full screen background image

“விஷால் என்ன சுப்ரீம் கோர்ட்டா..?” – கொதிக்கிறார் உஷா ராஜேந்தர்

“விஷால் என்ன சுப்ரீம் கோர்ட்டா..?” – கொதிக்கிறார் உஷா ராஜேந்தர்

நடிகர் சிம்பு மீது பல தயாரிப்பாளர்கள் பணம் பாக்கி வைத்திருப்பதாகக் கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து கெளதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்புக்கு பெப்சி முதலில் அனுமதி கொடுக்க மறுத்தது. பின்பு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி தந்தது.

இந்த நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து தனது மகனுக்காக களமிறங்கிய சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும் நேரில் சென்றார்.

அதன் பின்பு தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுடன் கலந்து பேசி கடன் பிரச்சினைக்கு தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் சிம்பு தரப்பினர்.

இது குறித்து பேசிய உஷா ராஜேந்தர், “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் வெளியீட்டுக்கு முதல் நாள்வரையிலும் அந்தப் படத்தில் நடித்ததற்காக சிம்புவுக்கு மூன்றரை கோடி ரூபாய் பணம் சம்பளப் பாக்கியாக இருந்தது.

அந்த நேரத்தில் தயாரிப்பாளர் எங்களிடத்தில் வந்து “சிம்பு தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும்” என்று கெஞ்சினார். நானும் சிம்புவிடம் கேட்டேன். அவரும், “படம் வெளியானால் போதும்மா.. எனக்கு பாக்கி சம்பளம் வேண்டாம்” என்று சொன்னார். அதனால் நாங்களும் அந்தச் சம்பளத்தைக் கேட்கவில்லை. தயாரிப்பாளருக்கே விட்டுக் கொடு்த்தோம்.

தயாரிப்பாளர் முன் பணமாக சிம்புவுக்குக் கொடுத்த செக்கும் கடைசியாக பவுன்ஸாகிவிட்டது. இந்த நிலைமையில் படம் வெளியானவுடன் சிம்புவால்தான் மொத்த நஷ்டமும் என்று சொல்லி அவதூறு கிளப்பினார்.

இதற்காக அவர் மீது சிம்பு கோர்ட்டில் 1 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்குத் தொடுத்திருக்கிறோம். அந்தக் கேஸ் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையிலேயே விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது இந்தப் பிரச்சினை அங்கே வந்தது. விஷால் எங்களுடைய தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே எங்கள் மீது ஒரு நடவடிக்கை எடுக்கிறார்.

“இனிமேல் சிம்பு நடிக்கும் ஒவ்வொரு படத்திலிருந்து இரண்டரை கோடி ரூபாயை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குக் கொடுக்க வேண்டும்” என்று..! இதென்ன நியாயம்..? இதையேல்லாம் கேட்பாரே இல்லையா..?

விஷாலின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடிப்போம் என்று சொல்லி பதவிக்கு வந்திருக்கும் இப்போதைய நிர்வாகத்தினரும் விஷால் காலத்தில் சொன்ன கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பையே இப்போதும் முன் வைத்து பேசுகிறார்கள்.

விஷால் என்ன சுப்ரீம் கோர்ட்டா..? அவர் சொன்னால் அதுக்கு அப்பீலே கிடையாதா.. நீதமன்றத்தில்கூட படிப்படியா பல கோர்ட்டுகள் இருக்கு. தொடர்ந்து முறையிடலாம். ஆனால் இங்கே முடியாதாம்..இதென்ன அராஜகமா இருக்கு..?” என்று கொதித்துப் போய் பேசியுள்ளார்.

Our Score