நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக அந்நிறுவனமே செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு திரைப்படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக அந்தத் தொலைக்காட்சியே செய்தி வெளியிடுவது இதுதான் முதல் முறையாகும்.
இந்த ‘வேலைக்காரன்’ படத்தை தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தனது 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். இதே நிறுவனம்தான் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘ரெமோ’வையும் தயாரித்திருந்தது. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா முதல்முறையாக நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் அறிமுகமாகிறார். இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார்.
படத்தை இயக்குநர் மோகன்ராஜா இயக்கியிருக்கிறார். `தனி ஒருவன்’ பட வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கியிருக்கும் படம் இது. ஒரு சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்டு இந்த வேலைக்காரன் படம் உருவாகியிருக்கிறதாம்.
சென்னை மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் ஆயுத பூஜை விடுமுறை நாளான செப்டம்பர் 29-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இன்னமும் படமே வெளியாகாத நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்பட்டது, தமிழ்த் திரையுலகத்தை இனிய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி வாங்கியுள்ளதாக அந்த டிவி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இது குறித்து விஜய் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலரான கிருஷ்ணன் குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியும், தொடர்ச்சியான வெற்றியும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இது அவரது திறமைக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும்.
தனி ஒருவனில் இயக்குநர் மோகன்ராஜா செய்திருந்த மேஜிக்கை நாம் அறிந்திருக்கிறோம். மோகன்ராஜாவின் படங்களுக்கு தொலைக்காட்சி ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வெற்றிக் கூட்டணி மிகப் பெரிய அளவுக்கு வெற்றி பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
சமீபத்தில் வெளியான வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் திரை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. இதனாலேயே இந்த வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை எங்களது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியிருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார்.
“தனி ஒருவன்’ என்ற அதிரடியான படம் மூலமாக ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகத்தையும் கவர்ந்தவர் இயக்குநர் மோகன் ராஜா. அந்த மேஜிக் நிச்சயமாக இந்த வேலைக்காரனிலும் எதிரொலிக்கும் என்று நாங்கள் உறுதியாய் நம்புகிறோம். இதனாலேயே விஜய் டிவி, சிவகார்த்திகேயன், 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் ஆகிய மூன்றுமே ஒன்றிணைந்து பயணிக்கிறோம். இந்த ஒற்றுமை படத்தை நினைத்த முறையில் வெளியிடவும், விளம்பரப்படுத்தவும் நிச்சயமாக உதவும் என்று நம்புகிறோம்..” என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த `மெரினா’, `எதிர்நீச்சல்’, `மான் கராத்தே’ உள்ளிட்ட படங்களின் தொலைக்காட்சி உரிமையையும் விஜய் டி.வி.யே வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.