நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் சங்கத்தின் செயலாளர் விஷால் பேசும்போது, “சங்கத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. குண்டூசி வாங்கினால்கூட அதற்குக் கணக்கு உண்டு” என்றார்.
பொதுக்குழுவில் விஷால் பேசும்போது, “நாங்கள் நமது சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்யத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிலர் அதற்கு இடையூறு செய்கிறார்கள். வழக்கு போடுகிறார்கள்.
நடிகர் சங்க நிலத்தை மீட்டது தவறா..? புதிய கட்டிடம் கட்ட முயற்சிப்பது தவறா..? என்னை பார்த்து, ‘நீ ஆம்பளையா?’ என்று சிலர் கேட்டனர். நான் ஆம்பளை என்பதால்தான் இந்த இடத்தில் இப்போது நின்று பேசுகிறேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன் போன்றவர்களின் ஆத்மாக்கள் எங்களுடன் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் பயப்படாமல் எங்கள் வழியில் நடந்து செல்கிறோம்.
சங்கத்தில் பழைய நிர்வாகத்தின் கீழ் பல முறைகேடுகள் நடந்தன. அதை தட்டிக் கேட்டோம். நடவடிக்கை எடுத்தோம். இதனால் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுகிறார்கள்.
நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அறங்காவலர்களை அவர்களே நியமித்தனர். எனவேதான் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. யார் இடையூறு செய்தாலும், எந்த வகையில் தொல்லை கொடுத்தாலும் அதை எதிர்கொள்வேன்.
நடிகர்–நடிகைகள் தற்கொலையில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. நடிகர் சாய், நடிகை சபர்ணா ஆகியோர் சமீபத்தில் தற்கொலை செய்துள்ளனர். நடிகர்–நடிகைகள் யாரும் இனிமேல் பலியாக கூடாது. என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நடிகர் சங்கத்துக்கு வாருங்கள். எங்களிடம் குறைகளை சொல்லுங்கள். உங்கள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.
நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறோம். கணக்கு –வழக்குகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. குண்டூசிக்கு செலவு செய்தாலும் கணக்கு எழுதுகிறோம். வீட்டில் இருந்துதான் சோறு கட்டி வருகிறோம். பேட்டா கிடையாது. நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடக்காது என்று நான் உறுதி அளிக்கிறேன்…” என்றார்.









