வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையில் ஒரு டீம் களமிறங்கியுள்ளது.
இந்தக் குழுவின் அறிமுக விழா இன்று மாலை 5 மணிக்கு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “இந்த அணி இங்கு வந்திருப்பதற்கான காரணம் நல்லது செய்வதற்காகத்தான். நல்லது செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. நலிந்த என்ற ஒரு பிரிவை போக்குவதற்காகத்தான் இந்த அணி இங்கு அமர்ந்துள்ளார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் பொதுவாகவே பல சங்கங்கள் உள்ளன. அதில் நடிகர் சங்கத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் அச்சங்க உறுப்பினர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர்களை மட்டுமே சேர்ந்து அடையும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் தமிழ் திரையுலகமே நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த பத்து வருடத்தில் நடக்காததை நடத்தி காட்ட வேண்டும் என்ற ஒரே அடிப்படையில்தான் நான் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். எனக்கு தலைவர் என்ற விஷயம் எப்போது நியாபகம் வரும் என்றால் கையெழுத்து போடும் போது மட்டும்தான் நியாபகம் வரும். மற்றபடி எனக்கு அது நியாபகம் வராது.
நான் தயாரிப்பாளர் சங்கத்தை முன்னேற்றத்தான் வந்துள்ளேன். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் இந்த திரையுலகம் நன்றாக இருக்கும் என்பதுதான் உண்மை. திரையுலகம் நன்றாக இருந்தால் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்.
இப்போது நடிகர் சங்கத்தில் நடிகர் சங்கம் நிர்வாகிகளோடு இணைந்து நாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களை எல்லாம் செய்துள்ளோம். அதே போல் நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் அதாவது அடுத்த மாதம் நடிகர் சங்க கட்டிட வேலை துவங்கவுள்ளது. நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம். கட்டிட வேலைகள்கூட இன்னமும் மூன்று மாதங்களில் துவங்கிவிடும்.
என்னுடைய தந்தை ‘ஐ லவ் இந்தியா’ என்ற படத்தை தயாரித்தார். கூடவே, ‘மகா பிரபு’ போன்ற வெற்றி படங்களையும் தயாரித்தவர். என்னுடைய பள்ளி பருவத்தில் ஒரு நாள் என் தந்தை ஒரு லேப் வாசலில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன்.
அவர் விநியோகஸ்தர்களிடம் ‘சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும். எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை… நான் செய்த ஒரே தவறு.. இந்தப் படத்தை எடுத்ததுதான்…’ என்று கெஞ்சிக் கொண்டிருந்ததை கண்டேன்.
அவர் அன்றைக்கு அப்படி பிச்சை எடுத்ததை என் கண்ணால் பார்த்ததுதான் இந்த தேர்தலில் நான் நிற்க காரணமாகக்கூட இருக்கலாம். என்னுடைய தந்தைக்கு நடந்த அந்த கஷ்டம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக் கூடாது. அதனால்தான் தேர்தலில் நிற்க முடிவெடுத்தேன்.
முன்பெல்லாம் என்னுடைய தந்தையை என்னுடைய படத்தை பார்க்கத்தான் அழைப்பேன். இப்போது நான் அவரிடம் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பேசினேன். அப்போது அவர், ‘நீ தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கிறாய். உன்னை எதிர்த்து நிற்பவர்களெல்லாம் என்னுடைய நண்பர்கள்தான். நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர். தெலுங்கு சங்கத்திலும் உறுப்பினர்.
நீ இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கால் கிரவுண்டோ அல்லது அரை கிரவுண்டோ இடத்தை வாங்கித் தர வேண்டும். அதை செய்தால் நீ நம் வீட்டிற்கு வா.. இல்லாட்டி வராதே’ என்றார். நிச்சயமாக நான் அதைச் செய்கிறேன் என்று என் அப்பாவிடம் சொன்னேன். நிச்சயம் எங்களது அணி சொல்வதையெல்லாம் நிறைவேற்றும் என்று உறுதியளிக்கிறேன்..” என்றார்.