full screen background image

தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா?

தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா?

தமிழ்ச் சினிமாவில் இன்றைக்கு பல உச்ச நடிகர்கள் கோடிகளில் சம்பளத்தை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தாலும், முதன்முதலாக தமிழ்ச் சினிமா துறையில் கோடியில் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் ராஜ்கிரண்தான்.

அவருடைய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு அவர் நடித்து வெளியில் வந்த தொடர் படங்கள் அனைத்தும் தாய்மார்களால் விரும்பிப் பார்க்கப்பட்டதால். மிகப் பெரிய ஹிட்டுக்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் ராஜ்கிரண் நடித்த ‘மாணிக்கம்’ என்ற படத்திற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு கோடி ரூபாய். அந்தச் சம்பளத்தைக் கொடுத்தவர் அந்த ‘மாணிக்கம்’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களான கே.எஸ்.சீனிவாசனும், டி.சிவாவும்.

இது பற்றி இப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கும் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன், “ராஜ்கிரண் நடிக்கவிருந்த புதிய படத்தை வேறொரு தயாரிப்பாளர்தான் தயாரிக்க இருந்தார். ஆனால், “அப்போது ராஜ்கிரணுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் உடனடியாக கால்ஷீட் கிடைக்கும்…” என்றார்கள்.

அந்தத் தயாரிப்பாளருக்கு ஒரு புதன்கிழமைவரையிலும் நேரம் கொடுத்திருந்தார்கள். ஆனால் அவரால் அந்தப் பணத்தைக் கொடுக்க முடியவில்லை. இது எங்களுக்குத் தெரிந்தது. அப்போது டி.சிவா என்னிடம் வந்து “நாம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிப்போம்…” என்று ஐடியா சொன்னார்.

எனக்கும் அது பிடித்துப் போகவே.. இரவோடு இரவாக ஒரு கோடி ரூபாயைப் புரட்டி… மறுநாள் வியாழக்கிழமை காலையிலேயே நடிகர் ராஜ்கிரணை அவரது வீட்டில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் சம்பளத்தைக் கொடுத்தோம். அவருக்கே அது அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன இது..?” என்றார். “ஆமாம் ஸார். இந்தப் படத்தை நாங்களே தயாரிக்கிறோம்…” என்றோம். இதன் பின்பு அவரும் ஒத்துக் கொண்டார். படத்தை இயக்கிய இயக்குநர் கே.வி.பாண்டியன் திறமையான இயக்குநர்தான்.

ஆனால் ஏனோ தெரியவில்லை.. இந்தப் படம் அவ்வளவாக ஓடவில்லை. இதனால் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது.

ஷூட்டிங் நாட்கள் பல முறை தள்ளிப் போடப்பட்டு பல நாட்கள் நடைபெற்றன. அதோடு பல பிரச்சினைகளும் இந்தப் படத்தினால் எழுந்ததால் கடைசியில் நாங்கள் எதிர்பார்க்காத முடிவுதான் கிடைத்தது..” என்று வருத்தப்பட்டிருக்கிறார் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன்.

Our Score