விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹரி இயக்கும் படம் ‘பூஜை.’ விஷால், ஸ்ருதிஹாசன் நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பெட்ரம் ஹாலில் நடைபெற்றது.
விஷால், இயக்குனர் ஹரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட, லயோலா பொறியியல் கல்லூரியின் இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் டீன் ஜான் பிரகாசம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் விஷால் பேசும்போது “எனக்கு மேடையில் பேசுவதென்றால் பயம். நான் படித்த இந்த லயோலா கல்லூரியில் இந்த விழா நடைபெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த கல்லூரிக்கும், எனக்கும் உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்கிறது. எனவேதான் நான் முதலில் தயாரித்து நடித்த ‘பாண்டியநாடு’ படத்தின் இசையை இங்கு வெளியிட்டேன். படமும் வெற்றி பெற்றது. எனக்கு நல்ல பெயரும் கிடைத்த்து.
நான் இந்த கல்லூரியில் படித்தபோது பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. நான் படித்த படிப்பிற்கு இந்த கல்லூரியின் லைப்ரரியில்கூட நுழைய முடியாது.
நான் இங்கு விஸ்காம் படித்தேன். எங்கள் கல்லூரி விழா நடந்தபோது, கரண்ட் பலமுறை கட்டானது. அதற்கு நான்தான் காரணம் என்றார்கள். நான் எந்த பாவமும் செய்யவில்லை, எந்த தவறும் செய்யவில்லை.
நான் அப்போது மாணவர் தலைவர் தேர்தல் நடந்தபோது என் நண்பன் வெங்கடேஷ் வெற்றி பெற உழைத்தேன். அவ்வளவுதான். விஸ்காம் மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற விஸ்காம் மாணவன் நானே தடையாக இருந்ததாகக்கூட அப்போது பேசினார்கள். அதெல்லாம் உண்மையில்லை.
நான் லயோலா கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக போகிறேன் என்று சொன்னபோது என்னுடைய அப்பா, அம்மா இதை நம்பவில்லை. ஆனால் நான் இந்த அளவுக்கு வர இந்த கல்லூரிதான் காரணம். இங்கு வந்துவிட்டால் கல்வி மட்டுமல்ல… நம்பிக்கை, தைரியம் எல்லாம் கிடைக்கும்.
நான் இன்று இங்கு நின்று பேசவும், திருட்டு விசிடி பிரச்சனைகளுக்கு காவல் நிலையம்வரை சென்று புகார் கொடுக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைத்தது இந்த கல்லூரியால்தான். என்னாலேயே முடியும் என்றால் உங்களாலும் முடியும்.
நீங்கள் ஒவ்வொருவரும் திறமைசாலிகள்தான் என்பதை உங்கள் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து தெரிந்து கொண்டேன். இந்தக் கல்லூரியின் மீதுள்ள அன்பின் காரணமாகவே இந்த ‘பூஜை’ படத்தின் இசையையும் இங்கு வெளியிடுகிறேன்..” என்றார் விஷால்.