தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
தற்போது 97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரான மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும் புதிய சங்க நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள்.
பதவியேற்ற பின்பு சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் பேசும்போது, “இந்த வெற்றியின் மூலம் நாங்கள் எடுத்துக் கொண்ட பொறுப்பு மேலும் கூடுதலாகியுள்ளது…” என தெரிவித்தார்.

சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷால் பேசும்போது, “நடிகர் சங்கத்தின் தேர்தலுக்கு ஆகும் செலவை கட்டிடத்திற்கு பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். அத்துடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முயற்சித்தோம். ஆனால், எதிரணியினர் இதைப் போட்டியாக பார்த்தனர்.
தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது வேறு எந்த சங்கத்திலும் நடைபெறவில்லை. இதுதான் முதல் முறை. தற்போது நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம்.
திரும்பத் திரும்ப நாங்கள் சொல்வது ஒன்றுதான். நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகதான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம். அது நல்லபடியாக நடக்கும்.
நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க தற்போதைய நிலவரப்படி இன்னும் கூடுதலாக 21 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கட்டிடம் கட்டத் தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை 30% உயர்ந்துள்ளது. அதற்கான நிதியைத் திரட்டும் வேலையில் இறங்க உள்ளோம். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்கள் அனைவரையும் நேரில் சந்திப்போம். பிச்சையெடுக்கிறது என்று முடிவு செய்துவிட்டோம். முன்னாடியாவது கூச்சம் இருந்தது. இப்போது அதுவும் இல்லை.
தமிழக முதல்வரிடம் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இது தனி மனிதர் சம்பந்தப்பட்டது அல்ல. பல குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. எனவே அவர் எங்களுக்கு உதவி செய்வார் என்று நம்புகிறோம்.
இந்த நேரத்தின் இக்கட்டான காலகட்டத்தில் தேர்தலை நடத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் கிருஷ்ணா மற்றும் நடிகர் சங்கத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி பேசும்போது, “நாங்கள் முதல் முறையாக நிர்வாகத்திற்கு வந்து சங்கத்திற்கு செய்தப் பணிகளால் நிச்சயமாக தேர்தல் இருக்காது.. போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்படுவோம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், தேர்தல் நடைபெற்று தற்போது வெற்றி அடைந்து உள்ளோம்.
தற்போதைய சூழலில் நிதி திரட்டுவது என்பது சவாலான பணியாக இருக்கிறது. நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்க வேண்டும். அதற்கு திட்டமிடுதல் வேண்டும். எனவே கட்டட வேலைகளை அடுத்த மூன்று மாதத்திற்குள் தொடங்க உள்ளோம். நடிகர் சங்கத்திற்கு தற்போது கடன்கள் எதுவும் கிடையாது. நிதிகள் அனைத்தும் கட்டடத்திற்குத்தான் செலவு செய்யப்பட்டுள்ளது…” என தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய துணைத் தலைவரான பூச்சி முருகன் பேசும்போது, “நடிகர் சங்கத்திற்கு பையனூரில் அரசு ஏழு ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. அதில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தனி மண்டபம் கட்டி அவர்கள் தங்குவதற்கு வழிவகை செய்யப்படும்…” என தெரிவித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள், சங்க நிர்வாகிகளிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள்.
அதில் “எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட சில படங்களுக்கு பிரச்னை வரும்போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ ஏதாவது திட்டம் உள்ளதா..?” என்ற கேள்விக்குப் பதிலளித்த நடிகர் கார்த்தி, “தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்னை வரும்போது சட்டப்படியாக நடிகர் சங்கம் உதவுவது அவசியம். எனவே, அதை நடிகர் சங்கம் செய்யும்…” என்றார்.