full screen background image

விநோதய சித்தம் – சினிமா விமர்சனம்

விநோதய சித்தம் – சினிமா விமர்சனம்

ஜீ-5 ஓடிடி தளத்தின் சார்பாக தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

தமிழ்ச் சினிமாவின் முன்னணி  இயக்குநரும்,  நடிகருமான  சமுத்திரக்கனி இயக்கியதோடு அல்லாமல் படத்தின் முதன்மை  கதாபாத்திரத்திலும்  நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் ரஞ்சனி, முனிஸ்காந்த்,  சஞ்சிதா ஷெட்டி,  ஜெயப்பிரகாஷ், ஹரிகிருஷ்ணன், அசோக் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.  மூத்த  ஒளிப்பதிவாளர்  ஏகாம்பரம்  ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத் தொகுப்பு செய்துள்ளார்.

ஸ்ரீவத்சன் என்ற நாடக எழுத்தாளர் எழுதிய நாடகத்தின் திரை உருவாக்கம்தான் இந்தப் படம். 18 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நாடகம் அரங்கேறியுள்ளது. இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்ட முறை இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது. நாடக ஆர்வலர்களால் கொண்டாடப்பட்ட நாடகம் இதுவாகும்.

இந்த ‘விநோதய  சித்தம்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 13-ம் தேதியன்று ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியானது.

மனித மனம் சில நேரங்களில் வேடிக்கையான  முறையில்  நடந்து  கொள்ளும். நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. அதனால் விளையும் விளைவுகளை நாம் மீதமிருக்கம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் அந்த ஒரு சில நிமிட, நொடி நேர செயல்களை பற்றி நாம் யோசிப்போம். இதுதான் இப்படத்தின்  அடிப்படை கரு. 

தன்னால்  மட்டுமே  தனது  குடும்பத்தை  கவனித்துக்  கொள்ள  முடியும்.  தான்  இல்லையென்றால்  தனது  குடும்பம் அழிந்துவிடும் என்று  நினைக்கும்  ஒவ்வொரு  மனிதருக்கும் தகுந்த  பதிலை  கூறும்  படமே இந்த ‘விநோதய சித்தம்’. 

நான்’ என்ற ஆணவத்தை அழியச் செய்யும் ஓர் அற்புத படைப்பு இந்த ‘விநோதய சித்தம்’. இயக்குநர் சமுத்திரக்கனி இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சிஷ்யன்’ என நிரூபித்து காட்டியிருக்கும் படம் என்றும் சொல்லலாம்.

“இந்த வீடே என்னால்தான் இயங்குகிறது. இந்த கம்பெனி நான் இல்லாவிட்டால் இல்லை…” என்று மார் தட்டிக் கொண்டு 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை நாம் நிறையச் சந்தித்து இருப்போம்.. ஏன் நாம்கூட அப்படியான மனிதர்கள்தான்.

இந்தப் படத்தின் நாயகன் தம்பி ராமையாவும் அப்படியான மனிதர்தான். தான் எடுக்கும் முடிவே சரி… தன்னால்தான் இங்கு இருப்பவற்றை சரியாக்க முடியும் என்ற நம்பிக்கை உடையவர். ஒரு நிமிட தாமதத்திற்குக்கூட ஓவர் சீன் போடும் பேர்வழி!

தம்பி ராமையாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தீபக் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். தம்பி ராமையாவின் 25-வது திருமண நாளைக் கொண்டாட குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.

அந்த சமயத்தில் தம்பி ராமையாவுக்கு அலுவலகத்தில் இருந்து அவசர வேலை ஒன்று வருகிறது. இதற்காக இவர் கோயம்புத்தூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பின் தம்பி ராமையா தன் வேலையை முடித்து திரும்பும்போது கோவையில் விமானத்தை தவற விடுகிறார்.

நாளை தனது 25-வது திருமண நாள் என்பதால் சென்னையில் இருந்தாக வேண்டுமே என்ற கட்டாயத்தினால் காரில் சென்னைக்கு வரும் தம்பி ராமையா, வழியில் ஓரிடத்தில் விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார்.

அந்த நேரத்தில்தான் காலம்’, ‘நேரம்’ அல்லது ‘விதி’ தன்னை சொல்லிக் கொள்ளும் சமுத்திரக்கனி அவருக்கு அறிமுகமாகிறார். அவர் தம்பி ராமையாவிடம், “நீங்கள் இறந்து விட்டதால் உங்களின் நேரம் முடிந்து விட்டது. அதனால் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். தம்பி ராமையாவோ “எனக்கு முடிக்க வேண்டிய கடமைகள் சில இருக்கு. அதை முடித்து விட்டு வந்து விடுகிறேன்..” என சமுத்திரக்கனியிடம் கொஞ்சி வேண்டுகோள் வைக்கிறார்.

சமுத்திரக்கனியும் 90 நாட்கள் அவகாசத்தை தம்பி ராமையாவுக்கு தருகிறார். “இந்த 90 நாட்களில் நீங்க என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை செய்து கொள்ளுங்கள்…” என்று கூறினார்.

கிடைத்த 90 நாள் அவகாசத்தில் தம்பி ராமையா என்னவெல்லாம் செய்தார்..? கடைசியில் தம்பி ராமையாவை, சமுத்திரக்கனி திரும்பவும் அழைத்துச் சென்றாரா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படம் தம்பி ராமையாவிற்கு கிடைத்த ஒரு வாழ்க்கைப் பொக்கிசம்.. மிகத் திறம்பட நடித்திருக்கிறார். நடை, உடை, பாவனை என ப்ரேம் டூ ப்ரேம் கலக்கியுள்ளார்.

காலனாக வரும் சமுத்திரக்கனி கேரக்டரும் வலுவாக எழுதப்பட்டுள்ளதால் அவரும் அசத்தி இருக்கிறார். முனிஷ்காந்த் காமெடியனாக இல்லாமல் ஒரு வில்லத்தனம் நிறைந்த கேரக்டரில் நச்சென முத்திரைப் பதித்துள்ளார். ஸ்ரீரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, மற்றும் மருமகளாக நடித்தவர், தீபக் உள்பட படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் மிகவும் முக்கியம். அதை உணர்ந்து வெகு சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரமும், இசை அமைப்பாளர் சத்யாவும். 

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஷாட்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஷாட் க்ளைமாக்ஸ் ஷாட். அதை ஒரு ‘வாழ்வியல் கவிதை’ எனலாம்.

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் சத்யாவின் இசையொலி படம் முழுவதும் ஒரு புது உணர்வை தந்தபடியே இருக்கிறது.

சமுத்திரக்கனி பேசும் ஒவ்வொரு வசனமும் பேரர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. “வாழ்க்கையை ப்ளான் பண்ணியெல்லாம் வாழ முடியாது. அது கூடவும் கூடாது. ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வாய்ப்பு நமக்கிருந்தால் கொடுத்தும் வாழ வேண்டும். நாம் கொடுப்பதுதான் நமக்கு திருப்பி வரும்…” என்பது போன்ற கருத்துக்கள் நம் மனதில் ஆழமாக இறங்குகிறது.

காதல், அதிரடி சண்டை காட்சிகள், குத்துப் பாட்டு என்று எதுவும் இல்லாமல் கதையை சுகமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.  

வாழ்க்கையில் எல்லாமே முன்கூட்டியே நிர்ணயக்கப்படுகின்ற ஒன்று. நாம் வாழும் வாழ்க்கையில் மற்றவர்களுடன் நல்ல மனதோடும், கருணையோடும் வாழ வேண்டும் என்ற செய்தியை படத்தின் மூலம் இயக்குநர் சமுத்திரக்கனி சொல்லி இருக்கிறார்.

படத்தை பார்க்கும்போது நம்மை அறியாமலேயே கண்ணீர் வரும் அளவிற்கு உணர்வுபூர்வமான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

பொதுவாக வாழ்வில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களைப் பற்றி பலரும் படம் எடுப்பார்கள். ஒட்டு மொத்தமாக வாழ்வின் பயன் மற்றும் பலன்களையே கதையாக்கி ஒரு நல்ல படைப்பாக்கி இருக்கிறார் சமுத்திரக்கனி.

உளவியல், வாழ்வியல் என படம் இருந்தாலும் அவற்றை எல்லாருக்கும் பிடித்த வகையிலும் புரியும்படியும் எடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

இப்படி ஒரு  தத்துவார்த்த படத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சு என்ற எண்ணம் படம் முடிந்ததும் நம் மனதில் தோன்றும். அதுதான் இந்த விநோதய சித்தம்’ படத்தின் ஆகப் பெரும் வெற்றி..! 

இப்படியொரு படைப்பைத் தந்த இயக்குநர் சமுத்திரக்கனிக்கு சமுத்திரம் அளவிலான நன்றிகள்!

RATINGS : 4.5 / 5

Our Score