full screen background image

ஏழ்மையில் வாழும் நடிகைக்கு வீடு கட்டிக் கொடுத்த மலையாள நடிகர்கள் சங்கம்

ஏழ்மையில் வாழும் நடிகைக்கு வீடு கட்டிக் கொடுத்த மலையாள நடிகர்கள் சங்கம்

இந்தியாவிலேயே அமைதியாக, சர்ச்சைகள் அதிகம் இல்லாமல்.. தன்னுடைய சங்க உறுப்பினர்களுக்கு நிறைய உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருப்பது மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்புதான்.

இப்போது மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகையான பீனா ஜோஸப்பிற்கு ‘அம்மா’ அமைப்பே வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது.

60 வயதான மலையாள நடிகையான பீனா ஜோஸப் தன்னுடைய 18-வது வயதில் ‘ரெண்டு முகம்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். ‘கள்ள பவித்ரன்’ என்ற படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் இன்றுவரையிலும் பேசப்பட்டு வருகிறது.

பல திரைப்படங்களில் அம்மா, அக்கா, அண்ணியாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தற்போது நடிக்க வாய்ப்பில்லாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இவரது ஏழ்மை நிலையைக் கவனித்த ‘அம்மா’ அமைப்பு இவருக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் நிதியுதவியை வழங்கி வருகிறது. மேலும் பீனா ஜோஸப்பின் சொந்த ஊரான கும்பளாங்கியில் அவருக்காக சொந்த வீட்டினை ‘அம்மா’ அமைப்பு கட்டித் தரும் என்று அம்மா அமைப்பின் செயலாளரான எடவலா பாபு தெரிவித்திருந்தார்.

சொன்னதுபோலவே அந்த வீட்டினை ‘அம்மா’ அமைப்பு நடிகை பீனா ஜோஸப்புக்கு கட்டிக் கொடுத்திருக்கிறதாம். புதிதாகக் கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை இன்று ‘அம்மா’ அமைப்பின் அலுவலகத்தில் வைத்து நடிகை பீனா ஜோஸப்பிடம் ‘அம்மா’ அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லால் வழங்கியிருக்கிறார்.

 
Our Score