‘கழுமரம்’ என்ற திரைப்படத்தில் தன் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும், யார் இவர் என்று கேட்கும் அளவிற்கு ஒரு புதிய முகம் வில்லத்தனம் செய்திருக்கிறது.
கத்தியின்றி, இரத்தமின்றி, தன் நடிப்பால் பார்ப்பவர்களை எரிச்சல் ஊட்டும் வகையில் கதாநாயகனுக்கு வில்லத்தனம் செய்யும் கதாப்பாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார் சின்னத்திரை இயக்குநரான தமிழ் பாரதி.
‘பைரவி’, ‘கிருஷ்ணா காட்டேஜ்’, ‘காத்து கருப்பு’, ‘என் தோழி என் காதலி என் மனைவி’, ‘அம்மு’, ‘கனா காணும் காலம்’, ‘அஞ்சறைப்பெட்டி’, ‘சுவை தேடி’, ‘சூரிய புத்திரி’, என்ற புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவரான தமிழ் பாரதி, சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் ‘கழுமரம்’ படத்தில் நடித்தது பற்றி இயக்குநர் தமிழ் பாரதி பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநரான கொட்டாச்சி என் நீண்ட கால சகோதரன். என்னை அவர் இந்த ‘கழுமரம்’ படத்தில் நடிக்கச் சொன்னார். முதலில் நான் தயங்கினேன்.
“எனக்கு நடிப்பெல்லாம் வராதே…” என்று நான் சொன்னாலும், “நீங்க இப்போ எப்படி என்கிட்ட பேசறீங்களோ.. அதே மாதிரி கேமிரா முன்னாடியும் பேசினாலே போதும்..” என்று சொல்லி என்னை வற்புறுத்தி அந்தப் படத்தில் நடிக்க வைத்தார்.
இறுதியில் படம் பார்த்த அனைவருமே படத்தில் என்னுடைய நடிப்பைப் பெரிதும் பாராட்டினார்கள். எனக்கு இப்போது சந்தோஷமாக உள்ளது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்..” என்றார் உறுதியான குரலில்..!
வாழ்த்துகள் தோழர்..!









