கமல்ஹாசன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் உத்தமவில்லன் படத்தின் போஸ்டர் டிஸைன் வெளியானபோதே பரபரப்பாகிவிட்டது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞரின் புகைப்படத்தை காப்பி செய்துவிட்டதாக மீடியாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதி வருகின்றன.
ஆனால் இது நமது பரதநாட்டியக் கலையை போன்ற கேரளாவின் மலபார் கடற்கரைப் பிரதேசத்தில் இருக்கும் தெய்யம் என்ற கலையின் வடிவம் என்று பதில் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.
இது பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பதிலில், “தெய்யம் கலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தக் கலை என்பதே முகத்தில் வரையும் ஓவியம்தான்.. இப்படி முகத்தில் ஓவியம்வரையும் கலையை இப்போது மூன்றாவது தலைமுறையினரும் செய்து வருகிறார்கள். இந்த மேக்கப்பை போடுவதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரங்களாவது ஆகும். உத்தமவில்லன் படம் இந்தத் தெய்யம் கலையையும், தமிழின் கூத்து கலையையும் உள்ளடக்கியது.
ஒரு வயதான சூப்பர்ஸ்டார் காலம் கடந்த ஒரு கலையுணர்வுடன்கூடிய நகைச்சுவை படம் எடுக்க முனைவதுதான் இந்த உத்தமவில்லன். உத்தமவில்லன் படக் குழு ஏற்கெனவே 18 நிமிடங்கள் வரக்கூடிய வகையில் இந்தப் படம் பற்றிய ஒரு முன்னோட்டத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறது. இந்த கூத்துக் கலையின் நடிகரை திரையில் பார்த்தவுடன் உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும்வகையில்தான் இந்தப் படம் இருக்கும்..” என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.
பரதநாட்டியக் கலைக்கு எப்படி மேக்கப் ஒன்று போல இருக்குமோ அது போலவே இந்தத் தெய்யம் கலையிலும், அதை ஆடுபவரின் முகத்தில் போடும் மேக்கப் ஒன்றுபோலவே இருக்கும். அதுதான் புகைப்படத்திலும் பிரதிபலிக்கிறது என்கிறார்கள். கமல் என்றாலே சர்ச்சைகள் வரிந்து கட்டிக் கொண்டு வருமே..?!