2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ரமேஷ் குடவாலாவின் மகனாவார்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது கல்லூரி காலத் தோழியான ரஜினி நட்ராஜை 4 வருட காலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு இப்போது 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் 2018-ம் ஆண்டே இந்தத் தம்பதிகள் விவகாரத்து செய்து கொண்டார்கள்.
இதையடுத்து இந்தியாவின் தேசிய பேட்மிண்டன் சாம்பியனான கட்டா ஜுவலாவுடன் விஷ்ணு விஷாலுக்குக் காதல் பிறந்தது. இருவருமே இதை மறுக்கவில்லை. இருவருக்கும் இடையேயான நிச்சயத்தார்த்தம் கடந்தாண்டு செப்டம்பர் 7-ம் தேதியன்று நடைபெற்றது. தன்னுடைய திருமணம் விரைவில் நடைபெறும் என்று விஷ்ணு விஷால் சொல்லியிருந்தார்.
தற்போது வரும் ஏப்ரல் 22-ம் தேதியன்று தனக்கும், கட்டா ஜூவலாவுக்குமான திருமணம் நடைபெறும் என்றும், இது கொரோனா காலக்கட்டம் என்பதால் மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இத்திருமணம் நடைபெறுவதாகவும் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.
ஆனால் திருமணம் எங்கே நடைபெறப் போகிறது என்பதை மட்டும் சொல்லவில்லை. அநேகமாக சென்னையிலேயே நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டா ஜ்வாலாவுக்கும் இது இரண்டாவது திருமணம்தான். ஆந்திராவைச் சேர்ந்த புகழ் பெற்ற பேட்மிண்டன் வீரரான சேட்டன் ஆனந்தை 2005-ம் ஆண்டிலேயே திருமணம் செய்து கொண்டார் கட்டா ஜ்வாலா. ஆனால், இவர்கள் 2011-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.