ஆபாச இணையத் தளத்தின் பெயரில் ஒரு புதிய தமிழ்த் திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் ‘எக்ஸ் வீடியோஸ்’ (X VIDEOS).
இந்தப் படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார்.
ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ், இசை – ‘மெட்ரோ’ புகழ் ஜோஹன், படத் தொகுப்பு – ஆனந்தலிங்க குமார், கலை இயக்கம் கே.கதிர்.
இந்தப் படத்தை சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரில்லு பாஸ்கர் ஆகியோரிடமும் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
“இந்தத் தலைப்பே ஒரு ஆபாச இணையத் தளத்தின் பெயராச்சே..? அப்படியானால் படம் அதைப் பற்றித்தான் பேசுகிறதா..?” என்று இயக்குநர் சுஜோ சுந்தரிடம் கேட்டால், “ஆமாம்… இது ஆபாசப் படம்தான்…” என்று தைரியமாகக் கூறுகிறார்.
தொடர்ந்து படம் பற்றி இயக்குநர் சுஜோ சுந்தர் பேசுகையில், “மக்கள் இதை ‘ஆபாசப் படம்’ என்றே நினைக்க வேண்டும். அதற்காகத்தான் இப்படி ஒரு பெயரை வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது. பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில், பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை,
இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால், ‘ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவுதான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும்’ என்பதுதான். இதுவே இத்திரைப்படம் தரும் எச்சரிக்கை.
இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்டமான ஒரு உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் அடுத்த நொடியில் எல்லாமே பகிரங்கம்தான். அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான் இந்த எக்ஸ் வீடியோஸ்.
ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே. கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.
சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது. இந்த ‘எக்ஸ் வீடியோஸ்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது..” என்றார் இயக்குநர் சுஜோ சுந்தர்.