full screen background image

‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி. 

‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி. 

படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படைப்பாக இருக்கிறது ‘ஓ மை கடவுளே’ படம்.

அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் இந்தத்  திரைப்படம்… இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர்களின் பட்டாளத்தால் மேலும், மேலும் எதிர்பார்ப்பைக் குவித்து வருகிறது.

இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா ஆகியோர் இணைந்திருக்கும் இப்படத்தில் அனைவரையும்  ஆச்சர்யப்படுத்தும்விதமாக விஜய் சேதுபதியும் இணைந்திருக்கிறார். ஒரு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

லியான்  ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘மேயாத மான்’, ‘எல்.கே.ஜி.’ படப் புகழ் விது அயன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

KO1_1253

விஜய் சேதுபதியின் பங்களிப்பு பற்றி இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசும்போது, “இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் சிறப்புத் தோற்றம் என்பது, என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாப்பாத்திரம்தான். அவர் படத்தில் வரும் நேரம் படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக  இருக்கும்.

இப்படத்தின் திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிகர்களின் தேர்வுகள் முடிந்த பிறகு இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுக்கு ஏற்ற ஒருவரை தேடினோம். மிகப் பிரபலமாக இருக்கும் அதே நேரம், கேரக்டரில் எளிமையை நிஜத்தை பிரதிபலிக்க வேண்டும். இறுதியாக அசோக் செல்வன் மூலம் விஜய் சேதுபதியிடம் கதையைச் சொல்லி, அவரது கேரக்டர் பற்றி விவரித்தேன். உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டு எங்களை வாழ்த்தினார்.

KO1_1181

இந்தக் கேரக்டர் படத்தில் வருவது சிறிது நேரமாக இருக்கலாம். ஆனால் ரசிகர்கள் மனதில் மிக நெருக்கமாக உணரக் கூடியதாக இருக்கும். சினிமாவில் பெரு வெற்றிகள் மூலம்  தமிழக மக்களின் அன்பை அள்ளியிருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி எங்கள் படத்தில் இணைந்ததில், மொத்த படக் குழுவுக்கும் மகிழச்சி. அவருக்கு இத்தருணத்தில்  நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

‘ஓ மை கடவுளே’ திரைப்படம் இன்றைய நகர்ப்புற மேல்தர வர்க்கத்து காதலை இயல்பாக சொல்லும்  காதல், காமெடிப் படமாகவும் இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது படத்தின் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிந்து படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் இசை மற்றும் பட வெளியீடு தேதிகள்  மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்…” என்றார்.

Our Score