கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழக்கு..!

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழக்கு..!

வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியன்று வெளியாகவுள்ள கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கேட்டு கோர்ட்டு படியேறியுள்ளது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.

பிரமிட் சாய்மீரா நிறுவனம் 2006-2009-ம் ஆண்டுகளில் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக கோலோச்சிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் ‘மர்மயோகி’ என்ற படத்தை பிரமிட் சாய்மீராவின் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் தானே நடித்து, இயக்கித் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.

இதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே முறைப்படியான ஒப்பந்தம் 2008-ம் ஆண்டு ஏப்ரல் -2-ம் தேதியன்று செய்து கொள்ளப்பட்டது.

அந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாகவும் கொடுக்கப்பட்டது.

100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக கமல்ஹாசனிடம் முதல் கட்டப் பணமாக 6.90 கோடியை பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழங்கியது.  

ஆனால் கமல்ஹாசன் அந்தப் பணத்தை ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைப் போல் ஒருவன்” படம் தயாரிக்க பயன்படுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலைமையில் 2009-ம் வருடம் பிரமிட் சாய்மீரா நிறுவனம் நலிவடைந்து நிறுவனமே இழுத்து மூடப்பட்டது. இதன் பின்பு கமல்ஹாசனிடம் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாங்கள் இப்போதைய நிலையில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இல்லை என்பதைச் சொல்லி ‘மர்மயோகி’ படத்திற்காகக் கொடுத்த 10 கோடியே 90 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பிக் கேட்டது.

ஆனால் கமல்ஹாசன் திருப்பித் தர மறுத்துவிட்டார். ‘இரு தரப்பும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை’ என்றும், ‘பிரமிட் சாய்மீரா நிறுவனம் அந்தப் படத்தைத் தயாரித்தால் எப்போது வேண்டுமானாலும் கமல்ஹாசன் நடித்துக் கொடுக்க வேண்டும்’ என்றும், ‘இல்லையேல் பிரமிட் சாய்மீரா நிறுவனம் வேறு யாருக்கேனும் படத்தைக் கை மாற்றினால் அந்தத் தயாரிப்பாளருக்கு கமல்ஹாசன் படத்தை செய்து தர வேண்டும்’ என்றுதான் ஒப்பந்த ஷரத்து சொல்வதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக அந்த நிறுவனத்தில் பொறுப்பில் இருந்த கமல்ஹாசனின் மறைந்த அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்தார்.

இதையேற்க மறுத்து பிரமிட் சாய்மீரா நிறுவனம் ‘விஸ்வரூபம்’ படத்தின் ரிலீஸின்போதே நீதிமன்றம் சென்றது. அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இப்போது ‘விஸ்வரூபம்-2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் மீண்டும் கோர்ட் படியேறியுள்ளது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.

பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், “நாங்கள் தயாரிப்பதாக இருந்த ‘மர்மயோகி’ படத்திற்காக கமல்ஹாசனுக்குக் கொடுத்த சம்பளம் 4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 44 லட்சம் ரூபாயாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்…” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Our Score