இந்த பதிவை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இதே நேரம், வினோ மிர்தாத் என்கிற அந்த சினிமா கலை இயக்குநர், கோவை அருகேயுள்ள வெள்ளியங்கிரி காட்டுப் பகுதிக்குள் நுழைந்து, வெளியேற பாதை தெரியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை.
‘மதுபானக்கடை’ படத்தின் கலை இயக்குனர் வினோ மிர்தா. இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 5 ஆண்டுகளாக பல சினிமா படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை குறித்து பல்வேறு குறும்படங்களையும் எடுத்துள்ளாராம். நிறைய முறை அந்தப் பகுதிக்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வினோ மிர்தாத் தனியாக வெள்ளிங்கிரி மலைக்கு சென்றுள்ளார். பின்னர் காலை 9.30 மணி அளவில், தான் வழி மாறி வந்துவிட்டதாக மதுபானக்கடை படத்தின் இயக்குனரும், தனது நண்பருமான கமலக்கண்ணனுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார்.
கமலக்கண்ணன் பதறியடித்து கோவை வெள்ளியங்கிரி வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். கோவை வனத்தறையினர் தற்போது அங்கேயிருக்கும் பழங்குடி மக்களின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 3 குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து சென்று தீவிர தேடி வருகின்றனராம். வினோ மிர்தாத்தின் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கான முயற்சிகளிலும் வனத்துறை ஈடுபட்டுள்ளது. வினோ மிர்தாத்தை கடைசியாக ‘செல்போன்’ மூலம் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் காருண்யா அலைவட்டத்திற்குள் இருந்ததாக கண்டறிந்துள்ளனர் வனத்துறையினர்.
சற்று நேரத்திற்கு முன்பாக இயக்குநர் கமலக்கண்ணனை நாம் தொடர்பு கொண்டோம். இன்னமும் வினோ மிர்தாத்தை கண்டறிய முடியவில்லை என்று வனத்துறையினரிடமிருந்து தங்களுக்குத் தகவல் வந்திருப்பதாகவும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார். நண்பர் வினோ மிர்தாத் விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்..!











