சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிககும் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படம்.
‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கிருஷ்ணா – விதார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தம்பி ராமைய்யா, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘விழித்திரு’ தனது கதையம்சத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வந்த்து. இந்த நிலையில் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் கடைசி நிமிடத்தில் தமிழ்த் திரையுலகத்தின் தற்போதைய நிலவரப்படியே படம் வெளியாகாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி ரிலீசாகும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டில் நிகழ்ந்த தாமதம் பற்றிப் பேசிய இயக்குநரும், தயாரிப்பாளருமான மீரா கதிரவன், ”இந்த தாமதம் எங்களுக்கு மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
இந்த நேரத்தில் எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் எங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்திருக்கும் ‘சவுந்தர்யன் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக, தந்திருப்பதால் இந்தப் படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்…” என்றார்.









