இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி ‘நான் மகான் அல்ல’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்று ரசிகர்களிடம் பெயர் பெற்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது.
இந்தப் படங்களுக்கு பிறகு இயக்குநர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் ‘ஜீனியஸ்’ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை ‘சுதேசி வுட்ஸ் பிலிம்ஸ்’ சார்பில் ரோஷன் தயாரித்து நடித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் வரிகளில், ‘விஜய் சூப்பர் சிங்கர்’ இறுதி சுற்றில் இடம் பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்திற்காக பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.
சிறப்பான கதை கொண்ட இத்திரைப்படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குநர் சுசீந்திரன் ‘ஜீனியஸ்’ படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை கேட்டிருக்கிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் “படம் நன்றாக வந்துள்ளது….” என்று படக் குழுவினரை பாராட்டியுள்ளார்.
தற்போது படத்தின் படத் தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டெம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.