full screen background image

“அஜீத் வாங்கிய கடனை வெளியில் சொன்னதில் என்ன தவறு..?” – அஜீத் ரசிகர்களுக்குப் பதிலளித்த மாணிக்கம் நாராயணன்

“அஜீத் வாங்கிய கடனை வெளியில் சொன்னதில் என்ன தவறு..?” – அஜீத் ரசிகர்களுக்குப் பதிலளித்த மாணிக்கம் நாராயணன்

தயாரிப்பாளர் ‘செவன்த் சேனல்’ மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் அஜீத் தன்னிடம் 6 லட்சம் ரூபாயை கடனாகவும், 12 லட்சம் ரூபாயை படத் தயாரிப்புக்காகவும் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாகப் புகார் சொல்லியிருந்தார்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களிலும், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலின் கமெண்ட் பாக்ஸிலும் அஜீத்தின் ரசிகர்கள் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் கேட்டிருந்த கேள்வி, “பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கையில் இருந்தால் நீங்கள் கோர்ட்டிற்குச் சென்றிருக்கலாமே.. ஏன் செல்லவில்லை..? அஜீத்தை அவமானப்படுத்துவதற்காகவே இதை இப்போது வெளியில் சொல்கிறீர்களா..?” என்றெல்லாம் கேட்டிருந்தார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு இப்போது மீண்டும் அதே தளத்தில் பதில் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

அவர் அளித்த பதிலில், “அந்தச் சம்பவம் நடந்து இப்போது 25 ஆண்டுகளாகிவிட்டது. பொதுவாக பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகள் என்றால் சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குள் வழக்கினை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அது செல்லாது என்பது சட்ட விதி.

நான் 1995-ம் ஆண்டில் அஜீத்திற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அடுத்து தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் அவர் கால்ஷீட் தருவார் என்று சொல்லி காத்திருந்தேன். அவரைப் பின் தொடர்ந்தேன். ஆனால் அது முடியாமல் போன பின்புதான் வெறுத்துப் போய் கைவிட்டேன்.

அதன் பின்பும் பத்தாண்டுகள் கழித்துதான் பத்திரிகைகளுக்கு அஜீத் பற்றி பேட்டியளித்தேன். அவரை அவமானப்படுத்துவதோ, கேவலப்படுத்துவதோ எனக்கு நோக்கமில்லை.

நான் தயாரித்த ‘சீனு‘ படத்தின் இசையை அஜீத்துதான் வெளியிட்டார். என்னுடைய அலுவலகத்தில் தனியாக நிகழ்ச்சியை வைத்து அங்கே அஜீத் வந்திருந்துதான் இசை வெளியிட்டுக் கொடுத்தார். என் மீது எத்தனை அன்பு இருந்தால் அஜீத் அங்கே வந்திருப்பார். இதுவரையிலும் எந்த ஒரு இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் வராத அஜீத் என் படத்தின் இசையை வெளியிட வந்தாரென்றால் என் மீது எவ்வளவு மரியாதையு வைத்திருந்திருப்பார் அஜீத். நான் இதை மறுக்கவே இல்லை.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ‘ரெட்’ படத்தை தயாரித்தபோது அதன் சென்னை விநியோகத்தை வாங்கிக் கொள்ளும்படி என்னை அழைத்து அஜீத் சொன்னார். நானும் மறு பேச்சில்லாமல் வாங்கினேன். ஆனால், அதிலும் எனக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது.

எல்லா விஷயங்களுக்கும் ஆதாரத்தை வைத்துக் கொண்டு பேச முடியாது. கார்த்திக்கிற்கு 45 லட்சம் ரூபாயை தட்டில் வைத்துக் கொடுத்தேன். எப்படி ஆதாரத்தைக் கொடுக்க முடியும்..? ஒரு பரஸ்பர நம்பிக்கையில்தான் ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்கிறார்கள். அட்வான்ஸ் கொடு்க்கிறார்கள். அது பொய்யாகும்பட்சத்தில்தான் பிரச்சினை வருகிறது.

அஜீத் முன்பே என்னை அழைத்து பேசியிருந்தாலே இந்தப் பிரச்சினை இந்த அளவுக்கு வந்திருக்காதே..? செய்யாதது அவருடைய தவறுதானே..? 6 லட்சம் ரூபாயை நான் கொடுத்தது உதவியாகத்தான். அந்த உதவியை அவர்கள் மறக்காமல் திருப்பிக் காட்ட வேண்டும் என்று நான் எதிர்பார்த்ததில் என்ன தவறு..?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

Our Score