அழகான, அமைதியான, ஆழமான நண்பனாக நடித்த ‘ஒரு கனவு போல’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்தப் படத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் சௌந்தரராஜா.
‘அபிமன்யு’ என்கிற புதிய படத்தில் புத்திக் கூர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸிஸ்டென்ட் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் நடிகர் சௌந்தரராஜா.
இதற்காக மிகுந்த சிரத்தை எடுத்த சௌந்தரராஜா, காக்கி உடையில் கம்பீரமான காவல் துறை அதிகாரியாக கண் முன் நிற்கிறார்.
சமீபத்தில் ‘அபிமன்யு’ படத்தின் தயாரிப்பு முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் தான் இப்படிப்பட்ட முன்னோட்ட காட்சிகளை வெளியிடுவது வழக்கம்.
ஆனால், இந்த ‘அபிமன்யூ’ திரைப்படத்தின் கதை காவல் துறை சார்ந்த கதை என்பதால், ஒரு காவல் துறை அதிகாரிதான் வெளியிட வேண்டும் என்று விரும்பினார்கள் படக் குழுவினர்.
அவர்கள் ஆசைப்பட்டபடியே புகழ் பெற்ற தமிழக காவல் துறை உயர் அதிகாரியான அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்., இந்த ‘அபிமன்யு’ படத்தின் தயாரிப்பு முன்னோட்டக் காட்சியை வெளியிட்டு படக் குழுவினரை பெருமைப்படுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி தொகுதியில் தேர்தலை நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர் அஸ்ரா கார்க் என்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட திரைக்கதையுடன் தயாராகும் இந்த ‘அபிமன்யு’ படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் ஒளிப்பதிவாளர் சரண் ஒளிப்பதிவு செய்கிறார். அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்குகிறார்.










