சினிமாலதான் ஹீரோயின்களை பார்க்க சுவர் ஏறிக் குதிச்சு.. ஊரைவிட்டு ஊர் வந்து.. அலையோ அலைன்னு அலைவாங்க ஹீரோக்கள்.. இப்போ நிசமாவே ஒரு ஹீரோயினை பார்க்க ஒரு ஹீரோ ஊர் iவிட்டு ஊர் போய் அலைஞ்சு திரிஞ்சிருக்காருங்க. அதுலேயும் அவர் நடிக்குற படத்தோட ஹீரோயினா இருந்தால்கூட ஒரு லாஜிக்கா ஒத்துக்கலாம். இது இன்னொரு படத்துல நடிக்கிற ஹீரோயின். அப்புறமும் ஏன் அப்படி..?
அதான் லட்சுமிமேனனின் அழகு.. வயசென்னவோ 17-தான். படிப்பது 11-ம் வகுப்பு. நேரில் பார்க்கும்போது வயதுக்கு மீறிய தோற்றம்.. பார்ப்போரை ஈர்க்கும் அளவுக்கான முக வசீகரம். நேரில் பேசும்போது சாதாரணமான பெண்ணாகத் தோன்றுகிறது. ஆனால் ஸ்கிரீனில் அவர் காட்டுகின்ற எக்ஸ்பிரஷனில்தான் ஹீரோக்களும், இயக்குநர்களும் சொக்கிப் போகிறார்கள்.
‘பாண்டிய நாடு’ வெற்றியில் திளைத்துவிட்ட விஷால் தனது அடுத்தப் படமான ‘நான் சிகப்பு மனிதனி’ல் லட்சுமிமேனனையே ஹீரோயினாக்கிவிட்டார். இவர் ஹீரோயினாக ஆக்கினாலும், கோடம்பாக்கத்தில் உள்ள மற்ற ஹீரோக்களெல்லாம் ச்சும்மா விட்டுவிடுவார்களா..? அவர்களுக்கும் ஆசை இருக்குமே..?
ஆசை வந்தது ‘நீர்ப்பறவை’ ஹீரோ விஷ்ணுவுக்கு.. என்ன நடந்தது என்பதை இன்றைக்கு நடந்த நான் சிகப்பு மனிதன் பாடல் வெளியீட்டு விழாவில் மேடையில் போட்டு உடைத்தார்.
லட்சுமிமேனன்-விஷால் ஜோடி ஷூட்டிங்கில் இருப்பதை அறிந்து கொண்டு விஷாலுக்கு போன் அடித்தாராம் விஷ்ணு. “ஷூட்டிங்கை பார்க்க வேண்டும்..” என்றாராம் விஷ்ணு. “இப்ப லட்சுமி மேனனோட ஷூட்ல இருக்கேன்.. அப்புறமா பேசுறேன்…” என்றாராம் விஷால். அடுத்து மெஸேஜ் அடித்தபோதும் “லட்சுமி மேனன்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன்…” என்று பதில் மெஸேஜ் வந்ததாம் விஷாலிடமிருந்து..
இனி பேசிப் பயனில்லை. நேரா போயே பார்த்திரலாம்னு நினைச்சு சொல்லிக் கொள்ளாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பயணமாகியிருக்கிறார் விஷ்ணு. அங்கே சென்ற பின்பு விஷாலுக்கு போன் செய்து தான் வந்திருப்பதாகவும், ஷூட்டிங்கை பார்க்க விரும்புவதாகவும் சொல்ல.. விஷால் வரவழைத்திருக்கிறார் விஷ்ணுவை. விஷ்ணு ஸ்பாட்டிற்குள் சென்றபோது அங்கே லட்சுமி மேனன் இல்லையாம். “இன்னிக்கு அந்தப் பொண்ணுக்கு ஷூட் இல்லை..” என்றாராம் விஷால்.. “இப்படி லட்சுமி மேனனை கண்லேயே காட்டாம பொத்தி, பொத்தி வைச்சிருக்கானே.. ஏன்னு தெரியலை.. இப்பவாச்சும் பதில் சொல்வானான்னு பார்ப்போம்..?” என்றார் விஷ்ணு.
இவருக்கு பின்பு பேச வந்த விஷால் தன் பேச்சில், “லட்சுமி மேனன் சின்னப் பொண்ணு.. வயசுக்கு மீறிய வளர்ச்சி.. ஆனா நல்ல நடிகை.. விஷ்ணு வந்தப்போ நிசமாவே லட்சுமிக்கு ஷூட் இல்லை. அதுனால அங்கே இல்லை. ஆனாலும் இன்னொன்னு சொல்லணும். இவனை இவங்கப்பாவே அரெஸ்ட் பண்ற மாதிரி ஒரு நிலைமை வந்திரக் கூடாதேன்றதாலதான் லட்சுமி மேனனை இவன் கண்ல காட்டலை.. எல்லா சினிமாலேயும் பார்த்திருப்பீங்களே.. பெத்த அப்பனே பையன் கைல விலங்கு போட்டு கூட்டிட்டுப் போவாரு.. அதெல்லாம் இவனுக்கு வரணுமா..? ஸோ.. அதான் செய்யலை.. மவனே… இனிமே எங்கயாச்சும் லட்சுமி மேனனை பத்தி ஏதாவது பேசின.. நீ வாங்கி வைச்சிருக்கிற கிரிக்கெட் பேட்டாலேயே சாத்துவேன்..” என்று விஷ்ணுவை செல்லமாகக் கோபித்தும் கொண்டார்.
இவங்கப்பாவே அரெஸ்ட் பண்ற மாதிரி நிலைமை என்று விஷால் சொன்னதற்கு அர்த்தம், விஷ்ணுவின் தந்தை ஐ.பி.எஸ். அதிகாரி ரமேஷ் குடவாலா. விஷ்ணுவின் மாமனார், ரஜினியின் மிக நெருங்கிய நண்பரும், நடிகருமான நட்ராஜ்.
இந்தக் கூத்து எதுவுமே தெரியாமல் லட்சுமி மேனன் இன்றைக்கு கேரளாவில் தனது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறார்.
பாவம்யா.. தயாரிப்பாளருக.. வாயைக் கட்டி.. வயித்தைக் கட்டி.. சொத்தை வித்து ஒரு சினிமா தயாரிக்கணும்னு நினைச்சு இங்க வந்து காசைக் கொட்டி படமெடுத்தா.. இந்த ஹீரோக்கள் செய்யற சேட்டையை பாருங்க..!?