சுப்ரீம் கோர்ட் வகுத்துக் கொடுத்த விசாகா கமிட்டி வரைமுறைகளின்படி மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விசாரிக்க ஒரு கமிட்டியை உடனடியாக அமைக்க மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி கேரள மாநில பெண்கள் கமிஷன், கேரள உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மலையாள நடிகையொருவர் நள்ளிரவில் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இது குறித்து அந்த நடிகை அங்கத்தினராக இருக்கும் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு தீவிர நடவடிக்கையில் இறங்கவில்லை என்று சொல்லி மலையாள சினிமாவில் இருக்கும் பெண்கள் பலர் இணைந்து ‘Women in Cinema Collective’ என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கினார்கள்.
இந்த அமைப்பின் சார்பில் கேரள உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனுவில் பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் வகுத்துக் கொடுத்த விசாகா கமிட்டியை ‘அம்மா’ அமைப்பிலும், மலையாள திரைத்துறையிலும் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.
இது குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேரள மாநில பெண்கள் கமிஷன், கேரள சாலசித்ரா அகாடமி போன்றவற்றிடம் கேரள உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. இதன்படி கேரள மாநில பெண்கள் கமிஷன் தாக்கல் செய்த அபிடவிட்டில் விசாகா கமிட்டியை தாமதம் செய்யாமல் உடனேயே அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இப்போது இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.