சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படம்.
கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்துள்ளனர்.
“சென்னை மாநகரத்திற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றது. பகலில் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னையின் ஒரு முகத்தைதான் நாம் இதுவரை பார்த்து இருக்கின்றோம்.
ஆனால் யாரும் இதுவரை கண்டிராத, இரவில் குணாதியசத்தை மாற்றி கொள்ளும் சென்னையின் மற்றொரு முகத்தை ரசிகர்கள் எங்களின் ‘விழித்திரு’ திரைப்படம் மூலம் காண்பார்கள்.
எப்படி ஒரு இரவு, நான்கு பேரின் வாழக்கையை மாற்றுகின்றது என்பதுதான் ‘விழித்திரு’ படத்தின் ஒரு வரி கதை. அதுமட்டுமின்றி, இரவு என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது போலீஸ்காரர்களின் ரோந்து வானங்கள்தான். அந்த ரோந்து வாகனங்களுக்கும், எங்கள் ‘விழித்திரு’ படத்தின் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அது என்ன என்பதை படத்தை பார்க்கும் பொழுது ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்…” என்று கூறுகிறார் இயக்குநர் மீரா கதிரவன்.