இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றும்தான் ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு, அதுவும் திரையுலகில் நிலையான வெற்றி பெறுவதற்கு முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது.
அத்தகைய சிறப்பம்சங்களை பின்பற்றி வரும் இயக்குநர் – தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய ‘விழித்திரு’ படத்தின் ‘STAY AWAKE’ பாடலை துபாயில் மிக பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார்.
“என்னை பொறுத்தவரை நேரம்தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது. வரும் நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் மூத்த உறுப்பினரான அபிராமி ராமநாதன் அவர்கள் தலைமையில் துபாயில் ‘நட்சத்திர கலை விழா’ என்னும் விமர்சையான கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அன்று ஒட்டு மொத்த துபாயும் நட்சத்திரங்களின் வருகையால் ‘விழித்திரு’க்கும். அப்படியொரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் எங்களின் ‘விழித்திரு பாடலை வெளியிட வேண்டும் என்றுதான் நான் பல நாட்கள் யோசித்து கொண்டிருந்தேன். தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது, எனக்கு கிடைத்த வரம்.
வருகின்ற புத்தாண்டு இரவில் அனைவராலும் கொண்டாடப்படும் பாடலாக எங்களின் ‘STAY AWAKE’ இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதற்கு எங்களுக்கு கிடைத்த சரியான மேடை, இந்த ‘நட்சத்திர கலை விழா’.
இதன் மூலம் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு மற்றும் தன்ஷிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எங்களின் ‘விழித்திரு’ திரைப்படம், எல்லாத் தரப்பு ரசிகர்களிடமும் பெரியளவில் போய் சேரும்.
இந்த ஆண்டு இறுதியில் நாங்கள் ‘விழித்திரு’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ‘விழித்திரு’ந்து வரவேற்பதுதான் ரசிகர்களின் கடமை. அவர்கள் அதனை நிச்சயம் செய்வார்கள்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் – இயக்குநர் மீரா கதிரவன்.