1965-ம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்தில் அடியெடு்த்து வைத்தவர் நடிகர் சிவக்குமார்.
அன்றிலிருந்து 2001-ம் வருடம் அவர் கடைசியாக நடித்திருந்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படம் வரையிலும் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்கும் நடிகர் சிவக்குமார், தனக்கென்று ரசிகர் மன்றங்களைத் துவக்க கடைசிவரையிலும் அனுமதி கொடுக்கவேயில்லை.
இப்போது அவருடைய மகன்களான சூர்யா, கார்த்தி இருவருக்குமே ரசிகர் மன்றங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. காலத்தின்போக்கில்தான் நாமும் போக வேண்டும் என்பதால் மகன்களின் ரசிகர் மன்றங்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்காத சிவக்குமார், தனக்கு மட்டும் ஏன் ரசிகர் மன்றம் வைப்பதற்கு அனுமதிக்கவில்லை என்பதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு.

அது என்ன காரணம் என்பதை திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலில் சொல்லியிருக்கிறார்.
1967-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியன்று பொங்கல் தினத்தன்று ‘கந்தன் கருணை’ என்ற படம் தமிழகத்தில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சிவக்குமார் முருகனாக நடித்திருந்தார். முருகனின் தளபதியான வீரபாகுவாக ‘நடிகர் திலகம்’ சிவாஜி நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நேரத்தில் அங்கேயுள்ள ஒரு தியேட்டருக்குப் போய் பார்த்தார் நடிகர் சிவக்குமார். அந்தத் தியேட்டரின் வெளியே ஒட்டப்பட்டிருந்த ‘கந்தன் கருணை’ படத்தின் போஸ்டர்கள் அனைத்திலும் சாணி அடிக்கப்பட்டிருந்தது.
செய்தவர்கள் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள். காரணம், இந்தப் படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் 1967 ஜனவரி 12-ம் தேதியன்று ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா, ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆரை. துப்பாக்கியால் சுட்டிருந்தார். எம்.ஜி.ஆர். மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நேரத்தில், சிவாஜியின் படம் மட்டும் வெளியாகலாமா என்கிற கோபத்தில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், போஸ்டரில் இருந்த சிவாஜியின் முகத்தில் சாணியடித்திருக்கிறார்கள். அதேபோல் அதே போஸ்டரில் இருந்த சிவக்குமாரின் முகத்திலும் சாணியடித்திருக்கிறார்கள். சிவக்குமார் சிவாஜி ஆள் என்று நினைத்து அதையும் செய்துவிட்டார்கள்.
இதைப் பார்த்த நடிகர் சிவக்குமார் பெரிதும் மன வருத்தப்பட்டிருக்கிறார். ஒரு நடிகர் சுடப்பட்டார் என்பதால் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு நடிகரைத் தாக்கும் அளவுக்கு அவரது ரசிகர்களின் மன நிலையிருக்கிறது என்பதை உணர்ந்த நடிகர் சிவக்குமார் அன்றைக்கே இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.
ஒன்று, தன்னுடைய பெயரில் ரசிகர் மன்றத்தைத் துவக்க அனுமதியளிக்கக் கூடாது. இன்னொன்று ஒரு பெரிய நடிகருடன் மட்டுமே தொடர்ந்து நடிக்கக் கூடாது. அனைவருடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற இரண்டு முடிவுகளை அன்றைக்குத்தான் எடுத்திருக்கிறார் நடிகர் சிவக்குமார்.
இதன் பின்பு எம்.ஜி.ஆருடன் ‘காவல்காரன்’ படத்தில் இணைந்து நடித்தார். பின்பு அப்போதைய முக்கிய நாயக நடிகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் போன்ற பலருடனும், பல படங்களில் இணைந்து நடித்து தன் மீது குறிப்பிட்ட ஆள் என்று முத்திரை குத்தாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிவக்குமார்.