ஜி 5 ஓடிடி தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான ‘விலங்கு’ என்ற வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. காரணம் இந்த சீரீஸின் திரைக்கதையும் அழுத்தமான இயக்கமும்தான்.
அந்த சீரீஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நான் எழுதிய கதையில் தானே ஹீரோவாக நடித்து தன்னுடைய உதவியாளரையே இயக்க வைத்து ‘வாரண்ட்’ என்ற பெயரில் புதிய வெப் சீரீஸை கொண்டு வந்திருக்கிறார்.
‘விலங்கு’ போலவே இதுவும் போலீசாரின் அன்றாட நிகழ்வுகள், அவர்களது பன்முக தன்மை கொண்ட வேலைகள், எளிய மனிதர்களை காவல்துறை அணுகும் விதம், பழைய சட்ட வடிவத்தை வைத்துக் கொண்டு இப்பொழுதும் அந்த சட்டத்தை பிடித்து தூங்கிக் கொண்டிருக்கும் காவலர்கள், காவல் உயர் அதிகாரிகளின் பணிகளை சொல்வதுதான் இந்த வாரண்ட் என்ற வெப் சீரிஸ்.
பொதுவாக வாரண்ட் என்ற வார்த்தையே காவல்துறை சம்பந்தப்பட்டதுதான், திருட்டு, கொலை, கொள்ளை ஆகிய சம்பவங்களை தவிர மற்றவைகள் மீது புகார் வந்தால் போலீஸ் ஸ்டேஷனின் விசாரணைக்கு வாருங்கள் என்று போலீசார் விசாரிக்க வேண்டியவர்களுக்கு அனுப்புவது ஒரு வாரண்ட். இன்னொரு பக்கம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது அந்த வழக்கிற்காக நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதற்காக சாட்சியாளர்களை வரவேற்க வேண்டிய பொறுப்புக்குப் பெயரும் வாரண்ட்தான்.
நீதிமன்றத்தில் முறைப்படியான வாரண்ட்டை பெற்று சாட்சிகளை அவர்கள் வீட்டில் போய் சந்தித்து இந்த கிழமை கோர்ட்டுக்கு வர வேண்டும். வழக்கு வருகிறது. நீங்கள் சாட்சி சொல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டும். அப்படி சொல்லுகின்ற வேலையும் காவலர்களின் பணியில் ஒரு அங்கம்தான்.
அந்த வாரன்ட் கொடுக்கும் அல்லது வாரண்ட் பெறக் கூடிய நபர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு சூழலில் கோட்டை கருப்பசாமி என்ற பிரசாந்த் சிக்குகிறார். இதை அவர் எப்படி மிக சரியாக செய்து முடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ஹீரோ கோட்டை கருப்பசாமி என்ற பிரசாந்தின் அப்பாவான ரிட்டையர்டு ஹெட்மாஸ்டர் பாலாஜி சக்திவேல் தன் மகனை அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
அப்பாவின் அளத்தல் தாங்காமல் பிரசாந்தும் தொடர்ந்து பல போட்டித் தேர்வுகளை எழுதிக் கொண்டே இருக்கிறார். அதே சமயம் தோற்றுக் கொண்டேயும் இருக்கிறார். தன் மகனை எப்படி அரசு ஊழியராக ஆக்குவது என்று பாலாஜி சக்திவேல் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் தேர்வில் தோல்வி அடைந்த பிரசாந்துக்கு தைரியத்தையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
ஒரு நாள் அப்பாவின் இந்த அனத்தில் தாங்காமல் மகன் பிரசாந்த் மிகுந்த கோவப்பட்டு பேச வீடு இரண்டாகிறது. அப்போது பிரசாந்தின் மாமாவான காளி வெங்கட் திருச்சி எஸ்.பி.யிடம் டிரைவராக இருப்பதால் “போலீஸ் வேலைக்கு இவன் வரட்டும்.. அதுக்கு நிறைய படிக்க வேண்டியதில்லை. உடற்கட்டு மட்டும் இருந்தால் போதும். இவனுடைய குரலுக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும்” என்று சொல்லி போலீஸ் வேலையில் அமர வைக்கிறார்.
காளி வெங்கட்டின் சிபாரிசில் பிரசாந்தின் போலீஸ் ட்ரைனிங் முடிந்த உடனேயே அவருக்கு ஸ்டேஷன் வேலை கிடைக்கிறது. அங்கே ஸ்டேஷனிலோ புதிதாக உள்ளே நுழையும் காவலரை அடிமையாக நடத்துகிறார்கள். அங்க போ.. இங்க போ.. என்று விரட்டி அடிக்கிறார்கள். கோட்டை என்கின்ற பெயரைக்கூட கொட்டை என்று வேண்டுமென்றே அழைத்து அசிங்கப்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் இந்த போலீஸ் வேலையே வேண்டாம் என்று சொல்லி ஹீரோ புலம்ப ஆரம்பிக்கிறார்.
ஆனால் அப்பாவான பாலாஜி சக்திவேல் மகனை தனியே அழைத்துச் சென்று ஒரு நல்லதொரு கதையை எடுத்துச் சொல்லி உன்னை வெறுப்பவர்கள்கூட உன்னை கொண்டாடும்படி நேர்மையாக, திறமையாக செயல்பட வேண்டும். அப்படி செய்தால் இதே போலீஸ் ஸ்டேஷனில் உன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்று அறிவுரை சொல்கிறார்.
அப்பாவின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட பிரசாந்த் இனி தன் வேலையில் முனைப்பு காட்ட நினைக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் ஒவ்வொரு காவலருக்கும் ஒவ்வொருவிதமான வேலையை கொடுத்திருப்பார்கள்.
அதில் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டிய நிலைமையில் இருப்பவர்களுக்கு வாரண்ட் பிறப்பித்து அவர்கள் வீடுகளில் தேடிச் சென்று அழைத்து வரும் பணியை ஒப்படைக்கிறார்கள். அந்தப் பணியை ஹீரோ பிரசாந்த் எப்படி செய்தார்.. அல்லது வேலையை விட்டு ஓடினாரா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
போலீஸ் கான்ஸ்டபிள் தோற்றத்திற்கு ஏற்ற தோற்றமும், உடற்கட்டும் பிரசாந்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. இந்த கோட்டை கருப்பசாமி என்ற காவலராக ஸ்டேஷனுக்குள் முதல் நாள் உள்ளே நுழைந்து அப்பாவியாக அவர் பேசுகின்ற பேச்சுக்களில் இருந்து, இறுதி வரையிலும் அவரை நாம் ரசிக்க முடிகிறது.
காரணம் ஒரு புதிய நடிகர்.. நடிக்கத் தெரியாத நடிகர்.. தனக்கு எது வருமோ.. அதை மட்டுமே செய்திருக்கும்விதம்.. அந்தக் கனெக்டிவிட்டி ஹீரோவுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையில் கச்சிதமாக பிடித்துப் போக.. கடைசிவரையிலும் கோட்டை கருப்புசாமியின் நாம் மாறிவிட்டோம். உண்மையில் அப்படியொரு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஹீரோ பிரசாந்த்.
இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், டி.எஸ்.பி, எஸ்.பி. என்று மூன்று பேரையுமே நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு பிரதீப் செய்யும் அப்பாவித்தனத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
விலங்கு, மாமன் என்ற இரண்டு படைப்புகளை கொடுத்திருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் வரும் காலங்களில் ஒரு சீரிஸோ அல்லது படத்திலோ நடித்துவிட்டு போகட்டும். ஆனால், இன்னொரு பக்கம் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தையும் செய்ய வேண்டும்.
அப்பாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் அப்பாகவே வாழ்ந்திருக்கிறார். இப்படியொரு அப்பாவை நாம் கற்பனையில் அல்ல நேரிலேயே பார்த்திருப்போம். அப்படியொரு மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
மகன் போட்டி தேர்வுகளில் ஒவ்வொரு முறையும் தோற்று வரும்போது அதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சமாதானம் சொல்வதும், ஊக்கப்படுத்துவதுமாக அவரது பாஸிட்டிவ்வான தேற்றல் ரசிக்க வைக்கிறது. அவருடைய மனைவியாக நடித்திருக்கும் கௌசல்யாவும் மகன் மீதான பாசத்தைக் கொட்டும் அம்மாவாகவே நடித்திருக்கிறார்.
பிரசாந்தை திருமணம் செய்யப் போகும் பெண்ணாக நடித்திருக்கும் அருள்ஜோதி ஒரு சராசரி பெண்ணாக வீட்டுக்குள்ளே இருக்க விரும்பும் ஒரு பெண்ணாகவும்.. தன்னை மட்டுமே தன் கணவன் சுற்றிவர வேண்டும் என்று நினைக்கும் தனது கேரக்டருக்கு அழகு சேர்த்து நடித்திருக்கிறார்.
இவரிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே வேறு, வேறு வேலைகள் வருவதும் பிரசாந்த் எழுந்து ஓடுவதுமா, அருள்ஜோதி கோபம் அடைவதுமாக மிக மிக இயல்பாகவே நடித்து இருக்கிறார்.
மருத்துவமனையில் நர்சாக வேலை செய்யும் நம்ரதா பிரசாந்தை பார்த்த உடனேயே காதலிக்க துவங்கி அந்தக் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிப் போகும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை அழகாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
இன்னொரு பக்கம் பாலியல் தொழில் செய்யும் சாயாதேவியை “அக்கா அக்கா” என்று அழைத்து தன்னுடைய பிரச்சனைகளை அவரிடம் சொல்லி அவரையும் ஒரு கருவியாக பயன்படுத்தி பிரசாந்த் தன் வாழ்க்கையை நோக்கி ஓட சாயாதேவியும் தன்னுடைய அழகான நடிப்பினால் நம்மை பெரிதும் தவறுகிறார்.
அதிலும் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே வந்து பல நாட்கள் பழகியவரை போல அவர் பேசுவதும் பழகுவதும் ஸ்டேஷனில் இருக்கும் காவலர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பதும், ஒரு நல்லதொரு சுவையான திரைக்கதையாக அமைந்திருக்கிறது.
ஏட்டுவாக நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி பிரசாந்துக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலும் ‘கோட்டை கருப்பசாமி’ என்ற பெயரை கொட்டை என்று அநாகரிகமாக அவர் அழைக்கத் துவங்க.. மற்றவர்களும் அதை அப்படியே பாலோ செய்ய… அதைக் கேட்டு வெளியில் காட்ட முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகும் பிரசாந்தின் நடிப்பைப் பார்க்கும்போது நமக்கே பாவமாக இருக்கிறது.ய அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் பிரசாந்த்.
கொடைக்கானல் சரவணனாக நடித்தவர் மிக அழகாக நடித்திருக்கிறார். “அடிக்காதீங்க.. எல்லாத்தையும் சொல்றேன்” என்று அவர் கெஞ்சி கூத்தாடி விஷயத்தைச் சொல்லிவிட்டு நகையை எடுத்துக் கொடுத்தாலும் இறுதியில் தப்பி ஓடுகின்ற அந்த ஓட்டம் வரையிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
படம் அதிகமாக போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நகர்வதால் ஒவ்வொரு முறையும் வேறு, வேறு இடங்களில் காட்சி கோணங்களை வைத்து கடைசிவரையில் இந்த படத்தை பார்க்க வைப்பதற்கு ஒரு உதவி செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.
இன்னொரு பக்கம் அந்த போலீஸ் ஸ்டேஷன் அமைப்பை வடிவமைத்த கலை இயக்குநருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள். அட்டகாசம் செய்திருக்கிறார். ஒரு போலீஸ் ஸ்டேஷன் உள்ளே, வெளியே எப்படி இருக்கும் என்பதையெல்லாம் கிட்டத்தட்ட 90 சதவீத உண்மையாக நமக்கு காட்டி இருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
இவரைவிட்டால் வேறு ஆளில்லை என்று சொல்லும் அளவுக்கு இசையமைப்பாளர் சாமின் புகழ் கொடி கட்டி பறக்கிறது. இந்தப் படத்திலும் அவருடைய பின்னணி இசை மிக சிறப்பு. பாடல்களைவிடவும் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் சாம் சி.எஸ்.
சரவணனை பிடிப்பதற்காக காவல் துறையினர் ஓடுகின்ற காட்சிகளும் ஊர் ஊராக போய் வாராண்டு கொடுக்க வேண்டியவர்களைத் தேடி அலைகின்ற காட்சிகளிலும் ஒரு பரபரப்பை உண்டு செய்தது போல இசையமைத்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
இந்தப் படத்தின் திரைக்கதை நான் லீனியர் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல் படத்தின் காட்சிகளையும் கொஞ்சமும் அலுப்பு தட்டாத வகையில் மிகக் கட்சிதமாக தொகுத்து தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர்.
வெப் சீரிஸ்களின் வெற்றிக்கு அடிப்படையான காரணமே எத்தனை எபிசோடுகள் இருந்தாலும் ஒவ்வொரு எபிசோட்டில் முடிவிலும் ஒரு புதிய விஷயம் சொல்லப்படும். அடுத்த எபிசோடை உடனடியாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் ஒரு மர்ம முடிச்சு ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் இருக்கும். இந்தப் படத்திலும் அதே போன்ற திரைக்கதையை கச்சிதமாக பயன்படுத்தி கொடுத்திருக்கிறார் நடிகரும், கதாசிரியருமான பிரசாந்த்.
இயக்குநர் விக்னேஷ் நடராஜன் படத்தின் ஹீரோவான பிரசாந்துடன் இணைந்து கதை திரைக்கதையை அமைத்திருக்கிறார். ஒவ்வொரு எபிசோடும் பரபர என்ற பறக்கிறது.
அந்த வகையில் முதலில் எபிசோடை தொட்டுவிட்டால் கடைசிவரையிலும் பார்த்தே தீர வேண்டும் என்கின்ற ஒரு ஈர்ப்பை ரசிகர்களுக்கு கடத்தி இருக்கிறது இந்த வெப் சீரிஸ். இதற்கு காரணமான கதாசிரியர்கள் இயக்குநர், நடிகர், நடிகையர் அனைவரையும் பாராட்டுகிறோம்.
போலீஸ் ஸ்டேஷனின் நடைமுறைப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் அங்கே ஒரு கோட் வேர்ட் உண்டு. ஒவ்வொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் தனித் தனி காவலர்களும் இயக்கமும் உண்டு. அதை இந்தப் படத்தில் மிகவும் கச்சிதமாக தெரிந்து எழுதி இருக்கிறார்கள்.
வாரண்ட் பெறுவதற்காக பெண் நீதிபதியிடம் பிரசாந்தும் அருள் தாஸூம் பேசுகின்ற அந்தக் காட்சிகளில் உண்மையாக நீதிமன்றத்தில் என்ன நடக்குமோ அதை தன்னுடைய வசனத்தினால் அழகாக எழுதி இருக்கிறார்கள். அந்த பெண் நீதிபதியையும் அவருடைய யதார்த்த நடிப்புக்காக நாம் மனதார பாராட்டுகிறோம்.
விசாரணை கைதிகளை அடித்து துன்புறுத்தக் கூடாது என்று இந்தியா முழுவதும் இருக்கும் நீதிமன்றங்கள் தினமும் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதை பற்றி சிறிதும் கவலையேபடாதவர்கள்தான் இந்தியா முழுவதும் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் காவலர்கள்தான்.
அந்த காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதையும் அமைதியாக, சாந்த சொரூபியாக வேலைக்கு சேரும் ஒரு சாதாரண காவலன்கூட காக்கி சட்டையைப் போட்டவுடன் ஒரு வெறித்தனமானவனாக மாறுவது ஏன் என்பதை இந்தப் படத்தில் உண்மையாகக் காட்டியிருக்கிறார்கள்.
தன்னுடைய பெயரை கொட்டை என்று போலீஸ் ஸ்டேஷனில் அத்தனை பேரும் சொல்வதால் ஒரு கேசை முடிப்பதற்காக சந்தேகப்படுபவர்களை அழைத்து வந்து அடித்து சித்திரவதை செய்யும் அந்தக் காட்சியில் பிரசாந்தின் முகத்தை பார்க்கவே நமக்கு அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது.
ஆனால் அதே சமயம் தன்னுடைய பெயரை தப்பாக சொல்கிறார்களே.. கிண்டல் அடிக்கிறார்கள் என்பதற்காக தன்னுடைய கோபத்தையெல்லாம் விசாரணை கைதியின் மீது காட்டுகின்ற பிரசாந்தின் நடிப்பு அகோரமானது.
இதற்காக அவர் சக போலீஸ்காரர்களைத்தான் அடிக்க வேண்டுமே தவிர விசாரணை கைதியை அடிக்க வேண்டிய அவசியமே இல்லையே. தேவையும் இல்லையே. அது மிருகத்தனம். கொடூரமானது. இந்த காட்சி அமைப்புக்காக கதாசிரியரையும், இயக்குநரையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
‘விலங்கு’ படத்திலும் இதே போல காவலர்கள் விசாரணை செய்திகளை அடித்து உதைத்து, கை, காலை உடைப்பதெல்லாம் அப்படியே பட்டவர்த்தனமாக காட்டப்பட்டிருந்தது. ஆனால், அதில் கிஞ்சித்தும் ஒரு குற்ற உணர்வுகூட இல்லாமல் காவலர்கள் சிரித்துக் கொண்டே போவதை அந்த வெப் சீரிஸில் காண்பித்து இருப்பார்கள்.
இப்பொழுதும் அதையே வேறு ஒரு ரூபத்தில் விசாரணை கைதிகளை சித்திரவதை செய்வதுபோல காட்டிவிட்டு இப்போதும் போலீஸ் ஸ்டேஷன் இப்படித்தான் இருக்கும் என்பதாக காட்டுவது போல திரைக்கதை அமைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. நிச்சயமாக இந்தப் படத்தில் இந்தக் காட்சியை நீக்கி இருக்க வேண்டும் அதுதான் சரி.
மேலும் கடைசி சில எபிசோடுகளில் இடம் பெற்றிருக்கும் ஆபாச வசனங்கள் அனைத்தையுமே கட் செய்து இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான ஆபாச வசனங்களை ஒவ்வொரு ஆணும் உச்சரித்துக் கொண்டே இருக்க நமக்குத்தான் டென்ஷன் ஆகிறது.
இது ஓடிடி தளத்தில் வந்திருப்பதால் நிச்சயமாக வீட்டில் சிறுவர்களும் பார்க்க வேண்டிய சூழல் வந்தால் அவர்கள் அதைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
திரைப்படமெனில் A சர்டிபிகேட் வாங்கினால் ஒரு சில தியேட்டர்களில் குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் வீட்டில் அப்படி ஒரு கேள்வியே இருக்காது. அவர்கள் நிச்சயம் பார்த்தால் இந்த வசனங்கள் எல்லாம் சாதாரண வசனங்கள் போலிருக்கு. நாமும் பேசலாம் என்று நினைப்பார்கள் அல்லவா!
இயக்குநர் பர்ஸ்ட் காபி பார்த்த பொழுதே இந்த வசனங்களை நீக்கி இருக்கலாம். ஆனால் நீக்காதது அவருடைய தவறு. இதற்கும் சேர்த்து இயக்குநருக்கும், பிரசாந்துக்கும் நம்முடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்வோம்.
இதுவரையில் பார்க்காத ஒரு போலீஸ் கதையில்… ஒரு அப்பாவி இளைஞன் போலீசாக உள்ளே நுழைந்து… அதற்கு பிறகு அவனுடைய கேரக்டர் ஸ்கெட்ச் எப்படி மாறுகிறது.. கொடூரமானவனாக அவனை இந்த சிஸ்டமும், இந்த அமைப்புகளும், அரசும், அதிகாரமும் சேர்ந்து எப்படி மாற்றுகின்றன என்பதையும் சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் நடராஜன்.
வெப் சீரிஸூக்கே உரித்தான அந்த அழகோடு இந்த வெப் சீரியஸ் அமைக்கப்பட்டிருப்பதால் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
RATING : 3 / 5









