நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றிய்வர், கோடம்பாக்கத்தில் இயக்குநராக பணிபுரிய அந்த விஞ்ஞானி வேலையை ராஜினாமா செய்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்..?
யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நான் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறேனோ அதை நிச்சயமாக செய்வேன் என்று உறுதியாகச் சொல்லி வந்திருக்கிறார் விஞ்ஞானி பார்த்தி.
இவரே கதை எழுதி, ஹீரோவாக நடித்து, தயாரித்திருக்கும் ‘விஞ்ஞானி’ படத்தின் பிரஸ்மீட் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
வந்திருந்தவர்களில் இயக்குநரும், இவருமே அதிக நேரத்தை சாப்பிட்டுவிட்டார்கள். ஆனாலும் விஞ்ஞானி பார்த்தியின் பேச்சில் ஒரு ஈர்ப்பு இருந்ததென்னவோ உண்மை.
“என் சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். காரைக்குடி அழகப்பா செட்டியார் தொழில் நுட்பக் கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றேன். அறிவியல் மீது தீராத ஆர்வம் கொண்டு, என் உயர்கல்வியை இந்திய அறிவியல் நிறுவனத்தில் பயின்று, அங்கு விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றேன்.
என் கனவுகள் அனைத்தும் மிகப் பெரியது. சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்காவின் நாசா(NASA) விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்ற விரும்பினேன். அந்த பெருமைமிக்க நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த விரல்விட்டு எண்ணக்கூடிய விஞ்ஞானிகளில் நானும் ஒருவன்.
நாசா’வில் நானும் என் குழு உறுப்பினர்களும் ஓசோன் படலம், பருவ நிலை மாற்றம் போன்றவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது தொடர்பான கண்டுபிடிப்பிலும் இறங்கினோம்.
இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், பயோடெக்னாலஜி ஆய்வுத் துறையில் வர்த்தக ஆலோசகராக செயல்பட்டேன். அதனைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் 2008-ம்ஆண்டு அறிவியல் ஆய்வு அடிப்படையிலான சொந்த நிறுவனத்தை உருவாக்கினேன்.
எனது பள்ளி நாட்களில் நான் நடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். கல்லூரி காலகட்டத்தின்போது, கலை நிகழ்ச்சிகளில் என்னை முன்னிறுத்திக் கொண்டேன். அமெரிக்காவில் இருந்தபோது அங்கே ஜூம்பா நடனம் கற்றுக் கொண்டு, என் நடனத் திறமையை வளர்த்துக் கொண்டேன். அதுவரையிலும் அறிவியல் ஆய்வுத் துறையில் இருந்த நான், என் நீண்ட கால கனவான கலைத்துறைக்கு மாற முடிவு செய்தேன்.
எனது முதல் படைப்பு விஞ்ஞானம் தொடர்புடைய கதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதன் காரணமாகவே, என் திரைப்படத்துக்கு ‘விஞ்ஞானி’ என்று பெயர் சூட்டினேன்.
இந்த விஞ்ஞானி’ திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நடிகர் – நடிகைகள்தான்.
மீரா ஜாஸ்மின்தான் இதில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை கேரளாவுக்கே நேரில் சென்று சந்தித்து கதையைச் சொன்னோம். மிக ஆர்வமாகக் கேட்டவர் ஒத்துக் கொண்டார். ஆனால் மீண்டும் நாங்கள் டிஸ்கஷனில் உட்கார்ந்தபோது திரைக்கதை முற்றிலுமாக மாறியிருந்தது.. இப்போதும் நாங்கள் திரும்பவும் கதையைச் சொன்னபோது கொஞ்சமும் யோசிக்காமல் “யெஸ்” என்றார் ஜாஸ்மின்.. அதேபோல் படப்பிடிப்பில் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றி..!
நான் தொடர்ந்து இந்த கோடம்பாக்கத்தில் இருப்பதற்காகத்தான் வந்திருக்கிறேன்.. ஏதோ ஒரு வழியில் நிச்சயமாக நான் இங்கேயே இருப்பேன். இப்போது முதல் படம் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து படங்களை தயாரிப்பேன். அதில் வேறொருவர்கூட ஹீரோவாக நடிக்கலாம். இயக்கத்தை இன்னமும் முழுசாகக் கற்றுக் கொள்ளவில்லையென்பதால் சில படங்களின் தயாரிப்புக்கு பின்பு படங்களை இயக்குவேன்..
தண்ணீரின் அருமை தெரியாமல் நாம் அதனை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அந்தத் தண்ணீர் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதான் இந்தப் படத்தின் கதை. இது இப்போதைக்கு உலகளாவிய கதை.. படம் நிச்சயம் பேசப்படும் என்றே நம்புகிறேன்..” என்றார் இயக்குநரான விஞ்ஞானியான பார்த்தி.