ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஷமக்காரன்’.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் படத்தையும் இயக்கியுள்ளார் அறிமுக நடிகரான ‘வி’ என்ற விஜய் குப்புசாமி. அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – J.கல்யாண், இசை – கவின்-ஆதித்யா, படத் தொகுப்பு – S.மணிக்குமரன், இயக்கம் – விஜய் குப்புசாமி, தயாரிப்பு – ஹனி பிரேம் ஒர்க்ஸ், பத்திரிகை தொடர்பு – கே.எஸ்.கே.செல்வா.
மேனிபுலேஷன் அதாவது “மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” என்பதை மையக் கருவாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார் நாயகன் விஜய் குப்புசாமி.
இந்தப் படம் வரும் மே 27-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
பொதுவாகவே ஒரு வெற்றிப் படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும்? அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்க வேண்டும் என்பதை கணிப்பதில்தான் பலர் கோட்டை விடுகின்றனர்.
ஆனால் இந்தப் படத்தின் இயக்குநரான விஜய் குப்புசாமி, ஐ.டி. துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் இதற்காக தனியாக ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரையே உருவாக்கியிருக்கிறார்.
ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்து விடும். ஆச்சரியமாக இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார் இயக்குநர் விஜய் குப்புசாமி.
சொல்லப் போனால் இந்த சாப்ட்வேரை சோதனை செய்வதற்காக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றுகூட சொல்லலாம். அதுமட்டுமல்ல. இந்தப் படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்ளும்விதமாக அனைவருக்கும் இலவசமாகவே வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த மாதம் இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் முன்னிலையில் இந்த சாப்ட்வேர் வெளியிடப்பட்டது.
திரைப்பட உருவாக்கத்திற்கு இப்படி ஒரு சாப்ட்வேரா என ஆச்சர்யப்பட்ட பிரபலங்கள் தாங்களும் இதைப் பயன்படுத்தி பார்ப்பதாக படக் குழுவினரை உற்சாகமூட்டியுள்ளனர்.