‘வேலையில்லா பட்டதாரி,’ ‘அனேகன்’ படங்களை அடுத்து தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘மாரி.’ இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருக்கிறார். பாலாஜி மோகன் டைரக்டு செய்திருக்கிறார். மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பிரஸ்மீட் நேற்றைக்கு தி.நகர் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சரத்குமார், தனுஷ், அனிருத், விஜய் ஜேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “எனக்கு இருக்குற மொக்கை அறிவுக்கு நானே சொல்றேன். இந்தப் படம் நிச்சயமா மாஸ் ஹிட்டாகும்..” என்றார்.
சரத்குமார் பேசும்போது, “நானே தனுஷுக்கு தம்பிதான். அவரையே நான் ‘அண்ணன்’னுதான் கூப்பிடுறேன்.. அவரையும் என்னை ‘தம்பி’ன்னே கூப்பிடச் சொல்லியிருக்கேன். ஆனால் அவர்தான் அப்பப்ப கூப்பிட மறந்திடுறாரு.. அவர்கூட ஒரு படத்துலயாவது நடிச்சிரலாம்னு நானும் முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். சரியா அமையலை.. நிச்சயமா தனுஷ்கூட நான் நடிப்பேன்..” என்றார்.
தனுஷ் பேசும்போது, “மாரி’ படம் காதல்-நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சகமான படம். சென்னையில் நடக்கிற கதை. மாரி என்பது என் கதாபாத்திரத்தின் பெயர். அவன் ஒரு ‘லோக்கல்’ தாதா. அவனுடைய வாழ்க்கைல நடக்குற கதைதான் படமே.. புதுப்பேட்டைக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அது என்னோட கெட்டப்புலேயே தெரியும்..” என்றார்.
கேள்வி பதில் சீஸனில் இந்தப் படத்தில் “புகைப்பிடிப்பது போல காட்சியில் நடித்திருக்கிறீர்களே..?” என்று புகைந்த கேள்விக்கு பொத்தாம்பொதுவாக பதிலளித்தார் தனுஷ்.
“நான் இதற்கு முன் நடித்த ‘அனேகன்’ படத்தில் ஒரு காட்சியில்கூட புகை பிடிப்பதுபோல காட்சிகளே இல்லை. இந்த ‘மாரி’ படத்தில் என் கேரக்டர் ஒரு லோக்கல் தாதா. அப்படியொரு தாதா சிகரெட் பிடிக்க மாட்டான், தண்ணியடிக்க மாட்டான்னா சினிமால கொஞ்சம் இடிக்கும். அதனால்தான் அப்படி நடிக்க வேண்டியிருந்தது. நிஜ வாழ்க்கையில் எனக்கு சிகரெட், தண்ணி பழக்கமெல்லாம் கிடையாது. உங்களுக்கே தெரியும்..” என்றார்.
“உடன் நடிக்கும் ஹீரோயினுக்கெல்லாம் சிபாரிசு செய்றீங்களாமே..? என்ற கேள்விக்கு, “என்னைப் பொருத்தவரை, நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்ததில்லை. அதை இயக்குநர் முடிவுக்கே விட்டு விடுகிறேன். கதாநாயகிகள் விஷயத்தில், நான் எப்போதும் தலையிடுவதில்லை. யோசனைகூட சொல்வதில்லை. ஒரு சில படங்களில், என் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார் என்பதை படப்பிடிப்பு தளத்துக்கு போனபின்தான் தெரிந்து கொண்டிருக்கிறேன். ‘மரியான்’ படத்தில் அப்படித்தான் நடந்தது. படப்பிடிப்பு தளத்துக்குப் போன பிறகுதான் அந்த படத்தின் கதாநாயகி பார்வதி என்று எனக்கு தெரிய வந்தது…” என்றார்.
“படத்தின் டிரெயிலரில் ‘செஞ்சிருவேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். இப்போ சின்னஞ்சிறுசுகளெல்லாம் அதை பயன்படுத்துறாங்களே..? என்ற விசனக் கேள்விக்கு, பதிலளித்த தனுஷ், “Shooting-ல ஸ்கிரிப்ட் புக் கொடுப்பாங்க, அதுல டயலாக் இருக்கும், நான் என்னல்லாம் பண்ணனும்னு இருக்கும். அதை அப்படியே செஞ்சிட்டுப் போயிடுவேன், அந்த ‘செஞ்சிருவேன்’னுதான் எனக்குத் தெரியும். அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. நீங்க பெரிய, பெரிய கேள்வியெல்லாம் கேக்குறீங்க.. இதுக்கு பதில் சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு, வயசு கிடையாது, பக்குவமும் கிடையாது சார், விட்ருங்க ஸர்…” என வெள்ளந்தியாக பதில் சொன்னார்.
“உங்க மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பீர்களா?” என்ற கேள்விக்கு, “ஐஸ்வர்யா எனக்காக கதை எழுத வேண்டும். அந்த கதை எனக்கு பிடித்திருந்தால், நடித்தாலும் நடிக்கலாம். ஆனா இதுவரைக்கும் அப்படியொரு ஐடியா இல்லை. ஏன்னா நாங்களே அதை தவிர்த்துவிட்டோம். அவர் இயக்கத்தில் நான் நடித்தால், இரண்டு பேருமே வீட்டில் இருக்க முடியாது. யாராவது ஒருவர் வீட்டில் இருந்தால்தான் குழந்தைகளை கவனிக்க முடியும். அதுதான்.. வேறு ஒன்றுமில்லை..” என்றார்.
“இந்தி படங்களில் நடிப்பது அதிக சம்பளத்துக்காகவா..? அல்லது இந்திய அளவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவா?” என்ற கேள்விக்கு, “இரண்டுமே கிடையாது. தமிழ் படங்களைவிட, இந்தி படங்களுக்கு குறைந்த சம்பளம்தான் வாங்குகிறேன். சினிமாவுக்கு இன-மொழி பேதம் கிடையாது. அந்த வகையில், இன்னொரு மொழியில் நடித்தோம் என்ற திருப்திக்காகவே இந்தி படங்களில் நடிக்கிறேன். நான் நடித்து வெளிவந்த இரண்டு இந்தி படங்களுக்குமே அங்கே நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். இந்தி பட உலகை சேர்ந்தவர்கள் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்கள். திரும்பும் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறேன். நல்ல கதையும், வாய்ப்பும் வந்தால் நடிப்பேன்..” என்றார்.