தமிழில் பிரபலமான ஒளிப்பதிவாளர் திரு.செழியன் அவர்கள். இவர் ‘கல்லூரி’, தேசிய விருது பெற்ற படங்களான ‘தென்மேற்கு பருவக் காற்று’, ‘பரதேசி’ போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த செழியன், தற்போது ஒரு இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார். இந்தப் பள்ளி சென்னை, சாலிகிராமம், 111, துரையரசன் தெருவில், THE MUSIC SCHOOL என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான், இயக்குநர் பாலா, பாடகர் மனோ, இயக்குனர் மிஷ்கின் மற்றும் ஓவியர் மருது ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் சீமான் பேசியது :
“இசை என்பது மொழி, நாடு, இனம் கடந்தது என்பார்கள். ஆனாலும் ஒரு மொழி இசையையும், கலையையும் பிரித்துவிட்டு தனித்து இயங்க முடியாது. இலக்கியத்தையும், கலையையும், இசையையும் பிரித்துவிட்டால் மொழிக்கு சிறப்பில்லை.
ஒரு காலத்தில் தமிழர்கள் கலைகளை ‘கூத்து’ என்று இழிவாக எண்ணிப் புறந்தள்ளினார்கள். கூத்து, நாடகம், பாட்டு என்பதனை புறக்கணித்ததன் விளைவு, இன்று வலிமைமிக்க திரை ஊடகத்தினைக்கூட பிற மொழி பேசுவோர் ஆக்கிரமித்துவிட்டனர். ஆனால் கால மாற்றத்தில் இப்போது நிலைமை சற்று மாறியுள்ளது. இசையை ஒரு கல்வியாக பார்க்கும் சூழல் இன்று வந்துள்ளது.
எங்கோ பண்ணைப்புரத்திலிருந்து வந்து இசைஞானி இசையில் சாதனை படைத்தார். அதேபோல எங்கோ சிவகங்கையில் பிறந்த செழியன், தனக்குத் தெரிந்த இசையறிவை இந்த தலைமுறைக்கு கொடுக்க விரும்பி இந்த இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார். இதை நிர்வகிப்பது அவருடைய மனைவி என்றாலும் செழியனின் பங்களிப்பு பெரிதும் உள்ளது. இதற்காக பல நூல்களை பல பாகங்களாக செழியன் எழுதியுள்ளார்.
இன்றைய தமிழ்ச் சமூகம் இசையை ஒரு கல்வியாகப் பயின்று பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த தருணத்தில், ‘ஓர் இசைப் பள்ளி தொடங்கும்போது பல மன நல மருத்துவமனைகள் மூடப்படுகின்றன’ என்கிற கவிஞன் அறிவுமதியின் கருத்தினை நான் வழிமொழிகிறேன். இந்த இசைப் பள்ளி முயற்சியை வாழ்த்துகிறேன்…” என்றார்.
இவ்வாறு சீமான் பேசினார்.