கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ரக்சிதா ராம். இவர்தான் தற்போது சூப்பர் ஸ்டாரினி லெவலில் இருக்கிறார். அதிகப்பட்சமான படங்களில் நடித்துக் கொண்டிருப்பவரும் இவர்தான்.
2013-ம் ஆண்டு ‘புல்புல்’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகமான ரக்சிதா ராம் இப்போதுவரையிலும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.
இவர் தற்போது ‘லவ் யூ ரச்சூ’ என்கிற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்றது.
அப்போது இந்தப் படத்தின் நாயகனான அஜய் ராவுடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்திருப்பது குறித்து ரக்சிதாவிடம் பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக கேள்வி கேட்டனர்.
இதற்குப் பதில் அளித்த ரக்சிதா, “இங்கு வந்திருக்கும் பலரும் திருமணம் செய்தவர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். யாரும் சங்கடமாக நினைக்க வேண்டாம்.
பொதுவாக முதலிரவின்போது என்ன செய்வார்கள்? ரொமான்ஸ்தானே செய்வார்கள்! அதுதான் இந்தப் படத்திலும் காண்பிக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகளில் நான் நெருக்கமாக நடித்திருந்தால் அதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அதற்கான காரணத்தை நீங்களே புரிந்து கொள்வீர்கள்…” என்றார்.
ரக்சிதாவின் இந்த நெத்தியடி பதிலால் இவரது பேட்டியளித்த வீடியோ காட்சி யுடியூபில் இப்போது டிரெண்ட்டாகியுள்ளது.









