full screen background image

விருமன் – சினிமா விமர்சனம்

விருமன் – சினிமா விமர்சனம்

நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தான் தயாரித்த  ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து, அதே போன்ற கிராமத்து பின்னணியில் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம்தான் இந்த விருமன்’.

இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், மனோஜ், ‘மைனா’ நந்தினி, வசுமித்ரா, அருந்ததி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – S.K.செல்வகுமார், சண்டை இயக்கம் – அனல் அரசு, கலை இயக்கம் –  ஜாக்கி, மக்கள் தொடர்பு – ஜான்சன், இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன். இந்தப் படத்தை இயக்குநர் முத்தையா எழுதி, இயக்கியிருக்கிறார்.

‘விருமன்’ என்பது ஒரு குலத்தினர் கும்பிடும் அவர்களது குலசாமியின் பெயர். தேனி மாவட்டப் பகுதிகளில் ‘விருமன்’ என்றால் ‘பிரம்மன்’ என்றும் சொல்வார்கள்.

வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள்தான். அந்தத் தவறுகளை, தவறு செய்தவரின் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் சுட்டிக் காட்ட வேண்டும். அது அவர்களுக்கு நிச்சயமாக நல்லது செய்யும். நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அந்த உறவுதான் நல்ல உறவு. அப்படியொரு உறவுதான் இந்தப் படத்தின் ஹீரோவான விருமன்’.

சென்ற தலைமுறைகளில் நம் தலைமுறைகள் எப்படி குடும்பமாக இருந்தார்களோ  இன்றைக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்பவன்தான் இந்த விருமன்’. உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தயங்காமல் முன்னால் போய் நிற்பவன்தான் இந்த விருமன்’. இது மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச் கொண்ட கேரக்டர்தான் இந்தப் படத்தின் நாயகனான விருமன்.

ஆனால், தன் தாயின் சாவுக்குக் காரணமான தனது தந்தை மீது அழியாக் கோபத்தோடு இருக்கும் விருமன், தனது தாய் மாமனான ராஜ்கிரணால் வளர்க்கப்படுகிறான்.

அதே ஊரில் தாசில்தாராக இருக்கும் தனது தந்தையான முனியாண்டி என்ற பிரகாஷ்ராஜ் மீது அடங்காத கோபத்தில் இருக்கிறான் விருமன்.

பிரகாஷ்ராஜோ தனது மற்றைய மூன்று மகன்களுடன், அம்மாவுடனும், இரண்டு மருமகள்களுடனும் வாழ்ந்தாலும் பணம், பணம், பணம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்.

அப்பனை எந்தெந்த வழிகளிலெல்லாம் அவமானப்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்கிறார் விருமன். இதேபோல் பிரகாஷ்ராஜூம் விருமன் மீது வெறுப்பாக இருப்பதால், இருவருக்கும் இடையே அவ்வப்போது முட்டல், மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தனது அப்பாவைத் தவிர்த்து மற்றைய பாட்டி, அண்ணன்கள், மதினிமார்களிடம் தனது பாசத்தைக் காட்டி குடும்ப உறவுகளை வளர்த்தெடுக்க நினைக்கிறான் விருமன். ஆனால், அவனது ஒவ்வொரு முயற்சியையும் அப்பா பிரகாஷ்ராஜ் கெடுத்துக் கொண்டே செல்கிறார்.

அப்பா – மகனுக்குள் என்னதான் பிரச்சினை..? இறுதியில் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்த விருமன்’ படத்தின் கதை.

கார்த்தியிடம் இருக்கும் ஸ்பெஷலாட்டியே கிராமத்து முரடனாகவும், நகரத்து ஐடி பையனாகவும் அவரால் மிக எளிதாக தன்னைப் பொருத்திக் கொள்ள முடியும். அது அவருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் கிப்ட்.

இந்தப் படத்தில் ‘பருத்தி வீரன்’, ‘கொம்பன்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் அதே கிராமத்து ரவுடி கதாபாத்திரத்தைக் கைப்பற்றியிருக்கிறார் கார்த்தி.

தொடை தெரிவதுபோல லுங்கியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு, முறுக்கு மீசையுடன், ஷேவ் செய்ய தேவையில்லாத தாடியுடன், அசல் ரவுடி போலவே காட்சியளிக்கிறார் கார்த்தி.

‘என்ன மாமா சௌக்கியமா?’ என்ற அந்த மதுரை ஸ்லாங்கை மிகக் கச்சிதமாக பேசுவது கார்த்திதான். இந்தப் படத்திலும் அது போலவே படம் நெடுகிலும் தனது ஸ்டைலிஷான டயலாக் மாடுலேஷனில் ஹீரோத்தனத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் கார்த்தி.

சூரியுடன் சேர்ந்து கொண்டு அனைவரையும் கலாய்ப்பது.. பெத்த அப்பன் என்றும் பாராமல் பிரகாஷ்ராஜை இவர் ஓட்டுவதைப் பார்த்தால் மானம், ரோஷமுள்ள எந்த அப்பனும் ஊருக்குள்ளேயே இருக்க மாட்டான். இது ஹீரோயிஸ கதை என்பதால் இயக்குநர் அப்பனை ஊருக்குள்ளேயே உட்கார வைத்திருக்கிறார்.

சென்டிமெண்ட் காட்சிகளிலும் தனது பாசத்தைக் காட்டத் தயங்காமல் அழகாய் நடித்திருக்கிறார் கார்த்தி. ஆக்ரோஷமாய் பொங்க வேண்டிய காட்சிகளில் பொங்கித் தீர்த்திருக்கிறார். சண்டை காட்சிகளில் புயலாய் பாய்ந்திருக்கிறார். நடனக் காட்சிகளில் குத்தாட்டம் ஆடியிருக்கிறார். மொத்தத்தில் விருமனாகவே வாழ்ந்திருக்கிறார் கார்த்தி.

மெகா இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி, தேன்மொழி’ என்னும் நாயகி கேரக்டரில் நடித்திருக்கிறார். முதல் படம் போலவே தெரியவில்லை. கார்த்தியுடனான முதல் காட்சியிலேயே அவரது தங்கு தடையற்ற எகத்தாளப் பேச்சிலேயே அவரது நடிப்புத் திறன் வெளிப்படுகிறது.

கார்த்தியே பெரிய சதாய்ப்பாளர் என்றால் அதிதி அவரையும் தாண்டிய சதாய்ப்பாளராக இருக்கிறார். அவ்வப்போது சின்னச் சின்ன முக பாவனைகளிலும் கேமிராவையும் தாண்டி நம்மையும் கவர்கிறார். பாடல் காட்சிகளில் பாடலுக்கேற்றபடி அவர் காட்டியிருக்கும் முக பாவனைகளும், அசத்தலான ஸ்டெப்புகளும் அடுத்து ரவுண்ட் அடிக்கும் ஒரு ஹீரோயின் ரெடி என்பதைச் சொல்கிறது.

அதே சமயம் சென்டிமெண்ட் காட்சிகளில், சோகக் காட்சிகளில் அளவுகோல் வைத்து நடிப்பைக் காண்பித்திருக்கிறார் அதிதி. வேறொரு இயக்குநரின் கை வண்ணத்தில் இன்னும் சிறப்பாக நடிப்பார் என்று நம்பலாம்.

‘குத்துக் கல்லு’ என்ற வித்தியாசமான பெயருடைய கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். ஒரு காலை நொண்டிக் கொண்டே நடக்கும் அந்த மேனரிஸத்தைக் கடைசிவரையிலும் பின்பற்றியிருக்கிறார். மதுரை ஸ்லாங்குக்கு சூரி அத்தாரிட்டி போலும். அவ்வப்போது கார்த்திக்கு சமமாக இவர் அடிக்கும் பன்ச்சினால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அம்மாவாக சரண்யா நடித்திருக்கிறார். கதையே அவரைச் சுற்றித்தான் நடக்கிறது. அமைதியான இரக்கம் கொண்ட மனுஷியாக.. மனசு சரியில்லாத நேரத்தில் முனியாண்டி கோவிலில் வந்து அமர்ந்து கொள்ளும் திக்கற்ற பார்வதி’ கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார் சரண்யா.

வடிவுக்கரசி பிரகாஷ்ராஜின் அம்மாவாக… குடும்பப் பெருமை பேசும் மூத்தக் குடிமகளாக.. தற்பெருமை பேசியே உண்மையை உணராமல் வாழும் கிராமத்து கிழவியாக நடித்திருக்கிறார்.

பணம், பதவி, கவுரவத்தை மட்டுமே பெரிதாக எண்ணி, உறவுகளையும், மகன்களையும், மருமகள்களையும் துச்சமாக நினைக்கும் முனியாண்டி’ கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் அதகளம் செய்திருக்கிறார். உண்மையில் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம் சேர்த்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இறுதியில் மனம் மாறும் காட்சியில்கூட மிக எளிதாக பார்வையாளர்களையும் தனது நடிப்பால் மடை மாற்றியிருக்கிறார்.

சிங்கம் புலியின் அவ்வப்போதைய ஒன் லைன் காமெடிகள் சிறப்பு. தாய் மாமன்களாக ராஜ்கிரண், கருணாஸூம். ராஜ்கிரண் ஒரு சண்டை காட்சியில் தனது ஆக்ரோஷமான பலத்தைக் காண்பித்திருக்கிறார். பிரகாஷ்ராஜிடம் கோபமாகப் பேசும் அந்தக் காட்சியில் பழைய ராஜ்கிரணை பார்க்க முடிகிறது.

ரவுடியாக ஆர்.கே.சுரேஷ் வலம் வந்து அடிதடியில் இறங்கி தனது புஜபலத்தைக் காட்டுகிறார். அண்ணன்களாக மனோஜ் பாரதி, வசுமித்ரா இருவரும் முதலில் தம்பியைப் புரிந்து கொள்ளாதவர்களாக வாழ்ந்து, பின்பு தம்பியுடன் வந்து ஒட்டிக் கொள்ளும் யதார்த்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

இவர்களது மனைவிகளில் மைனா நந்தினி விவரமானவராகவும், அருந்ததி அப்பாவியாகவும் நடித்திருக்கிறார்கள். ரோபோ ஷங்கரின் மகளான பாண்டிலட்சுமி இன்னொரு பக்கம் நாயகிக்கு நட்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். வெல்கம் டூ போர்டு..!

கே.எஸ்.செல்வகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்தை அழகுற காண்பித்திருக்கிறது. கிராமத்து வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் காட்சிப்படுத்தியதில் ஓகே வாங்குகிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே படம் வெளியாவதற்கு முன்பேயே ஹிட்டடித்துவிட்டன. திரையில் அதே பாடல்களை காட்சிகளோடு பார்க்கும்போது ரசனையாகத்தான் இருக்கின்றன. அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டவிதம் ரசிக்க வைக்கின்றன.

படத் தொகுப்பாளர்தான் சிற்சில இடங்களில் அப்படியே விட்டுவிட்டார் போலிருக்கிறது. காட்சிகள் ஜம்ப் ஆவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

படத்தின் முதல் காட்சியிலேயே கதையின் மையத்தை சொல்லிவிட்டார் இயக்குநர். பின்பு கதை அடுத்தடுத்து நகர்ந்து செல்லும்போது பல்வேறு கதாபாத்திரங்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திரைக்கதை பல்வேறு சாலைகளில் பயணித்து கடைசியில்தான் ஒன்று சேர்கிறது. இது ஒருவித சலிப்புணர்வைத் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் சரண்யா சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மனதைத் தொடும் அளவுக்கு உள்ளது. அப்பா-மகன் மோதலுக்கு நியாயத்தையும் சொல்லியிருக்கின்றன.

கார்த்தியின் அண்ணன்கள் கார்த்தி பக்கம் திரும்புவதற்கான நியாயமான காரணங்கள் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை கார்த்தியுடன் சம்பந்தப்படுத்தும் திரைக்கதையும் லாஜிக் இல்லாததுதான்.

எளிமையான வசனங்களுடன், கார்த்தி உதிர்க்கும் நிறைய சொலவடைகளும் படத்திற்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கிறது.

கிராமத்து வாழ்வியலை சொல்லும் இந்தப் படத்தில் ஏன் பெண்ணடிமைத்தனம் மிக்க காட்சிகளை இயக்குநர் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அது பிரகாஷ்ராஜின் பாத்திரப் படைப்பை பறை சாற்றத்தான் என்றால் நாம் எதுவும் சொல்ல முடியாது.

அதேபோல் வேறொரு காட்சியில் “பொண்ணுக பூமா தேவி மாதிரியிருக்கணும். இவ என்னடான்னா பூலான்தேவி மாதிரில இருக்கா” என்ற வசனமும் அதற்கு சூரி கொடுக்கும் கவுண்ட்டர் வசனங்களும் படத்திற்கு மிகப் பெரிய விளம்பரத்தை இனிமேல் பெற்றுக் கொடுக்கலாம்.

வழக்கம்போல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்தான் அப்பா மனம் திருந்துகிறார். மகன் மன்னிக்கிறார். குடும்பம் ஒன்று சேர்கிறது. வழக்கமான கமர்ஷியல் செண்டிமெண்ட் படம் என்பதால் இப்படித்தான் முடிவு இருக்கும் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததுதான்..!

அதைத் தப்பில்லாமல் செய்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

RATING : 3.5 / 5

Our Score