நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் ‘ரைட்டர்’ படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வருகிறது.
இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பிராங்ளின், சமுத்திரக்கனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி.எம்.சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, படத் தொகுப்பாளர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி, யு.எம்.ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசும்போது, “தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாகத்தான் என்னை சந்தித்தார். ‘காலா’ படத்தை முதல் நாளில் இரண்டு முறை பார்த்துள்ளார். முதலில் அவர் நான் இயக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. பிறகு ‘ரைட்டர்’ படத்தைப் பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க வைத்தோம்.
அதிதிக்கு சமூக அக்கறை உள்ள படங்களை தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள்தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஐந்து படங்களாவது தயாரிக்கலாம் என பேசி முடிவெடுத்தோம்.
கதை தேர்வில் நான் முதலில் இருந்தே பிடிவாதமாக இருந்தேன். முதலில் கதை எனக்கு பிடித்து இருக்க வேண்டும். தவறான அரசியல் பேசக் கூடாது. எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மக்களுக்கு செல்லும் படம் சரியான படமாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இந்த ‘ரைட்டர்’ படத்தை தயாரிக்க நான் முன் வந்த காரணம் இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாகவும், என் மனதுக்கு நெருக்கமாகவும் இருந்ததுதான்.
இப்படம் சிறப்பாக இருக்கும் என இந்தக் கதையைப் படிக்கும்போதே எனக்கு தோன்றியது. படப்பிடிப்பின்போது இப்படம் டெக்னிக்கலாகவும் அருமையாக வரும் என நினைத்தேன்.
இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் சமுத்திரக்கனி அண்ணனை நடிக்க வைக்கலாம் என்று கூறினேன். நான் எதுவும் சொல்லாமலேயே கதையை படித்துவிட்டு “கதை சூப்பர். கண்டிப்பாக பண்ணலாம்” என்றார் சமுத்திரக்கனி அண்ணன். கண்டிப்பாக தங்கராஜாக வாழ்ந்துள்ளார் என்று சொல்ல வேண்டும். மற்றப் படங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்திலும் அவரது பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது…” என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் என்னுடன் பணி புரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அனைவருக்கும் எனது நன்றி.
இந்த ‘ரைட்டர்’ படம் அருமையான ஒரு குழு சேர்ந்து உழைத்த படம். ஒரு கூட்டு முயற்சி. ஒரு கூட்டு படைப்பை இந்த படத்தில் நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் தங்களது படமாக நினைத்து இந்தப் படத்தில் வேலை பார்த்தனர்.
காலையில் சூட்டிங்கிற்கு சீக்கிரமாகவே சென்று விடுவேன். பிராங்கிளின், கேமராமேன் பிரதீப் ஆகியோரின் வேலைகளை கூர்ந்து கவனிப்பேன். உழைக்கும் ஆட்களைக் கண்டால் நான் அப்படி ரசிப்பேன். உண்மையான உழைப்பை நாம் பேச தேவையில்லை. திரையில் பார்த்த உடன் மக்களே பேசுவார்கள். இந்தப் படம் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியை அடையும்…” என்றார்.
இயக்குநர் பிராங்க்ளின் பேசும்போது, “இது எனக்கு முதல் மேடை. நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முதல் நன்றியை பா.ரஞ்சித் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவின் அனைத்து அடிப்படை முறைகளையும் ரஞ்சித் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் மிகப் பெரிய நன்றியை சொல்ல வேண்டும். சமுத்திரக்கனி அவர்களிடம் இந்தக் கதையை கூறியவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம்” என்றார். இப்படத்தில் தங்கராஜ் என்ற அந்த நாயகன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொண்டு வர காரணமே சமுத்திரக்கனிதான்.
இப்படத்திற்கு என் காட்சி அமைப்புக்கு ஏற்றவாறு பின்னணி இசையை கோவிந்த் வசந்தா அமைத்துள்ளார். கேமராமேன் பிரதீப்பிற்கு தனியே நன்றி சொல்லத் தேவையில்லை. அவர் இப்போது என் குடும்பத்தில் ஒருவர். இப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் ஒரு நல்ல படத்தை உருவாக்க உதவி செய்துள்ளனர். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.












