தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
’கைதி’, ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ‘மாரியம்மா’வாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே.ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ T.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இசை அசுரன்’ G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். G.V.பிரகாஷ்குமார் & வசந்தபாலன் கூட்டணியில் இந்தப் படத்திலும் மனதைத் தொடும் நான்கு இதமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர். வசந்த பாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து சில வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் பாடிய அப்பாடல் இனிமையான காதல் பாடலாக வந்துள்ளது.
ஒளிப்பதிவு – எட்வின் சகாய், கலை இயக்கம் – சுரேஷ் கல்லேரி, படத் தொகுப்பு – M.ரவிக்குமார், வசனம் – இயக்குநர் எஸ்.கே.ஜீவா, நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர், சண்டை பயிற்சி இயக்கம் – ‘டான்’ அசோக், ’பீனிக்ஸ்’ பிரபு, ஒலிக் கலவை – M.R.ராஜாகிருஷ்ணன், புகைப்படங்கள் – R.S.ராஜா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
‘வெயில்’. ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் வசந்த பாலன் இப்படத்திலும் வித்தியாசமான கதையமைப்பை வடிவமைத்துள்ளார்.
இந்த ‘அநீதி’ படம் வரும் ஜீன் மாதம் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்குப் பின் திறமையுள்ள புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தி படங்களை தயாரிக்கவுள்ளது அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம்.