ஒரு உண்மையான கலைஞரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வகையில் வாழ்நாள் மைல் கல் சாதனையாக ஒரு படம் நிச்சயமாக அமையும். அப்படி விஜய் சேதுபதி தனக்குப் பெருமையளிக்கப் போகும் படமாக ‘சீதக்காதி’ படத்தை நினைக்கிறார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற மிகச் சிறந்த நகைச்சுவை படத்தை தந்த விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் காம்பினஷனில், இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். Passion ஸ்டுடியோஸ் நிறுவனத்தார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
‘சீதக்காதி’ படத்தின் முதல் பார்வையான ‘மேக்கிங் ஆஃப் ஐயா’ என்கிற பெயரில் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்தித்திற்கான மேக்கப்பை இடும் நிகழ்வை வீடியோவாக்கி சமீபத்தில் வெளியிட்டார்கள். இந்த வெளியீட்டு நிகழ்வை விஜய் சேதுபதி கொண்டடும் நேரத்தில், தனது உற்சாகத்தை வார்த்தைகளை மூலமும் இதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்..? அவர் தோற்றம் எப்படி இருக்கும் என நாம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும்போது, விஜய் சேதுபதியே அதைப் பற்றி கூறுகிறார்.
“இந்த ‘சீதக்காதி’ திரைப்படம் சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணிதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நான் நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். ‘சீதக்காதி’ ஒரு ஆத்மார்த்தமான படம். கலைக்கு முடிவே இல்லை. சாகாவரம் பெற்றது என்ற செய்தியை இத்திரைப்படம் சொல்லும். என் 25-வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியம் செய்திருப்பதாக எண்ணுகிறேன்…” என்றார்.









