நேற்று ஈரோடுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விவேக் அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.
அச்சந்திப்பில் விவேக் பேசியபோது, “நான்தான் பாலா’ என்ற திரைப்படத்தில் காமெடி இல்லாத மிகவும் சீரியசான கேரக்டரில் நடித்துள்ளேன். இதுவரையில் எந்த காமெடி நடிகரும் இது போன்று நடித்ததில்லை. இதில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி உள்ளேன். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
மேலும் ‘பாலக்காட்டு மாதவன்’, ‘வை ராஜா வை’, ‘அஞ்சான்’ போன்ற படங்களில் நடித்து வருகிறேன். திரைப்படத்தில் பகுத்தறிவு கருத்துக்களை நகைச்சுவையுடன் கொடுத்ததால்தான் ‘சின்ன கலைவாணர்’ பட்டம், ‘பத்மஸ்ரீ’ விருதுகள் கிடைத்தன. இதற்கு ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார்தான் காரணம்…” என்றார் விவேக்.
“நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா..?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “நான் நடிக்கும் திரைப்படங்களில் பல நல்ல கருத்துகளை கூறி வருகிறேன். அதுவே நல்ல அரசியல்தான். எனவே எந்த அரசியல் கட்சியிலும் சேர்ந்து எனக்கு ஒரு சாயத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. மக்களை சிரிக்க வைக்கிறேன், சிந்திக்கவும் வைக்கிறேன். அது போதும்…” என்றார். “ஆம் ஆத்மி கட்சியில் மகாத்மா காந்தியின் பேரனே இணைந்திருக்கிறாரே..?” என்று கேட்டதற்கு “நான் ஒன்றும் காந்தி பேரன் இல்லையே..” என்று பட்டென்று பதிலளித்தார்.
காந்தி பேரனா இருந்தால்தான் ஆம் ஆத்மி கட்சில சேர முடியுமா என்ன..?









